Monday, April 19, 2010

கட்டடம் கட்ட ஏரியையும் குளங்களையும் அரசு தேர்ந்தெடுப்பது ஏன்?

கோவையில் அம்மன்குளம் என்ற இடத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுவந்த 48 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி ஒரு பக்கமாகச் சரிந்து புதைந்ததைத் தொடர்ந்து தற்போது அங்கு பணிகள் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் புதைந்து சரியாமல் இருக்க, அக்கட்டத்தின் செங்கல்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளன.

இந்த அம்மன் குளத்தில் மொத்தம் 936 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வந்தது என்பதும், மற்ற அடுக்குமாடி தொகுப்புகளுக்கு என்ன நிலை ஏற்படும் என்பதும் இனி மண்ஆய்வுகளுக்குப் பிறகுதான் தெரியவரும் என்று கூறப்படுகிறது. மண்ஆய்வுகள் முறைப்படி ஒரு பிரசித்திபெற்ற பொறியியல் கல்லூரியால் எடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகே இந்த இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும் குடிசை மாற்று வாரியம் தெரிவித்தாலும், எதற்காக அம்மன்குளத்தைத் தேர்வு செய்தார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

அதிமுக ஆட்சியில் இந்த இடம் நிராகரிக்கப்பட்டதாக முன்னாள் வீட்டுவசதித் துறை அமைச்சர் செ.ம.வேலுசாமி சட்டப்பேரவையில் குறிப்பிட்டுள்ளார். அம்மன்குளம் என்கிற பெயரிலேயே குளம் உள்ளது. ஆனாலும் அமைச்சர் இது ஏரிப் புறம்போக்கு அல்ல, நத்தம் புறம்போக்கு என்று அவையில் தெரிவித்திருக்கிறார். 15 ஆண்டுகளாக அந்தக் குளத்தில் தண்ணீர் தேங்கவில்லை என்பதால் அந்தக் குளத்தை நத்தம் புறம்போக்கு என மாற்றிவிட்டதாக அரசு சொல்வது நியாயமானதாகத் தெரியலாம். ஆனால், அந்தக் குளம் எப்போதுமே குளம்தான். மனிதர்களின் சுயநலத்தாலும், அதிகாரிகளின் ஆதரவாலும் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்துவிட்டதாலேயே, குளம் தன்னை நத்தம்புறம்போக்காக மாற்றிக்கொண்டுவிடுமா? எல்லா நீர்வழிகளையும் அடைத்துவிட்டால் எப்படி தண்ணீர் வந்து தேங்கும். அது நேரம் வரும்போது தன் இயல்பு நிலையைக் காட்டத்தானே செய்யும்? அதுதான் அங்கே நிகழ்ந்திருக்கிறது.

இந்த இடத்தைத் தேர்வு செய்து வெகு விரைவாக கட்டடங்களைக் கட்டி முடிக்க அவசரம் காட்டியதற்குக் காரணம், கோவையில் செம்மொழி மாநாட்டின்போது முதல்வரால் திறப்பு விழா செய்து, அவரால் பாராட்டப்பட வேண்டும் என்கிற ஆசைதான். ஆசை நியாயமானதாக இருக்கலாம். ஆனால் இந்த அவசரம் நியாயமில்லை. 936 குடும்பங்களின் உயிர்கள் இந்தக் குளத்தின் மீது குடியேற்றப்படுகிறது என்கிற உணர்வே இல்லாத அவசரத்தில் நியாயமே இல்லை.

நீர்ப்பிடிப்புப் பகுதி அல்லது ஏரி குளங்களில் வீடுகள் கட்டுவது கூடாது என்று நீதிமன்றம் தெளிவான உத்தரவைக் கொடுத்திருக்கிறது. இத்தகைய இடங்களில் வீடுகளைக் கட்டி, நீராதாரத்தைக் கெடுத்துவிட்டு, குடிநீருக்காகத் திட்டங்கள் போடுவது வீண் செலவு என்றும், நீதிமன்ற எதிர்ப்பையும் பொருள்படுத்தாமல், நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் நீராதாரங்களிலும் கட்டப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு, சாலை வசதி அளிப்பது நீதிமன்ற அவமதிப்பு என்றும்கூட, ஒரு மாவட்ட ஆட்சியரை நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.

அப்படியிருந்தும் ஏரி, குளங்களைத்தான் அதிகாரிகளும் அமைச்சர்களும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைக்கத் தேர்வு செய்கிறார்கள். ஏனென்றால், மற்ற தனியார் நிலங்களை கையகப்படுத்த முயன்றால் அவர்கள் வழக்கு தொடுப்பார்கள். வழக்கு முடிய காலதாமதமாகும். தங்களது பதவிக் காலத்தில் செயலைச் செய்து முடிக்க வேண்டுமானால், அரசு நிலங்கள்தான் தோதாக இருக்கின்றன. விளைவு? குளமெல்லாம் நத்தமாகிறது.

இந்த விவகாரத்தில் மிகவும் ஆச்சரியமான விஷயம், அவையில் அமைச்சர் சுப தங்கவேலன் கூறியதுதான்: கட்டடம் கட்டும் ஒப்பந்ததாரர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், புதிய இடத்தைக் காட்டினால் அங்கே இதே அடுக்குமாடி வீடுகளைக் கட்டிக் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், அம்மன்குளத்தில் கட்டிய பாதிவேலை முடிந்த கட்டடங்களை இடித்து விடுவதாகவும், இந்தக் கட்டடத்துக்காக செய்யப்பட்ட தொகையைக் கேளாமல் விட்டுவிடுவதாகவும் எழுதியிருக்கிறார் என்று அமைச்சர் கூறினார். அந்தக் கட்டடங்களின் புகைப்படங்களைப் பார்த்தாலே தெரியும். பாதிக்கும் மேற்பட்ட பணிகள் முடிந்துவிட்டன என்று. தன் மீது குற்றமில்லை, அரசு காட்டிய மண் மீதுதான் குற்றம் என்ற நிலையிலும், பல கோடி ரூபாயை இழக்க ஒரு ஒப்பந்ததாரர் முன்வருகிறார் என்றால் இந்தப் பணிவுக்குப் பின்னணியில் என்ன இருக்கிறது?

ஜவாஹர்லால் நேரு தேசிய ஊரக புனரமைப்பு திட்டத்தில் கட்டப்படும் பல லட்சம் வீடுகளில் மூன்றில் ஒரு பகுதி தனியார்-அரசு பங்கேற்பில் (பி.பி.பி)கட்டப்பட்டு வருகிறது. குடிசைவாசிகளுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்து, அவர்களையே அதற்கு உரியவர்களாக்கும் ராஜீவ் ஆவாஸ் யோஜனா கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, அத்திட்டத்தின் உள்அங்கமாக மேற்சொன்ன ஜவாஹர்லால் நேரு தேசிய ஊரக புனரமைப்பு திட்டத்தையும் சேர்த்திருக்கிறார்கள்.

இதற்காக மொத்தம் பத்து லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கவுள்ளது. நிகழாண்டில் இத்திட்டத்துக்காக ரூ. 1,270 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சரி பாதி வீடுகளை அரசு மற்றும் தனியார் பங்கேற்பில் (பிபிபி) கட்டுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் கட்டவுள்ள 9,600 வீடுகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பொறுப்பில் 3,840 வீடுகளை கட்டப்பட்டு வருவதாகச் செய்திகள் வருகின்றன. மற்ற வீடுகளை பிபிபி முறையில்தான் கட்டப்போகிறார்களா என்பது தெரியவில்லை.

கட்டும்போது சரிந்தால் வீழ்வது கட்டடம் மட்டும்தான். கட்டியபிறகு சரிந்தால், வீழ்வது ஏழைகளின் குடும்பமாக அல்லவா இருக்கும். வீடு கட்டுகிறோம் பேர்வழி என்று குளங்களை நத்தமாக்குவதுடன் நின்றுவிடாமல் மயானமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபடலாமா? ஏன் இந்த அவசரம்?

நன்றி: தினமணி 20.04.2010

No comments: