Friday, June 17, 2011

சமச்சீர் கல்விக்குழுவில் தனியார் பள்ளி முதலாளிகளை நியமித்த தமிழக அரசு!

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, சமச்சீர் கல்வி திட்ட ஆய்வு குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் மாற்றம் வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

சமச்சீர்க் கல்வி பற்றி முடிவெடுக்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வியாளர்கள் என்ற பிரிவில் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் ஜெயதேவும், பத்மாசேஷாத்திரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதியும் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சமச்சீர்க் கல்வி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுபற்றி முடிவெடுப்பதற்காக அமைக்கப்படும் 9 பேர் கொண்ட குழுவில் கல்வியாளர்கள் இவரும் இடம் பெற வேண்டும் என்று ஆணையிட்டதன் நோக்கமே சமச்சீர்க் கல்வி பற்றிய அனைத்து அம்சங்களையும் அவர்கள் அறிந்திருப்பார்கள் என்பதுதான். அவர்கள் தம் கருத்துகளின் அடிப்படையில் சமச்சீர்க் கல்வி பற்றி 9 பேர் கொண்ட குழு சரியான முடிவுக்கு வர இயலும் என்ற நோக்குடன்தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்தது.

ஆனால், கல்வியாளர்கள் என்ற பெயரில் சமச்சீர்க் குழுவில் அமர்த்தப்பட்ட இருவரும் சென்னையிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் இரண்டு பள்ளிகளின் முதலாளிகள் ஆவர். கல்வியாளர் என்பதற்கான எந்த வரையறையுமே இவர்களுக்கு பொருந்தாது. லட்சக்கணக்கில் நன்கொடையும் கட்டணமும் வாங்கி பள்ளிகளை நடத்தும் இவர்களுக்கு, தரமான கல்வி கற்க ஏழைகள் படும் பாடு குறித்து எதுவும் தெரியாது.

அதுமட்டுமின்றி சமச்சீர்க் கல்வி முறை பிரபலமடைந்தால் தனியார் பள்ளிகளுக்கு உள்ள வரவேற்பு போய்விடும் என்ற நிலையில் இவர்கள் எந்த அளவிற்கு நடுநிலையோடு செயல்படுவார்கள் என்பது ஐயமே.

சமச்சீர்க் கல்வி முறை பற்றி கரைத்து குடித்த எத்தனையோ கல்வியாளர்கள் தமிழகத்தில் இக்கும் போது, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் இருவரையும் குழுவில் உறுப்பினர்களாக அமர்த்தியது வியப்பளிக்கிறது.

தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வி முறையை கொண்டுவந்துவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

சமச்சீர்க் கல்வி தொடர்பான சிக்கலில் தமிழக அரசு காட்டிவரும் பிடிவாதத்தால் மாணவ, மாணவியர் இதுவரை எவ்வளவோ பாதிப்புகளை எதிர்கொண்டுவிட்டனர். எனவே இந்த விசயத்தில் தமிழக அரசு அதன் சார்பு போக்கை கைவிட்டுவிட்டு, நடுநிலையை கடைபிடிக்க வேண்டும். மாணவர்களின் நலன் சம்மந்தபட்ட 9 பேர் குழுவிலிருந்து தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கிவிட்டு, சமச்சீர்க் கல்வி முறை பற்றி நன்கறிந்த கல்வியாளர்களை உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்துவதாக ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நன்றி தினமணி 18.06.2011

பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அரசுடமை ஆக்கவேண்டும்: ராமதாஸ்

பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அவசர சட்டத்தின் மூலம் அரசுடமை ஆக்கவேண்டும் என்று பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறினார்.

தமிழக மாணவர் சங்கம் சார்பில் தனியார் பள்ளி, கல்லூரிகளின் அதிகப்படியான கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை மெமோரியல் ஹால் முன்பு 17.06.2011 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய ராமதாஸ்,

காமராஜர் ஆட்சிக் காலத்தில் அரசு பள்ளிகளில் படித்தவர்கள்தான் ஜனாதிபதிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், வேறு பல உயரிய பொறுப்புகளுக்கும் வந்துள்ளனர்.

காமராஜரின் ஆட்சிக்குப் பிறகுதான் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உருவாகின. ஏழைக்கு, பணக்காரர்களுக்கு என்று கல்வி பிரிக்கப்பட்டது. கல்விக் கட்டண கொள்ளைக்குத் துணைபோனவர்கள் ஆட்சியாளர்கள் தான்.

தமிழ்நாட்டில் தர்ம சிந்தனையோடு லாப நோக்கம் இல்லாமல் கல்வி நிறுவனங்கள் நடத்துகிறோம் என்று ஒருவர்கூட சொல்ல முடியாத நிலை இருக்கிறது.

இப்போது நடைபெறும் கட்டணக் கொள்ளையைத் தடுக்க ஒரே வழி வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அவசர சட்டத்தின் மூலம் அரசுடமை ஆக்கவேண்டும். அனைவருக்கும் தரமான கல்வியையும், கட்டணம் இல்லாத கல்வியையும் அரசே கட்டாயம் கொடுக்க வேண்டும் என்றார்.

நன்றி நக்கீரன்.காம்

Wednesday, June 15, 2011

அரசு தொடக்கப் பள்ளியில் கல்வி கற்கும் ஆட்சியர் மகள்!

ஈரோடு மாவட்ட ஆட்சியராக அண்மையில் பொறுப்பேற்றார் ஆர்.ஆனந்தகுமார். இதற்கு முன் தருமபுரி மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்தார். இவர் மனைவி ஸ்ரீவித்யா. கோபிகா, தீபிகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ஸ்ரீவித்யா தருமபுரி அரசு மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றி வருகிறார். மூத்த மகள் கோபிகா தருமபுரியில் ஒரு மெட்ரிக் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்தார். தற்போது ஈரோடு குமலன்குட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது மகளை 2ம் வகுப்பில் ஆட்சியர் சேர்த்துள்ளார்.

குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மகளுடன் புதன்கிழமை காலை சென்ற ஆட்சியர், தனது மகளை 1ம் வகுப்பில் சேர்ப்பதாக தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார். எனினும் கோபிகாவை 2-ம் வகுப்பில் சேர்த்துக் கொண்டனர்.

கூலித் தொழிலாளி கூட தங்களது குழந்தைகளுக்கு ஆங்கில அறிவு கிடைக்க வேண்டும் என்ற ஆவலில் மெட்ரிக் பள்ளிகளிலும் பெரும் பணக்காரர்களின் குழந்தைகள் படிக்கும் பிரபலமான தனியார் பள்ளிகளிலும் சேர்க்கின்றனர்.

ஆனால் மாவட்ட ஆட்சியர் ஒருவர் தனது மகளை ஏழைக் குழந்தைகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்ததன் மூலம், தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசு பள்ளிகள் தரம் வாய்ந்தவை என்பதை உணர வைத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.ஜெ.சிரு தன் மனைவியை பிரசவத்துக்கு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இப்போது ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார் தன் மகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார் இத்தகைய செயல்கள் மூலம் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மற்ற அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் வழிகாட்டியாக உள்ளனர்.

நன்றி தினமணி 16.06.2011



இந்தக் கருத்து எப்படி இருக்கு?


“அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், கல்வித்துறையில் பணிபுரியும் அரசு ஊழியர்களும், கல்வித்துறை அமைச்சரும் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வைக்க வேண்டும்“ என்ற ஆணையை அரசு வெளியிட்டால் தனியார் பள்ளிகளின் பகல் கொள்ளையையும் கல்வி வியாபாரத்தையும் ஒழித்துவிடலாம்.

Tuesday, June 14, 2011

ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை, ஜூன் 14: கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.) மூலம் ஆசிரியர்களைக் கொண்டு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இட ஒதுக்கீட்டுக்காகவும், சமூக நீதிக்காகவும் எண்ணற்ற போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது. தமிழகத்தில் 69 சதவீதமாக உள்ள இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாகக் குறைக்க சில சக்திகள் முயன்றபோது அதனைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் வரை சென்று பா.ம.க. போராடியது.

தமிழகத்தில் ஓராண்டுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு நீடிக்கும். அதற்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் இட ஒதுக்கீட்டின் அளவை இறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இந்தக் கெடு வரும் ஜூலை 12-ம் தேதி முடிவடைய இருக்கும் நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி கடந்த அக்டோபர் 13-ம் தேதி 27 சமுதாய அமைப்புகளின் தலைவர்களுடன் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் மனு அளித்தோம். மத்திய அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த இருப்பதால், அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் மூலம் நடத்தப்படாமல் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பின் நோக்கம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களை கண்டறிவதுதான் எனவும், ஜாதி விவரங்களை தெரிவிப்பது கட்டாயமில்லை எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, இந்தக் கணக்கெடுப்பால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை.

இந்தச் சூழலில் சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டையும், மக்களின் உரிமையையும் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் ஆசிரியர்களைக் கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் ரூ. 10 கோடி வரைதான் செலவாகும். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி தினமணி 15.06.2011

Wednesday, June 8, 2011

தமிழினத்திற்கு விடிவு தேடித் தரும் தீர்மானம் – சீமான்

தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியென்றும், சிறிலங்க அரசிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை.

ஈழத் தமிழினத்தை திட்டமிட்டு இனப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவை போர்க் குற்றவாளி என்றும், இன்றளவும் தமிழின அழிப்பில் ஈடுபட்டுவரும் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை நாம் தமிழர் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

சிங்கள பெளத்த இனவாத அரசின் தமிழின அழிப்பிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு, கண்ணியமிக்க, சமவுரிமையுடைய வாழ்வைப் பெறுவதற்காக கடந்த அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக போராடிவரும் ஈழத் தமிழினத்தின் விடுதலை வரலாற்றில் தமிழக சட்டப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஒரு திருப்பு முனையாகும். அதற்காக பெரும்பான்மை பலத்துடன் 3வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கும், தீர்மானத்திற்கு ஆதரவாக நின்ற சட்டப் பேரவையில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் நாம் தமிழர் கட்சி இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த, பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களில் நிபுணத்துவம் வாய்ந்த மூவர் குழு அளித்த அறிக்கையின் பரிந்துரைத் தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்க முன்வராத சிறிலங்க அரசிற்கும், அந்த அறிக்கையின் மீது ஆதரவு நிலையெடுக்காத இந்திய அரசிற்கும் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம், தமிழினத்தின் சார்பாக விடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான, ராஜதந்திர ரீதியிலான நியாயமான அழுத்தமாகும்.


‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, ஈழத் தமிழினத்திற்கு எதிரான திட்டமிட்ட இனப் படுகொலைப் போரைத் தொடங்கி, இந்தியா உள்ளிட்ட பன்னாட்டு ஆதரவுடன் இரண்டரையாண்டுக் காலம் நடத்தப்பட்ட அந்தப் போரில் மட்டும் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அமைத்த கற்ற பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு ஆணையத்தின் (Lessons Learnt and Reconciliation Commission – LLRC) முன்னின்று ஈழத்தில் நடந்த மானுடப் பேரழிவு குறித்து தனது சாட்சியத்தை அளித்த மதிப்பிற்குரிய மன்னார் மாவட்டப் பேராயர் ராயப்பு ஜோசஃப் அவர்கள், இந்தப் போருக்கு முன் இருந்த வன்னி பகுதி மக்கள் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், போர் முடிந்த பிறகு வன்னி முள்வேலி முகாம்களுக்கு வந்த சேர்ந்த மக்களின் எண்ணிக்கை 1,46,679 பேர் குறைவாக உள்ளனர் என்றும், அவர்கள் கொல்லப்பட்டோ அல்லது காணாமல்போய் உள்ளவர்களாகவோ இருக்கலாம் என்று எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்தார்.

உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்த உண்மையை இன்று வரை சிறிலங்க அரசு மறுக்கவில்லை. ஆனால், அதுபற்றி இன்று வரை எந்த வினாவையும் சிறிலங்க அரசை நோக்கி இந்திய அரசு எழுப்பவில்லை. இது இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையில் அது உடந்தையாக நின்றது என்பதற்கான மற்றுமொருச் சான்றாகும்.

இந்திய அரசின் மெளனமே, சிறிலங்க அரசு திட்டமிட்டுச் செய்த மாபாதகச் செயலை இனப் படுகொலை என்று சர்வதேசம் கூற முன்வராததற்குக் காரணமாகும். எனவேதான் தமிழின அழிப்பு என்பது போர்க் குற்றம் என்ற அளவோடு நி்ற்கிறது. இந்த நிலையில்தான், தமிழினத்திற்கு எதிராக சிறிலங்க அரசு போர்க் குற்றம் செய்துள்ளது என்பது நம்பகமான குற்றச்சாற்று என்று ஐ.நா.நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்தது. அந்த அடிப்படையிலேயே, ராஜபக்சவை போர்க் குற்றவாளி என்று அறிவிக்கக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இனப் படுகொலைப் போர் முடிந்து வன்னி முகாம்களில் வந்தேறிய சற்றேறக்குறைய 3 இலட்சம் தமிழர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அவர்களுடைய வாழ்விடங்களில் குடியமர்த்தப்படவில்லை. ஏனெனில் தமிழர்கள் வாழ்ந்த பூமியில் சிங்களர்கள் குடியேற்றம் நடைபெறுகிறது. அவர்களுடைய காணிகள் சிங்களர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களை நிரந்தரமாக ஒடுக்குவதற்கு, அவர்களின் பாரம்பரிய பூமியின் பெரும்பகுதியை இராணுவப் பகுதிகளாக (Cantonments) சிங்கள இனவெறி அரசு அறிவித்துள்ளது. வாழ்ந்த இல்லங்கள் போரினால் சிதைக்கப்பட்டு, வாழ்க்கைக்கு ஆதாரமான காணிகள் பறிக்கப்பட்டு, பிழைக்க வழியேதுமின்றி, ஈழத் தமிழினம் சிதறடிக்கப்பட்டு, சின்னபின்னமாக்கப்பட்ட நிலையில், சிறிலங்க அரசை மண்டியிடச் செய்ய வேண்டுமெனில், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடையை கடைபிடிப்பதே ஒரே வழியாகும்.

அந்த புரிந்துணர்வோடு தமிழக சட்டப் பேரவை இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை அறிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது ராஜதந்திர ரீதியில் மிகச் சாமர்த்தியமான தீர்மானமாகும்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்த தமிழ் மக்கள் எதை மிகவும் ஆவலாக எதிர்பார்த்தார்களோ அந்த விஷயத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், அனைத்துக் கட்சிகளின் பேராதரவோடு நிறைவேற்றியுள்ளார்.

இதற்காக தமிழினம் அவருக்கும், தமிழக சட்டப் பேரவைக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் என்றென்றும் நன்றி தெரிவிக்கும் என்பது மட்டுமின்றி, இத்தீர்மானம் தமிழினம் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு ஒரு புத்துணர்வை தந்துள்ளது என்பதை நன்றியுடன் நாம் தமிழர் கட்சி தெரிவித்துக்கொள்கிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, காணாமல் போன மீனவர்கள் 4 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் தெரிவித்ததற்கும் நாம் தமிழர் கட்சி நன்றி கூறுகிறது.

நன்றி தமிழ்வின்.காம்

இலங்கை பிரச்சனையில் டெல்லியில் முகாமிட்டு வலியுறுத்த வேண்டும்: ஜெயலலிதாவுக்கு தங்கர்பச்சான் கோரிக்கை

இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க டெல்லியில் முகாமிட்டு வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மூன்று லட்சம் தமிழர்களின் உயிரிழப்பும் நாற்பதாயிரம் போராளிகளின் முப்பது ஆண்டுகளுக்கு மேலான போராட்டமும் வீணாகிப் போனதே என தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தவித்திருந்த வேளையில், ஐ.நா.சபை விசாரணைக் குழுவின் போர்க்குற்ற அறிக்கை நம்பிக்கையை விதைத்தது.

இலங்கைத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்துக்கு தண்டனையாக கடந்த ஆட்சி தோல்வி கண்டு மக்களின் புதிய ஆட்சி மலர்ந்துள்ளது. தேர்தல் முடிவு வரும் முன்னரே புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்பவர்கள் முதல் சட்டப்பேரவைத் தொடரிலேயே இலங்கை அரசுக்கு பொருளாதாரத் தடையை விதித்து தீர்மானம் நிறைவேற்றி இலங்கை ஆட்சியாளர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என எனது கோரிக்கையை வெளிப்படுத்தியிருந்தேன்.

என்னைப் போன்றோரின் வேண்டுகோள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் உலகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் எப்போதும் இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். உலகின் ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பையும் தீர்த்து வைக்கும்படியான தீர்மானம் நிறைவேறக் காரணமாக இருந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் தமிழர்கள் சார்பில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்கு அடுத்த கட்டமாக முதல்வர், டெல்லியில் முகாமிட்டு அனைத்துக் கட்சியினரையும் கூட்டி இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் என அந்த அறிக்கையில் தங்கர்பச்சான் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி நக்கீரன்.காம்

சமச்சீர் கல்வி வராத வரை சமூகத்தில் முன்னேற்றம் ஏற்படாது: ராமதாஸ்

சமச்சீர் கல்வி வராத வரை இந்த சமூகத்தில் முன்னேற்றம், மாற்றம் ஏற்படாது என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் முன்னாள் எம்.எல்.ஏ., கலிவரதன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ்,

நம் நாட்டில் ஏழை, பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு என தனித்தனியாக படிப்புகள் உள்ளது. இதில் பணத்தை கொடுத்தால் தான், தரமான கல்வியை பெறமுடியும் என்ற நிலை நிலவுகிறது. பணக்காரர்கள் படிக்கும் சி.பி.எஸ்.சி., படிப்பு கிராமப்புறத்தில் உள்ள ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும். அதே பள்ளியை அரசு சார்பில் கிராமத்தில் துவக்கி தரமான கல்வியை வழங்க வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம். பணக்காரர்களுக்கு மட்டும் தேர்தலில் கூடுதலான ஓட்டுக்களா உள்ளது? அவர்களுக்கும் ஒரே ஓட்டு தான். அதுபோல் அனைவருக்கும் சமமான கல்வி கட்டாயம் வேண்டும்.

ராமதாஸ் மட்டும் தான் இதுபற்றி பேசிவருகிறான். குடிக்க கூடாது என கூறுபவனும் இந்த ராமதாஸ் மட்டும் தான். சமச்சீர் கல்வி என்றால், யார் என்ன படிக்க விரும்பினாலும் அவர்களுக்கு கட்டாயமாக அந்த கல்வியை கொடுக்க வேண்டும். தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். கட்டணம் இல்லாத கல்வி வேண்டும். இதனை செயல் படுத்த முடியும். அதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. சமச்சீர் கல்வி வராத வரை இந்த சமூகத்தில் முன்னேற்றம், மாற்றம் ஏற்படாது என்றார்.

நன்றி நக்கீரன்.காம்

உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்கு உவப்பான நம்பிக்கையூட்டும் செய்தியாகும்: கொளத்தூர் மணி

இராஜபக்க்ஷே மீது போர்க்குற்றவாளி என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், இந்தியா இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்றும், தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானம் தமிழர்களின் ஒருமித்த உணர்வைப் பிரதிபலிக்கிறது, இந்தத் தீர்மானத்தை தமிழக முதல்வரே முன் மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றச் செய்ததை பெரியார் திராவிடர் கழகம் பாராட்டி வரவேற்கிறது.

ஈழத்தமிழர் பிரச்சனையில் சரியான பார்வையோடு தமிழக முதல்வர் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்கு உவப்பான நம்பிக்கையூட்டும் செய்தியாகும்,.

தமிழ்நாட்டு சிறப்புமுகாம்களில் பலஆண்டுகளாக விசாரணை ஏதும்இன்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள் தங்களை உறவினர்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு நீண்ட காலமாகப் போராடி வருகிறார்கள், கடந்த ஆட்சியில் கண்டுகொள்ளப்படாத இந்த நியாயமான, மனிதாபிமானக் கோரிக்கையைப் பரிசீலித்து நல்ல முடிவை எடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறோம்.

Friday, June 3, 2011

மதுக்கடைகளை மூடவேண்டும்: ராமதாஸ்

மது இல்லாத மாநிலத்தை எப்படி உருவாக்குவது? என்று மராட்டிய மாநிலம் வழிகாட்டியிருக்கிறது. மராட்டியத்தில் இனி 25 வயதிற்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்றும், ஏதேனும் ஒரு ஊரில் 25 விழுக்காடு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் அங்குள்ள மதுக்கடைகள் மூடப்படும் என்றும் அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இவை வரவேற்கப்படவேண்டியவை மட்டுமின்றி மற்ற மாநிலங்களால் பின்பற்றப்பட வேண்டியவை ஆகும்.

மதுவிலக்கு கொள்கையைப் பொறுத்தவரை மராட்டிய அரசு தொடக்கத்திலிருந்தே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வருகிறது. 1949ஆம் ஆண்டு மும்பை மதுவிலக்கு சட்டப்படி அம்மாநிலத்தில் ஏதேனும் பகுதியில் வசிக்கும் பெண்களில் 50 விழுக்காட்டினர் எதிர்ப்புத் தெரிவித்தால் அங்குள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

இப்போது காந்தியவாதி அன்னா ஹசாரேவின் கோரிக்கையை ஏற்று ஒட்டுமொத்த மக்களில் 25 விழுக்காட்டினர் எதிர்ப்புத் தெரிவித்தாலே மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது பராட்டப்பட வேண்டிய முடிவாகும்.

ஆனால், தமிழகத்திலோ நீதிமன்றம் உத்தரவிட்டபிறகும் குடியிருப்புப் பகுதிகளிலுள்ள மதுக்கடைகள் மூடப்படுவதில்லை. மராட்டியத்தில் 25 வயதிற்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 13 வயது பள்ளி மாணவர்கள் கூட மது குடிப்பதாக செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது. தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றதுமே முழு மதுவிலக்கை கொண்டுவரும்படி நான் வலியுறுத்தி இருந்தேன். அதன் முதல் படியாக மராட்டிய மாநிலத்தில் இருப்பது போல, பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் பகுதிகளில் மதுக்கடைகளை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 25 வயதிற்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும். பொது நிகழ்ச்சிகளில் மது பரிமாறப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். நாள்தோறும் காலை 10 மணி முதல்ர பிற்பகல் 1 மணிவரை 3 மணி நேரத்திற்கு மட்டுமே மதுக்கடைகளை திறந்திருக்க வேண்டும். இதையும் படிப்படியாக குறைத்து குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையால் மதுக்கடை ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களை படிப்படியாக அரசு ஊழியர்களாக்கி மற்ற துறைகளில் பணியமர்த்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றி நக்கீரன்.காம்

Wednesday, June 1, 2011

25 வயதுக்கு கீழ் மது அருந்தினால் அபராதம்

மராட்டியத்தில் தற்போது 21 வயதிலிருந்து மது பானங்கள் வாங்க, குடிக்க சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. இந்த நிலையில், மராட்டியத்தில் மது அடிமைக்கு எதிராக மாநில அரசு புதிதாக கொள்கை ஒன்றை கொண்டு வர உள்ளது.

இது தொடர்பாக மாநில மந்திரிசபை கூட்டம் முதல் அமைச்சர் பிரிதிவிராஜ் சவான் தலைமையில் மும்பையில் நடந்தது.

இந்த கூட்டத்தில், 25 வயதுக்குட்பட்டோர் மது பானம் வாங்குவதும், குடிப்பதும் சட்டவிரோதமான குற்றம் என்னும் அரசின் புதிய முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் பீர் வாங்குவதற்கும், பருகுவதற்கும் வயது வரம்பு 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொது விழாக்களில், நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் பரிமாறவும் அரசு தடை விதித்து விட்டது. இனி 25 வயதுக்குட்பட்டோர் மராட்டியத்தில் மதுபானங்கள் பருகினால் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் கல்வி நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள், நெடுஞ்சாலைகளுக்கு ஒரு கி.மீ. தொலைவில் மதுக்கடைகள் இருக்க அனுமதி இல்லை. ஒரு மாநகராட்சி வார்டு பகுதியில் மதுக்கடையை மூடுமாறு அதில் குடியிருப்போரில் 25 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மூடிவிட வேண்டும்.

தனி நபர் வாங்குகிற மது பாட்டில்களின் அளவுக்கும் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

மதுபானங்கள் வாங்குவதற்கும், பருகுவதற்கும் 25 வயது ஆகி இருக்க வேண்டும் என்ற வரம்பு டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் அமலில் உள்ளது. இப்போது மராட்டியமும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: நக்கீரன்.காம்



நமது தமிழ்நாடு அரசும், புதுச்சேரி அரசும் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருங்காலத் தலைமுறையினரை காப்பாற்றவேண்டும்.