Wednesday, October 30, 2013

Thursday, January 3, 2013

வாழ்த்துக்கள்

இனிய
புத்தாண்டு
பொங்கல்
நல் வாழ்த்துக்கள்

Monday, January 30, 2012

காந்தியார் படுகொலை நாள்!

சனவரி - 30
காந்தியார் படுகொலை நாள்

Friday, June 17, 2011

சமச்சீர் கல்விக்குழுவில் தனியார் பள்ளி முதலாளிகளை நியமித்த தமிழக அரசு!

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, சமச்சீர் கல்வி திட்ட ஆய்வு குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் மாற்றம் வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

சமச்சீர்க் கல்வி பற்றி முடிவெடுக்க உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் கல்வியாளர்கள் என்ற பிரிவில் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் ஜெயதேவும், பத்மாசேஷாத்திரி பாலபவன் பள்ளிகளின் முதல்வர் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதியும் சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சமச்சீர்க் கல்வி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுபற்றி முடிவெடுப்பதற்காக அமைக்கப்படும் 9 பேர் கொண்ட குழுவில் கல்வியாளர்கள் இவரும் இடம் பெற வேண்டும் என்று ஆணையிட்டதன் நோக்கமே சமச்சீர்க் கல்வி பற்றிய அனைத்து அம்சங்களையும் அவர்கள் அறிந்திருப்பார்கள் என்பதுதான். அவர்கள் தம் கருத்துகளின் அடிப்படையில் சமச்சீர்க் கல்வி பற்றி 9 பேர் கொண்ட குழு சரியான முடிவுக்கு வர இயலும் என்ற நோக்குடன்தான் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை அளித்தது.

ஆனால், கல்வியாளர்கள் என்ற பெயரில் சமச்சீர்க் குழுவில் அமர்த்தப்பட்ட இருவரும் சென்னையிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் இரண்டு பள்ளிகளின் முதலாளிகள் ஆவர். கல்வியாளர் என்பதற்கான எந்த வரையறையுமே இவர்களுக்கு பொருந்தாது. லட்சக்கணக்கில் நன்கொடையும் கட்டணமும் வாங்கி பள்ளிகளை நடத்தும் இவர்களுக்கு, தரமான கல்வி கற்க ஏழைகள் படும் பாடு குறித்து எதுவும் தெரியாது.

அதுமட்டுமின்றி சமச்சீர்க் கல்வி முறை பிரபலமடைந்தால் தனியார் பள்ளிகளுக்கு உள்ள வரவேற்பு போய்விடும் என்ற நிலையில் இவர்கள் எந்த அளவிற்கு நடுநிலையோடு செயல்படுவார்கள் என்பது ஐயமே.

சமச்சீர்க் கல்வி முறை பற்றி கரைத்து குடித்த எத்தனையோ கல்வியாளர்கள் தமிழகத்தில் இக்கும் போது, அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் இருவரையும் குழுவில் உறுப்பினர்களாக அமர்த்தியது வியப்பளிக்கிறது.

தமிழ்நாட்டில் சமச்சீர்க் கல்வி முறையை கொண்டுவந்துவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

சமச்சீர்க் கல்வி தொடர்பான சிக்கலில் தமிழக அரசு காட்டிவரும் பிடிவாதத்தால் மாணவ, மாணவியர் இதுவரை எவ்வளவோ பாதிப்புகளை எதிர்கொண்டுவிட்டனர். எனவே இந்த விசயத்தில் தமிழக அரசு அதன் சார்பு போக்கை கைவிட்டுவிட்டு, நடுநிலையை கடைபிடிக்க வேண்டும். மாணவர்களின் நலன் சம்மந்தபட்ட 9 பேர் குழுவிலிருந்து தனியார் பள்ளி முதலாளிகளை நீக்கிவிட்டு, சமச்சீர்க் கல்வி முறை பற்றி நன்கறிந்த கல்வியாளர்களை உறுப்பினர்களாக அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்துவதாக ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நன்றி தினமணி 18.06.2011

பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அரசுடமை ஆக்கவேண்டும்: ராமதாஸ்

பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அவசர சட்டத்தின் மூலம் அரசுடமை ஆக்கவேண்டும் என்று பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறினார்.

தமிழக மாணவர் சங்கம் சார்பில் தனியார் பள்ளி, கல்லூரிகளின் அதிகப்படியான கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை மெமோரியல் ஹால் முன்பு 17.06.2011 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய ராமதாஸ்,

காமராஜர் ஆட்சிக் காலத்தில் அரசு பள்ளிகளில் படித்தவர்கள்தான் ஜனாதிபதிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், வேறு பல உயரிய பொறுப்புகளுக்கும் வந்துள்ளனர்.

காமராஜரின் ஆட்சிக்குப் பிறகுதான் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உருவாகின. ஏழைக்கு, பணக்காரர்களுக்கு என்று கல்வி பிரிக்கப்பட்டது. கல்விக் கட்டண கொள்ளைக்குத் துணைபோனவர்கள் ஆட்சியாளர்கள் தான்.

தமிழ்நாட்டில் தர்ம சிந்தனையோடு லாப நோக்கம் இல்லாமல் கல்வி நிறுவனங்கள் நடத்துகிறோம் என்று ஒருவர்கூட சொல்ல முடியாத நிலை இருக்கிறது.

இப்போது நடைபெறும் கட்டணக் கொள்ளையைத் தடுக்க ஒரே வழி வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அவசர சட்டத்தின் மூலம் அரசுடமை ஆக்கவேண்டும். அனைவருக்கும் தரமான கல்வியையும், கட்டணம் இல்லாத கல்வியையும் அரசே கட்டாயம் கொடுக்க வேண்டும் என்றார்.

நன்றி நக்கீரன்.காம்

Wednesday, June 15, 2011

அரசு தொடக்கப் பள்ளியில் கல்வி கற்கும் ஆட்சியர் மகள்!

ஈரோடு மாவட்ட ஆட்சியராக அண்மையில் பொறுப்பேற்றார் ஆர்.ஆனந்தகுமார். இதற்கு முன் தருமபுரி மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்தார். இவர் மனைவி ஸ்ரீவித்யா. கோபிகா, தீபிகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ஸ்ரீவித்யா தருமபுரி அரசு மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றி வருகிறார். மூத்த மகள் கோபிகா தருமபுரியில் ஒரு மெட்ரிக் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்தார். தற்போது ஈரோடு குமலன்குட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது மகளை 2ம் வகுப்பில் ஆட்சியர் சேர்த்துள்ளார்.

குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மகளுடன் புதன்கிழமை காலை சென்ற ஆட்சியர், தனது மகளை 1ம் வகுப்பில் சேர்ப்பதாக தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார். எனினும் கோபிகாவை 2-ம் வகுப்பில் சேர்த்துக் கொண்டனர்.

கூலித் தொழிலாளி கூட தங்களது குழந்தைகளுக்கு ஆங்கில அறிவு கிடைக்க வேண்டும் என்ற ஆவலில் மெட்ரிக் பள்ளிகளிலும் பெரும் பணக்காரர்களின் குழந்தைகள் படிக்கும் பிரபலமான தனியார் பள்ளிகளிலும் சேர்க்கின்றனர்.

ஆனால் மாவட்ட ஆட்சியர் ஒருவர் தனது மகளை ஏழைக் குழந்தைகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்ததன் மூலம், தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசு பள்ளிகள் தரம் வாய்ந்தவை என்பதை உணர வைத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.ஜெ.சிரு தன் மனைவியை பிரசவத்துக்கு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இப்போது ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார் தன் மகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார் இத்தகைய செயல்கள் மூலம் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மற்ற அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் வழிகாட்டியாக உள்ளனர்.

நன்றி தினமணி 16.06.2011



இந்தக் கருத்து எப்படி இருக்கு?


“அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், கல்வித்துறையில் பணிபுரியும் அரசு ஊழியர்களும், கல்வித்துறை அமைச்சரும் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வைக்க வேண்டும்“ என்ற ஆணையை அரசு வெளியிட்டால் தனியார் பள்ளிகளின் பகல் கொள்ளையையும் கல்வி வியாபாரத்தையும் ஒழித்துவிடலாம்.

Tuesday, June 14, 2011

ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை, ஜூன் 14: கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.) மூலம் ஆசிரியர்களைக் கொண்டு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இட ஒதுக்கீட்டுக்காகவும், சமூக நீதிக்காகவும் எண்ணற்ற போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது. தமிழகத்தில் 69 சதவீதமாக உள்ள இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாகக் குறைக்க சில சக்திகள் முயன்றபோது அதனைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் வரை சென்று பா.ம.க. போராடியது.

தமிழகத்தில் ஓராண்டுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு நீடிக்கும். அதற்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் இட ஒதுக்கீட்டின் அளவை இறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இந்தக் கெடு வரும் ஜூலை 12-ம் தேதி முடிவடைய இருக்கும் நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி கடந்த அக்டோபர் 13-ம் தேதி 27 சமுதாய அமைப்புகளின் தலைவர்களுடன் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் மனு அளித்தோம். மத்திய அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த இருப்பதால், அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தின் மூலம் நடத்தப்படாமல் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பின் நோக்கம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களை கண்டறிவதுதான் எனவும், ஜாதி விவரங்களை தெரிவிப்பது கட்டாயமில்லை எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, இந்தக் கணக்கெடுப்பால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை.

இந்தச் சூழலில் சமூக நீதியின் பிறப்பிடமான தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டையும், மக்களின் உரிமையையும் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் ஆசிரியர்களைக் கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் ரூ. 10 கோடி வரைதான் செலவாகும். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி தினமணி 15.06.2011