Monday, April 19, 2010

கட்டடம் கட்ட ஏரியையும் குளங்களையும் அரசு தேர்ந்தெடுப்பது ஏன்?

கோவையில் அம்மன்குளம் என்ற இடத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுவந்த 48 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி ஒரு பக்கமாகச் சரிந்து புதைந்ததைத் தொடர்ந்து தற்போது அங்கு பணிகள் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் புதைந்து சரியாமல் இருக்க, அக்கட்டத்தின் செங்கல்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளன.

இந்த அம்மன் குளத்தில் மொத்தம் 936 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வந்தது என்பதும், மற்ற அடுக்குமாடி தொகுப்புகளுக்கு என்ன நிலை ஏற்படும் என்பதும் இனி மண்ஆய்வுகளுக்குப் பிறகுதான் தெரியவரும் என்று கூறப்படுகிறது. மண்ஆய்வுகள் முறைப்படி ஒரு பிரசித்திபெற்ற பொறியியல் கல்லூரியால் எடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகே இந்த இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும் குடிசை மாற்று வாரியம் தெரிவித்தாலும், எதற்காக அம்மன்குளத்தைத் தேர்வு செய்தார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

அதிமுக ஆட்சியில் இந்த இடம் நிராகரிக்கப்பட்டதாக முன்னாள் வீட்டுவசதித் துறை அமைச்சர் செ.ம.வேலுசாமி சட்டப்பேரவையில் குறிப்பிட்டுள்ளார். அம்மன்குளம் என்கிற பெயரிலேயே குளம் உள்ளது. ஆனாலும் அமைச்சர் இது ஏரிப் புறம்போக்கு அல்ல, நத்தம் புறம்போக்கு என்று அவையில் தெரிவித்திருக்கிறார். 15 ஆண்டுகளாக அந்தக் குளத்தில் தண்ணீர் தேங்கவில்லை என்பதால் அந்தக் குளத்தை நத்தம் புறம்போக்கு என மாற்றிவிட்டதாக அரசு சொல்வது நியாயமானதாகத் தெரியலாம். ஆனால், அந்தக் குளம் எப்போதுமே குளம்தான். மனிதர்களின் சுயநலத்தாலும், அதிகாரிகளின் ஆதரவாலும் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்துவிட்டதாலேயே, குளம் தன்னை நத்தம்புறம்போக்காக மாற்றிக்கொண்டுவிடுமா? எல்லா நீர்வழிகளையும் அடைத்துவிட்டால் எப்படி தண்ணீர் வந்து தேங்கும். அது நேரம் வரும்போது தன் இயல்பு நிலையைக் காட்டத்தானே செய்யும்? அதுதான் அங்கே நிகழ்ந்திருக்கிறது.

இந்த இடத்தைத் தேர்வு செய்து வெகு விரைவாக கட்டடங்களைக் கட்டி முடிக்க அவசரம் காட்டியதற்குக் காரணம், கோவையில் செம்மொழி மாநாட்டின்போது முதல்வரால் திறப்பு விழா செய்து, அவரால் பாராட்டப்பட வேண்டும் என்கிற ஆசைதான். ஆசை நியாயமானதாக இருக்கலாம். ஆனால் இந்த அவசரம் நியாயமில்லை. 936 குடும்பங்களின் உயிர்கள் இந்தக் குளத்தின் மீது குடியேற்றப்படுகிறது என்கிற உணர்வே இல்லாத அவசரத்தில் நியாயமே இல்லை.

நீர்ப்பிடிப்புப் பகுதி அல்லது ஏரி குளங்களில் வீடுகள் கட்டுவது கூடாது என்று நீதிமன்றம் தெளிவான உத்தரவைக் கொடுத்திருக்கிறது. இத்தகைய இடங்களில் வீடுகளைக் கட்டி, நீராதாரத்தைக் கெடுத்துவிட்டு, குடிநீருக்காகத் திட்டங்கள் போடுவது வீண் செலவு என்றும், நீதிமன்ற எதிர்ப்பையும் பொருள்படுத்தாமல், நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் நீராதாரங்களிலும் கட்டப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு, சாலை வசதி அளிப்பது நீதிமன்ற அவமதிப்பு என்றும்கூட, ஒரு மாவட்ட ஆட்சியரை நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.

அப்படியிருந்தும் ஏரி, குளங்களைத்தான் அதிகாரிகளும் அமைச்சர்களும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைக்கத் தேர்வு செய்கிறார்கள். ஏனென்றால், மற்ற தனியார் நிலங்களை கையகப்படுத்த முயன்றால் அவர்கள் வழக்கு தொடுப்பார்கள். வழக்கு முடிய காலதாமதமாகும். தங்களது பதவிக் காலத்தில் செயலைச் செய்து முடிக்க வேண்டுமானால், அரசு நிலங்கள்தான் தோதாக இருக்கின்றன. விளைவு? குளமெல்லாம் நத்தமாகிறது.

இந்த விவகாரத்தில் மிகவும் ஆச்சரியமான விஷயம், அவையில் அமைச்சர் சுப தங்கவேலன் கூறியதுதான்: கட்டடம் கட்டும் ஒப்பந்ததாரர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், புதிய இடத்தைக் காட்டினால் அங்கே இதே அடுக்குமாடி வீடுகளைக் கட்டிக் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், அம்மன்குளத்தில் கட்டிய பாதிவேலை முடிந்த கட்டடங்களை இடித்து விடுவதாகவும், இந்தக் கட்டடத்துக்காக செய்யப்பட்ட தொகையைக் கேளாமல் விட்டுவிடுவதாகவும் எழுதியிருக்கிறார் என்று அமைச்சர் கூறினார். அந்தக் கட்டடங்களின் புகைப்படங்களைப் பார்த்தாலே தெரியும். பாதிக்கும் மேற்பட்ட பணிகள் முடிந்துவிட்டன என்று. தன் மீது குற்றமில்லை, அரசு காட்டிய மண் மீதுதான் குற்றம் என்ற நிலையிலும், பல கோடி ரூபாயை இழக்க ஒரு ஒப்பந்ததாரர் முன்வருகிறார் என்றால் இந்தப் பணிவுக்குப் பின்னணியில் என்ன இருக்கிறது?

ஜவாஹர்லால் நேரு தேசிய ஊரக புனரமைப்பு திட்டத்தில் கட்டப்படும் பல லட்சம் வீடுகளில் மூன்றில் ஒரு பகுதி தனியார்-அரசு பங்கேற்பில் (பி.பி.பி)கட்டப்பட்டு வருகிறது. குடிசைவாசிகளுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்து, அவர்களையே அதற்கு உரியவர்களாக்கும் ராஜீவ் ஆவாஸ் யோஜனா கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, அத்திட்டத்தின் உள்அங்கமாக மேற்சொன்ன ஜவாஹர்லால் நேரு தேசிய ஊரக புனரமைப்பு திட்டத்தையும் சேர்த்திருக்கிறார்கள்.

இதற்காக மொத்தம் பத்து லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கவுள்ளது. நிகழாண்டில் இத்திட்டத்துக்காக ரூ. 1,270 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சரி பாதி வீடுகளை அரசு மற்றும் தனியார் பங்கேற்பில் (பிபிபி) கட்டுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் கட்டவுள்ள 9,600 வீடுகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பொறுப்பில் 3,840 வீடுகளை கட்டப்பட்டு வருவதாகச் செய்திகள் வருகின்றன. மற்ற வீடுகளை பிபிபி முறையில்தான் கட்டப்போகிறார்களா என்பது தெரியவில்லை.

கட்டும்போது சரிந்தால் வீழ்வது கட்டடம் மட்டும்தான். கட்டியபிறகு சரிந்தால், வீழ்வது ஏழைகளின் குடும்பமாக அல்லவா இருக்கும். வீடு கட்டுகிறோம் பேர்வழி என்று குளங்களை நத்தமாக்குவதுடன் நின்றுவிடாமல் மயானமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபடலாமா? ஏன் இந்த அவசரம்?

நன்றி: தினமணி 20.04.2010

Thursday, April 15, 2010

மஞ்சள் விருது!விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு “வாழும் புரட்சியாளர்” தலைமையில் வாழும் தலைவர்களுக்கு வாழ்ந்த தலைவர்களின் பெயரில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 14-ஆம் (சித்திரை 1) நாள் சிறப்பாக நடைபெற்றது. (இதற்கான விளம்பரங்கள் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தை அலங்கரித்தன. கூடவே தமிழகம்-புதுச்சேரியில் ஆங்காங்கே ஒருசில சலசலப்புகளும் ஒருசில கலவரங்களும் வந்தன.)

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் விருதுபெற்ற அனைவருக்கும் விருதும் ஐம்பதாயிரம் ரூபாய் பொற்கிழியும், நீலநிற பட்டாடையும் அணிவிக்கப்பட்டது. ஆனால் கருணாநிதிக்கு மட்டும் அம்பேத்கர் சுடர் என்று எழுதப்பட்ட ”மஞ்சள்” நிற பட்டாடை அணிவிக்கப்பட்டது.

இந்த “மஞ்கள் நிறம்” அம்பேத்கரை முதன்மைப்படுத்துவதற்காகவா அல்லது கருணாநிதியை முதன்மைப்படுத்துவதற்காகவா என்பது விளங்கவில்லை. இனிவரும் காலங்களில் விடுதலைச்சிறுத்தைகளால் வழங்கப்படும் “அம்பேத்கர் சுடர்” விருதுக்கு வழங்கப்படும் பட்டாடைகள் அனைத்தும் “மஞ்சள் நிறத்திலேயே” இருக்குமா என்றும் தெரியவில்லை. ஏனெனில் செயலலிதாவிற்குபிடித்த நிறம் “பச்சை”.


படம் உதவி: தினத்தந்தி

Tuesday, April 6, 2010

தாய்மொழி தெரியவில்லை என வெட்கம் இல்லாமல் சொல்லும் ஒரே இனம் தமிழ் இனம்தான்: தமிழருவி மணியன்

கொச்சைத் தமிழ் பேசினால் பச்சைத் தமிழ் செத்துவிடும் என்று தமிழ்ச் சிந்தனையாளர் தமிழருவி மணியன் கூறினார்.

கோவை அருகே கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் மன்றத் துவக்க விழாவில் அவர் பேசியது:

நல்ல அறிவே,​​ நல்ல ஒழுக்கம் என கிரேக்க சிந்தனையாளர் சாக்ரடீஸ் கூறினார்.​ அறிவு வேறு,​​ ஒழுக்கம் வேறு அல்ல.​ அறிவு இருக்கும் இடத்தில் ஒழுக்கம் இருக்க வேண்டும்.​ அறிவு இருந்து ஒழுக்கம் இல்லாவிட்டாலும்,​​ ஒழுக்கம் இருந்து அறிவு இல்லாவிட்டாலும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.​ உண்மையான அறிவு,​​ ஒழுக்கம் இருந்தால் தான் உள்ளத்தில் இன்பம் பிறக்கும்.

சிறந்த கருத்துகள் கிடைக்கும் இடத்தை தேடி இளைஞர்கள் செல்ல வேண்டும்.​ திரையரங்குகளுக்கு போவதால் எவ்வித பயனும் கிடைக்காது.​ ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளி என்றும் தமிழில் பேசுவோர் தற்குறி என்றும் சிலர் எண்ணுகின்றனர்.​ இளம்பெண்களை கவர,​​ இளைஞர்கள் ஆங்கிலத்தை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.

லத்தீன் மொழியில் பேசுவோர்,​​ எழுதுவோர்தான் அறிவாளி என ஒரு காலத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலேயர்கள் எண்ணினர்.​ ஆனால்,​​ இப்போது லத்தீன் மொழி செத்துவிட்டது.

உலகில் யூதர்களின் எண்ணிக்கை 1 சதவீதம்கூட இல்லை.​ ஆனால்,​​ அமெரிக்காவில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள்,​​ வங்கிகள் யூதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.​ உலகிலேயே சிறந்த அறிவாளியாகக் கருதப்படும் யூதர்கள்,​​ இஸ்ரேலில் தங்களது தாய்மொழியான ஹீப்ரூ மொழியில்தான் கல்வி கற்கின்றனர்.

தாய்மொழி தெரியவில்லை என வெட்கம் இல்லாமல் சொல்லும் ஒரே இனம் தமிழ் இனம்தான்.​ 60 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.​ ஆனால்,​​ இன்னும் முழுமை பெறவில்லை.​ தமிழகத்தில் இருக்கும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்.​ அதிகாரிகள் தமிழில் பேச முயற்சி செய்கின்றனர்.​ ஆனால்,​​ தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசுகின்றனர்.

உலகில் 6 ஆயிரம் மொழிகள் பேச்சுவழக்கில் உள்ளன.​ இவற்றில் 6 மொழிகளுக்கு மட்டும்தான் செம்மொழி அந்தஸ்து உள்ளது.​ இதில் தமிழும்,​​ சீனமும்தான் இப்போது தொடர்ந்து உயிருடன் இருக்கிறது.

வழக்கொழிந்த மொழியான யூத மொழி ​(ஹீப்ரூ)​ மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.​ கிரேக்கம்,​​ லத்தீன்,​​ சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் வழக்கில் இல்லை.​ ஐ.நா.சபையில் 196 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.​ இரு செம்மொழியை கொண்ட ஒரே நாடு இந்தியாதான்.​ பிழைப்புக்காக எத்தனை மொழியை வேண்டுமானாலும் கற்பதில் தவறில்லை.​ ஆனால்,​​ பண்பாடு,​​ கலாசாரத்தை காக்க தாய்மொழி தேவை என்றார்.

நன்றி தினமணி 07.04.2010

கருணாநிதியின் சிந்தனைகளைப் "பணம் கட்டி'ப் படிப்பதற்குப் பதிலாக பத்து மாடுகளை வாங்கி வைத்துக் கொண்டு மேய்க்கலாமே!​

ஒரு காலத்தில் ஒரே ஒரு பல்கலைக்கழகம்தான் தமிழனுக்கு உயர்கல்வி வழங்கும் பல்கலைக்கழகமாக இருந்தது.​ கங்காரு தன்னுடைய குட்டியைத் தன் உடற்பையில் பொத்தி வைத்துப் பாதுகாப்பதுபோல் ஏ.எல்.​ முதலியார் போன்றவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தைத் தங்களின் நெஞ்சோடு சேர்த்துப் பொத்தி வைத்துக் காத்தார்கள்.

நீதியும் நிர்வாகமும் அரசியல் சாசனப்படி பிரிக்கப்பட்டிருந்தன.​ அவைபோல் இல்லையென்றாலும் கல்வி அரசியலிலிருந்து தனித்தொதுங்கி,​​ அறிவை நோக்கமாகக் கொண்டு தன்போக்கில் வளர அன்றைய பெருந்தன்மையான அரசியல் இடமளித்தது.

இடைநிலைப் பள்ளி ஆசிரியரிலிருந்து துணைவேந்தர் வரை "தட்சிணை' வைக்காமல் இன்றைய அரசு அமைப்பில் எதுவும் நடக்காது என்பதால் கல்வியாளர்கள் சத்துணவு ஆயாக்கள் நிலைக்குத் தாழ்ந்து விடுவது தவிர்க்க இயலாததாகி விட்டது.​ சின்னத்தனமான அரசியல்,​​ எல்லா உயர்பதவிகளிலும் சின்னத்தனமானவர்கள் ஏறக் காரணமாகி விட்டது.

கடந்த மாதம் "அப்பாவுக்குத் தப்பாது பிறந்த பிள்ளை' என்னும் நூல் வெளியீட்டு விழாவுக்கு மதுரை சென்ற சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம்,​​ அழகிரியைப் பார்த்து மிகவும் பரவசநிலை அடைந்து,​​ தன்னை மறந்து பேசியிருக்கிறார்.

''முன்பெல்லாம் கோயிலுக்குச் சென்று திருவாசகம் பாடுவேன்!​ ஆனால் அழகிரியைச் சந்தித்த பிறகு இப்போது அழகிரிவாசகம்தான் பாடுகிறேன்.​ அண்ணனின் "காலைப் பிடித்துக் கொண்டிருப்பதுதான்' எனக்கு எப்போதும் சந்தோஷம்!''

என்னுடைய நாக்கால் மனிதனைப் பாட மாட்டேன் என்றார் நம்மாழ்வார்.​ என்னுடைய நாக்கால் கடவுளைப் பாடிய மடைமையை விட்டொழித்துவிட்டு அண்ணன் அழகிரியைப் பாடுகிறேன்;​ வீடு பேறு அளிக்க வல்லதாகச் சொல்லப்படும் தில்லைக் கூத்தனின் ''தூக்கிய திருவடியை''ப் பற்றிக் கொள்வதைவிட,​​ துணைவேந்தர் பதவியை அளிக்க வல்ல அண்ணன் அழகிரியின் திருவடியைப் பற்றிக் கொள்வதுதானே,​​ நடைமுறை வாழ்க்கைக்கு நம்பகமானது என்று அண்ணன் அழகிரியின் திருவடிப் புகழ்ச்சி பாடுகிறேன் என்கிறார் துணைவேந்தர் திருவாசகம்.

இந்தத் தரத்தில் உள்ள துணைவேந்தர்,​​ தான் பதவி வகிக்கும் பல்கலைக்கழகத்தில் "கருணாநிதியின் சிந்தனைகளை' முதுகலைப் படிப்புக்குப் பாடமாக்கப் போவதாகச் சொல்வது வியப்பல்லவே!​ "பேய் அரசு செய்தால் பிணந் தின்னும் சாத்திரங்கள்!'

கணிதம்,​​ அறிவியல்,​​ பொருளாதாரம்,​​ பொறியியல்,​​ மருத்துவம்,​​ மெய்யியல் என்பனவற்றிலெல்லாம் உயர் கல்வி என்பது போய் கருணாநிதியின் சிந்தனைகள்தாம் தமிழ்நாட்டில் உயர்கல்வி என்னும் நிலையில் திருவாசகமாவது தன் பிள்ளைகளை அந்த வகுப்பில் சேர்த்து விடுவாரா?​ கனிமொழியின் மகனாவது அதைப் படிக்க முன்வருவானா?

சங்க காலத்தில் தமிழ்நாட்டுக்கும் கிரேக்கத்துக்கும் நேரடித் தொடர்பு இருந்தது.​ அதே காலகட்டத்தில் சாக்ரடீஸ்,​​ பிளேட்டோ,​​ அரிஸ்டாட்டில் போன்ற எண்ணற்ற அறிஞர்கள் கிரேக்கத்தில் வாழ்ந்தனர்.

பதினான்கு-பதினாறாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா மறுமலர்ச்சி அடையக் காரணம் முன்னாளைய கிரேக்கச் சிந்தனைகள்தாம்.​ கிரேக்கத்தை ரோமாபுரி அடிமை கொண்ட பிறகும் கிரேக்கர்களை அடிமை கொள்ள முடியாமைக்குக் காரணம் அவர்களுடைய அறிவு வலிமைதான்.
அவ்வளவு சிறந்த கிரேக்கம் தமிழ்நாட்டோடு உறவு நிலையில் இருந்தது.​ யவனப் பெண்கள் இறக்குமதியானார்கள்;​ யவன மது இறக்குமதியானது;​ யவன வீரர்கள் இறக்குமதியாகி பாண்டியர்களின் அரண்மனைகளில் மெய்க்காப்பாளர்களாக விளங்கினார்கள்.​ ஆனால் யவன அறிவு மட்டும் இறக்குமதியாகவில்லை.

வள்ளுவன் போன்ற நிகரற்ற பேரறிஞர்கள் தமிழ்நாட்டை உலகின் அறிவுத் தரத்துக்கு உயர்த்தி நிறுத்தினார்கள் என்றாலும்,​​ இன்னொரு வகையான சிந்தனைப் போக்குக்கு வாய்ப்பு வந்தும் தமிழர்களால் தேடப் பெறாமல் கடல் பரப்புக்கு அந்தப் பக்கமே நின்றுவிட்டது.

நாம் சங்க காலத்தில் இழந்தது எவ்வளவு பெரிய சிந்தனைகளை என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளைக்காரன் கொண்டு வந்த அறிவு மூட்டையை அவிழ்த்தபோதுதான் தெரிந்தது.

வெள்ளைக்காரன் நமக்குச் செய்த தீமைகள் எண்ணிலடங்காதவை.​ அவனால் ஏற்பட்ட சில நன்மைகளில் ஒன்று திண்ணைப் பள்ளிக்கூடத்திலிருந்த நம்மைப் பெயர்த்தெடுத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் கொண்டு சேர்த்ததுதான்.​ ஆத்திசூடி மட்டும் படித்த நம்மை அரிஸ்டாட்டிலின் அரசியலையும் படிக்க வைத்ததுதான்.​ ஆனால் துணைவேந்தர் திருவாசகம் பல்கலைக்கழகத்தை மீண்டும் திண்ணைப் பள்ளிக்கூடம் ஆக்கி விடுவார் போலிருக்கிறதே!

கருணாநிதியின் ஒரு புகழ்பெற்ற சிந்தனை ''ஸ்ரீரங்கனாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளந்திடும் நாள் எந்நாளோ?''

இவர்களுக்கு வடிவங்களின் மீது சினமா அல்லது கடவுளின் மீதே சினமா?​ வடிவங்களின் மீதுதான் சினம் என்றால் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தக் கருணாநிதி ஏன் எழுந்து நிற்கிறார்?​ தேசியக் கொடி தேசம் அல்லவே!​ அதன் அடையாளம்தானே!

நீங்கள் ஒரு கந்தையை உயரத்தில் பறக்கவிட்டுத் தேசத்தை அடையாளப்படுத்திக் கொள்வதுபோல,​​ தேவைப்பட்டவன் எங்கும் பரந்து விரிந்து ஊடுருவி நின்று எல்லோரையும் எல்லாவற்றையும் தோற்றுவித்து அழிக்கும் இறையாற்றலை ஸ்ரீரங்கத்தில் "கிடந்த கோலத்தில்' ஒருவன் அடையாளப்படுத்திக் கொண்டால் என்ன குற்றம்?​ சீன எல்லையில் நிறுத்த வேண்டிய பீரங்கியை அவனிடம் கோட்டை விட்டுவிட்டு திருச்சி எல்லையில் நிறுத்துவதாகச் சொல்வதுதான் நவீன சிந்தனையா?

"ஒருவனே தேவன்' என்று திருமந்திரக் கோட்பாட்டைத் தி.மு.க.​ கடன் வாங்கிக் கொண்டதே!​ இவர்கள் தேவன் இருப்பதை அறிந்தது எவ்வாறு?​ இறை மறுப்புவாதிகள் ​ இன்று வரை விளக்கவில்லையே!

காணப்படாத ஒன்றை இருப்பதாகச் சொல்வது " உய்த்தறிந்து' சொல்லும் கருதல் அளவை என்னும் தர்க்க வழிப் பட்டதுதானே.

பானை இருப்பதால் அதைச் செய்த குயவன் ஒருவன் இருக்க வேண்டும்;​ அதுபோல் உலகு இருப்பதால் அதைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்க வேண்டும் என்பவை எல்லாம் உய்த்தறிந்து சொல்லப்படுபவைதானே.​ "ஒருவனே தேவன்' என்னும் கோட்பாட்டைத் தி.மு.க.​ கைக்கொண்டது "கருதல் அளவை' என்னும் தர்க்கப்படிதான் என்றால் அண்ணாவுக்கு முந்தைய வரிசையில் பெரியார் படத்தைத் தூக்கி விட்டுத் திருமூலர் படத்தைப் போட்டுக் கொள்ள வேண்டியதுதானே?

கருணாநிதி சிந்தனைகளை முதுகலை வகுப்புக்கு முதன்மைப் பாடமாக வைத்தால்,​​ எவராவது தப்பித் தவறிச் சேர்ந்து விட்டவர் மேற்கண்ட வினாக்களுக்கு நிகரான வினாக்களை எழுப்பினால்,​​ திருவாசகம் என்ன விடை சொல்வார்?​ எவ்வளவோ அறிவான ஆசிரியர்களும் பேராசிரியர்களும் இதே பல்கலைக்கழகத்தில் தரைமட்டத்தில் கிடக்க,​​ ஆங்கில மொழித் தடுமாற்றம் உள்ள என்னை விண்ணளவு தூக்கி நான் வசதியில் மிதக்கக் காரணமான கருணாநிதி என்று திருவாசகம் வெட்கமில்லாமல்கூட விடையிருப்பார்!​ அறிவுலகம் ஏற்குமா?

பாடம் கற்பிப்பவர் குறைபாடுடையவராக இருக்கலாம்;​ பாடமே குறைபாடுடையதாக இருக்கலாமா?​ எது அறிவு?​ நல்லதன் நலனையும்,​​ தீயதன் தீமையையும் உள்ளவாறு உணர்த்துவது அறிவு என்று தமிழ்மொழி கூறும்.

காந்தியின் சிந்தனைகளை முதுகலை வகுப்புக்கு முதன்மைப் பாடமாக வைக்கும்போது,​​ கருணாநிதி சிந்தனைகளை வைக்கக் கூடாதா என்று கேட்கிறார் திருவாசகம்.

சில ஆயிரம் வெள்ளைக்காரர்கள் பல கோடி இந்தியர்களை ஆள முடிவதற்குக் காரணம் தீமையோடு மக்கள் ஒத்துழைப்பதுதான் என்று அவர்களுக்கு உணர்த்தி,​​ ஆயுதங்களைத் திரட்டாமல் மக்களைத் திரட்டியது,​​ உலகு அதுவரை கண்டறியாத போர்முறை அல்லவா!

காந்தி ஒரு யுகத்தை வடிவமைக்க வந்த சிந்தனையாளர்;​ காந்தியும் கருணாநிதியும் ஒன்றா?

தமிழ்நாட்டில் மாம்பழக் கவிராயர் சீட்டுக்கவி எழுதிக் கொண்டிருந்த காலகட்டத்தில்,​​ ஜெர்மானியச் சிந்தனையாளர் இமானுவேல் காண்ட் தூய அறிவு குறித்த ஆய்வினை மேற்கொண்டிருந்தார்.​ காலமும் வெளியும் நம்முடைய மனத்தின் படைப்புகளே!​ அவை புறப்பொருள்களை ஒழுங்குபட அடுக்கி உணர்வதற்கான மனத்தின் கருவிகள் மட்டுமே என்றார் காண்ட்.

காண்ட்டைப் படிப்பதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா,​​ இல்லை,​​ கருணாநிதியின் பராசக்தி வசனத்தைப் படிப்பதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா?​ திருவாசகம் சொல்லட்டுமே!

வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான் -​ அடித்துச் சொன்னார் ​ காரல் மார்க்ஸ்.

உற்பத்திச் சாதனங்களைப் பொதுவுடைமை ஆக்காத சமூகத்தில் பணமே எல்லாமாக விளங்கும்.​ ஆட்சி,​​ சமூக மதிப்பு,​​ தலைமைப் பொறுப்பு அனைத்துமே பணத்தால் தீர்மானிக்கப்படும்.​ பணம் இல்லாத உண்மைகள் உறங்கும்;​ பணமுடைய பொய்மைகள் கோலோச்சும்.​ பணமுடைய முட்டாள் மதிக்கப்படுவார்;​ பணமில்லாத அறிஞர் இழிவுபடுத்தப்படுவார்!
திருவாசகங்கள் துணைவேந்தர்களாவார்கள்;​ கருணாநிதிகள் நாடாள்வார்கள் என்று மார்க்ஸ் பெயர் குறிப்பிடாமல் அனைத்தையும் பேசுவது போலில்லையா மேற்கண்ட வாதங்கள்.

​வர்க்க வேறுபாடற்ற சமூக உருவாக்கத்தைப் பற்றிப் படிக்க பல்கலைக்கழகம் வேண்டுமா?​ கருணாநிதியின் "இல்லற ஜோதி' வசனத்தைப் படிக்கப் பல்கலைக்கழகம் வேண்டுமா?​ திருவாசகம் சொல்லட்டுமே!

தாவோயியம்,​​ புத்தர்,​​ வள்ளுவர்,​​ ஏசு,​​ நபிகள் நாயகம்(ஸல்),​​ சங்க இலக்கியம்,​​ எபிகூரியன் கொள்கை,​​ ஸ்டோயிசிசம்,​​ மாக்கிவெல்லி,​​ சாணக்கியன்,​​ உபநிடதங்கள்,​​ ஹாப்சின் லெவியதான்,​​ ஜான் லாக்கின் அரசியல் தத்துவம்,​​ ரூசோ,​​ நீட்சே,​​ ஹியூம் இவர்களோடு நம்முடைய ஊர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களைப் படித்து முன்னேறிச் செல்வதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா?​ "திரும்பிப் பார்' வசனத்தைப் படித்துவிட்டுத் திரும்பி நடப்பதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா?

பல்கலைக்கழகங்களில் முதுநிலை வகுப்பில் கருணாநிதியின் சிந்தனைகளைப் "பணம் வேறு கட்டி'ப் படிப்பதற்குப் பதிலாக அந்தப் பணத்தில் பத்து மாடுகளை வாங்கி வைத்துக் கொண்டு மேய்க்கலாமே!​ பால் வளமாவது பெருகுமே!

மீனாட்சி அம்மன் கோயிலில் செருப்புக் குத்தகையை ஏலம் எடுப்பவர் ஒரு முதுநிலைப் பட்டதாரியாகவும் இருந்தால் அடுத்த துணைவேந்தராகி விடலாம்.​ கூடுதல் தொகைக்கு ஏலம் கேட்பதுதான் முக்கியமானது.
திண்ணைப் பள்ளிகளாகின்றன பல்கலைக்கழகங்கள்!

பழ.​ கருப்பையா

நன்றி தினமணி, 07.04.2010

Thursday, April 1, 2010

தி.மு.க. தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் யாருமே இல்லையா?

தி.மு.க. தமிழ்நாட்டு மக்களின் இனமான உணர்ச்சியால் உருவான கட்சி என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆயிரக்கணக்கான உண்மையான தொண்டர்களின் உழைப்பாலும் தியாகத்தாலும் உருவான தி.மு.க. என்ற மக்கள் இயக்கத்தை ஒரு குடும்பச்சொத்தாக மாற்றிய பெருமை கருணாநிதியை சேரும். இந்த இயக்கத்தை தனது குடும்பச்சொத்தாக மாற்ற கருணாநிதி நடத்திய நாடகங்கள் ஏராளம்.

தி.மு.க. தொடர்ந்து தனது குடும்பச்சொத்தாக இருக்க நல்ல கதை வசனத்தோடு புதிய நாடகத்தை எப்போதோ எழுதி முடித்துவிட்டார். தற்போது தனது வாரிசுகளை அந்த நாடகத்தில் நடிக்க வைத்து இயக்கிக்கொண்டிருக்கிறார் என்பதை கருணாநிதி உணர்ந்தவர்கள் நன்கு அறிவார்கள்.

இந்த நாடகத்தின் சம்பவங்களை நிகழ்த்தியவர், நிகழ்த்துபவர், நிகழ்த்த இருப்பவர் கருணாநிதியே. இந்த நாடகத்தில் அவரே தற்போது ஒரு முடிச்சைப் போட்டுள்ளார். அதற்காக அவர் எழுத்திய வசனங்களை அவருடைய துடுக்கு மகன் அழகிரி தற்போது பேசிவருகிறார்.

“கருணாநிதிக்குப் பிறகு யாரையும் தலைவராக நான் ஏற்க மாட்டேன்; அவர் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை”

... நான் கூறிய கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.

“நான் எண்ணுவதைக் கூறுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. என் மனசாட்சிப்படிதான் இது தொடர்பாக முதன்முதலில் எனது கருத்தைக் கூறினேன்.”“

“தி.மு.க.வில் ஜனநாயக ரீதியில் கட்சி மூலம் மட்டுமே தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதை ஏற்கிறேன்.”“

“திமுக ஜனநாயகக் கட்சி என்பதால், கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டால் நான் போட்டியிடுவேன். அதற்கு இப்போது அவசியம் இல்லை.
ஏனெனில், திமுக தலைவராக முதல்வர் கருணாநிதி இருப்பதால், அந்தப் பதவி பற்றி பேசத் தேவையில்லை.”

இப்போது மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருக்கிறார். எதிர்காலத்தில் கட்சிக்கு தேவைப்பட்டால் நான் போட்டியிடுவேன்“

போன்ற வசனங்கள் அழகிரியால் சிறப்பாக பேசப்பட்டுள்ளது.


“கருணாநிதிக்குப் பிறகு யாரையும் தலைவராக நான் ஏற்க மாட்டேன்; அவர் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை” என்று சொல்லிவிட்டு தனக்கு மட்டுமே அந்தத் தகுதி இருப்பதாக அழகிரி அப்போதே சொல்லியிருந்தால் நாடகத்தின் “கிளைமேக்ஸ்” உடனே வந்துவிடும். பிறகு நாடகத்தில் எந்த விருவிருப்பும் இருக்காது என்பது நாடக ஆசிரியர் கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும். அதனால் கிளைமேக்சை கொஞ்சம் தள்ளி வைத்துள்ளார்.

“தி.மு.க.” நாடக ஆசிரியர் கருணாநிதி போட்ட முடிச்சை மக்கள் வியக்கும்படி அவரே அவிழ்ப்பார் என்பதை நம்புவோமாக!
.......................

இந்த நாட்டில்,

“மக்களாட்சியின் பெயரால் நடைபெறும் அரசியல் நாடகத்தில் குடிமக்கள் மிகச்சாதாரண பார்வையாளர்களாக மட்டுமே இருக்கமுடியும்...

நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு நடிக்கும்போது அவர்கள் வீசும் கத்தி பார்வையாளர்களான நம்மீது விழுந்தால் நமக்கு சாகமட்டுமே தகுதியுண்டு, உரிமையுண்டு...

செத்துப்போன பார்வையாளனின் குடும்பத்தினர் ஆட்சியாளர்கள் சொல்லும்போது மட்டுமே அழவேண்டும்...

தேவைப்பாட்டால் செத்தவன் “என் மகன் இல்லை” என்று சொல்வதற்கும் அவனை பெற்றவர்கள் தயாராக இருக்கவேண்டும்.”
....................
நாடகம் நடக்கட்டும்! வாழ்க!! வளர்க!!!

முதலமைச்சருக்கு நாளொன்றுக்கு ரூ.3 கோடி தனியாகக் கிடைக்கிறது!

கள் இறக்க தமிழக அரசு அனுமதி மறுப்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 37-வது பிரிவுக்கும் எதிரானது என்று, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார். கடலூரில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

இந்தியா முழுவதும் 8 கோடி பனை மரங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 5 கோடி பனை மரங்களும், 6 கோடி தென்னை மரங்களும் உள்ளன. தென்னை பனை மரங்களை நம்பி 10 லட்சம் தொழிலாளர் குடும்பங்களும், 50 லட்சம் விவசாயக் குடும்பங்களும் உள்ளன.

கள் இறக்கவும் குடிப்பதற்கும் தமிழக அரசு தடைவிதித்து இருப்பது முறையற்றது. கள் மது அல்ல; உணவின் ஒரு பகுதி என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறியுள்ளது. எனவே கள் இறக்க அனுமதி மறுப்பது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், குடியரசுத் தலைவரின் நாடாளுமன்ற உரை, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.

கடந்த 22 ஆண்டுகளாக தமிழக அரசு கள் இறக்கத் தடைவிதித்து இருப்பதால். பனை, தென்னைத் தொழிலில் ஈடுப்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

உலக நாடுகளின் மது வகைகள் அனைத்தும் தமிழகத்தில் விற்க அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், தமிழ் மண்ணின் பானமான, கள் இறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது சட்டவிரோதம் ஆகும். இலங்கை உள்ளிட்ட நாடுகள் வெளிநாடுகளுக்கு பதப்படுத்தப்பட்ட கள்ளை, பாக்கெட்டிலும் டப்பாக்களிலும் அடைத்து ஏற்றுமதி செய்கின்றன. தமிழகத்தில் பெப்ஸி, கோக் போன்ற அயல்நாட்டு பானங்களின் விற்பனை பாதிக்கப்படும் என்ற காரணத்துக்காக, கள்ள இறக்கவும் குடிக்கவும் தமிழக அரசு தடைவிதிப்பது நியாயம் அல்ல.

டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனையால், எந்த முதல் அமைச்சராக இருந்தாலும் அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.3 கோடி தனியாகக் கிடைக்கிறது. டாஸ்மாக் மது விற்பனை பாதிக்கப்படும் என்பதற்காக கள் இறக்க அனுமதி மறுப்பது சரியல்ல. கள் இறக்க அனுமதி மறுப்பது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான முடிவாக நாங்கள் கருதவில்லை. ஒட்டுமொத்தத் தமிழ் சமுதாயத்துக்கு எதிரானது. இது தொடர்பாக சிவசுப்பிரமணியன் குழு அறிக்கை அளித்து 2 மாதங்களாக ஆகிறது. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

டாஸ்மாக் மதுபானங்களை விட கள்ளால் ஏற்படும் தீமை அதிகம் என்று நிரூபிக்கப் பட்டால், நாங்கள் இந்த கோரிக்கையைக் கைவிட்டு விடுகிறோம். டாஸ்மாக் மது பன்றியைப் போன்றது, கள் பசுவைப் போன்றது.

கள் இறக்கவும் குடிக்கவும் விதிக்கப்பட்டு இருக்கும் தடையை நீக்கக் கோரி, நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு வரும்போது, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி சென்னை சட்டப்பேரவை முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து இருக்கிறோம் என்றார் நல்லசாமி.

நன்றி தினமணி 01.04.2010

எங்கு வாழ்ந்தாலும் தமிழன் தன் வீட்டில் தமிழ்தான் பேச வேண்டும்

புதுதில்லி, மார்ச் 31: தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தங்கள் வீடுகளில் தமிழில்தான் பேச வேண்டும் என்கிற உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.

தினமணி நாளிதழும் தில்லி தமிழ்ச் சங்கமும் இணைந்து, பத்ம விருதுகள் பெற்ற நோபல் நாயகர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான், அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி, சிபிஐ முன்னாள் இயக்குநர் டி.ஆர். கார்த்திகேயன் மற்றும் சித்த மருத்துவ வல்லுநர் டாக்டர் ஜெ.ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகிய தமிழர்களைப் பாராட்டி புதன்கிழமை நடத்திய விழாவில் பேசியபோது இதனை அவர் வலியுறுத்தினார்.

மேலும் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் பேசியது: திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்ற பாரதியின் கனவை நனவாக்கித் தந்த அறிஞர்கள் இவர்கள். தமிழ்நாட்டின் பெருமையை இந்தியத் தலைநகரில் மட்டுமின்றி உலக அரங்கிலும் பட்டொளிவீசிப் பறக்கச் செய்தவர்கள். இவர்களைப் பாராட்டுவது தமிழர்களாகிய நம்மை நாமே பாராட்டிக் கொள்வதற்குச் சமம்.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்பான் பாரதி. இசைமேதை ஏ.ஆர். ரஹமான் பேசும்போது "ஜெய் ஹோ' பாடலைத் தமிழில் இசையமைக்க வேண்டும் என்கிற ஏக்கமும் தாகமும் தனக்கு இருப்பதாகத் தெரிவித்தார். அவர் வெளிப்படுத்திய அந்தத் தமிழ் உணர்வு நம் அனைவரிடத்திலும் இருக்க வேண்டும். அதற்கு முதலில் நாம் தமிழில் பேச வேண்டும் என்கிற வைராக்கியம் நமக்கு ஏற்பட வேண்டும்.

தமிழ்நாட்டிலும் வெளிமாநிலங்களிலும் வாழும் மலையாளிகளைப் பார்க்கிறேன். அவர்கள் வீடுகளில் மலையாளத்தில் பேசிக்கொள்கிறார்கள். குஜாராத்திகள் குஜராத்தி மொழியில் பேசுகிறார்கள். கன்னடத்தவர் கன்னடத்திலும், வங்காளிகள் வங்க மொழியிலும் பேசுகிறார்கள். தமிழ்நாட்டிலேயேகூடத் தமிழன் மட்டுமே, தன் வீட்டில் தமிழ் பேசுவது குறைந்து வருகிறது. தமிழில் பேசுவது கெüரவக் குறைச்சலாகக் கருதுவதும் ஆங்கிலத்தில் பேசுவதுதான் பெருமை என்று நினைப்பதும் வேதனை அளிக்கிறது. இந்த மேடையில் ஜெய் ஹோ பாடலை குழந்தைகள் ஹிந்தியில் பாடியதைக் கேட்ட ரஹ்மான், இப்பாடலை தமிழல் கொண்டுவரப்போவதாகச் சொன்ன அதே தமிழ் உணர்வை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, நாமும் வீடுகளில் தமிழில்தான் பேசுவோம் என்று உறுதி ஏற்க வேண்டும். நாம் நமக்குள்ளே பேசும் மொழி நம் இனிய தமிழ் மொழியாக இருக்கட்டும் என்றார் ஆசிரியர் வைத்தியநாதன்.

நோபல் நாயகர் வெங்கட் ராமகிருஷ்ணன் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துப் பேசுகையில், "நான் இங்கே உள்ள இசை மேதை ரஹ்மான் போல அனைவரும் தெரிந்த நபர் அல்ல, ஆனால் எனக்கு ஒரு நோக்கம் இருந்தது, அதை நான் ஈடுபாட்டுடன் பின் தொடர்ந்தேன். நான் எப்படி பி.எச்டி. படிக்க நேர்ந்தது என்பதெல்லாம் சுவாரஸ்யமான விஷயம். இருப்பினும் என்னைப் போன்றவர்களுக்கு விருது கிடைக்குமபோது அது மிகப்பெரிய நல்லெண்ணத்தைத் தமிழர்களிடத்தில் ஏற்படுத்துகிறது என்பதும், உழைப்பவருக்கு பாராட்டு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்பதும் என்னை ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. இது ஒரு பாடம். பணம், நல்ல வேலை என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உங்கள் விருப்பங்களைத் தீர்மானித்து, அதைத் தொடர்ந்து செல்லுங்கள். பாராட்டு வந்து சேரும்' என்றார்.

தமிழில் ஜெய்ஹோ: இசைமேதை ஏ ஆர். ரஹ்மான் பேசுகையில், எல்லாப் புகழும் இறைவனுக்கே, இந்த விழாவில் குழந்தைகள் நான் இசையமைத்த ஹெய் ஹோ பாடலை ஹிந்தியில் பாடியபோது, இதைத் தமிழிலும் அமைக்க வேண்டும் என்று தோன்றியது. அடுத்த ஆண்டு அதைச் செய்வேன், பாராட்டியதற்கு தினமணிக்கு நன்றி என்றார்.

டாக்டர் டி.ஆர். கார்த்திகேயன் பேசுகையில், விருது பெற்றவுடன் இங்கே வந்து கலந்து கொண்டதற்குக் காரணம் நாங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான். எனக்கு விருது கிடைத்திருப்பதாக நண்பர்கள் சொன்னபோது, எனக்குத் தெரியாது, நான் கேட்டதும் இல்லை. இத்தகைய விருதுகள் பெற செல்வாக்கைப் பயன்படுத்தினால்தானே இத்தகைய விருதுகள் கிடைக்கும் என்றேன். தகுதிக்கேற்பவும் தருகிறார்கள் என்று சொன்னார்கள். தமிழ்நாட்டுக்கு மறுபடியும் பெருமை கிடைக்கத் தொடங்கியுள்ளது. சில காலமாக தொய்வு இருந்த நிலை மாறி, கடந்த இரு ஆண்டுகளாக ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று நிறைய தமிழர்கள் மத்திய அரசுப் பணிக்கு வரத் தொடங்கியுள்ளனர். தமிழன் மறுபடியும் தலைதூக்கி உலகப் புகழைப் பெறத் தொடங்கியுள்ளான். இந்த விருது பெற்ற அனைவருமே, சாதாரண குடும்பங்களில் இருந்து இந்நிலைக்கு உயர்ந்தவர்கள் என்றார்.

டாக்டர் ஜெ.ஆர். கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், தமிழ் உணர்வு தமிழர்களிடத்தில் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் இருக்கிறது. சோரியாஸிஸ் தோல் நோய்க்கு நான் உருவாக்கியுள்ள சித்த மருந்துக்காக எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. சித்த மருத்துவமனை அதிகம் வருவதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.1946-ல் தொடங்கப்பட்ட தில்லி தமிழச் சங்கத்தின் செயல்பாடுகளை தலைவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி விளக்கினார். செயலர் சக்தி பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் பி. குருமூர்த்தி, ராஜ்குமார் பாலா ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

நன்றி தினமணி 01.04.2010