Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts

Wednesday, June 30, 2010

வெங்காய மாநாடு!

“உலகத் தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம். இது எதற்கு? கும்பகோணம் மகாமகத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது. காங்கிரசைவிட, இந்த மந்திரிசபை தேவலாம் என்கிறார்கள். இந்த நேரத்தில் ஏன் இந்த கூத்து? கனம் அண்ணாதுரை 1972 இல் பதவிக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிடட்டும்? உலகத் தமிழ்மாநாடு கூடிக் கலைந்த பின் சூத்திரன், சூத்திரனாகத் தானே இருக்கப் போகிறான்? இழிவு ஒழியப் போகிறதா? கண்ணகி சிலையும் கம்பன் சிலையும் எதற்கு? இவர்கள் நமது இனப் பெருமையை ஒழித்தவர்கள் அல்லவா? - பெரியார் ‘விடுதலை’ 15.12.1967

1968-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டு குறித்து தந்தைபெரியார் கூறிய கருத்து. அன்று அவர் கூறியது போலவே உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தனது சுயநலத்திற்காக மகாமக திருவிழாபோல் கூடிக்களையும் மாநாடாக மாற்றிய பெருமை அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் மு.கருணாநிதியையே சேரும்.
தான்செய்த தமிழினத் துரோகங்களை மூடிமறைக்க கருணாநிதியால் தற்போது நடத்தப்பட்ட கோவை செம்மொழி மாநாட்டை தந்தைப்பெரியார் பார்த்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்?

Monday, June 28, 2010

பழ. கருப்பையா மீது தாக்குதல்: கருணாநிதியின் சனநாயகம்

எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என எத்தனையோ சுதந்திரங்கள் இந்தநாட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் இவை எதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடையாது என்பதே உண்மை. குறிப்பாக மானமுள்ளவர்களும், சுயசிந்தனையாளகளும் மக்களுக்காக சிந்திக்கவோ செயல்படவோ கூடாது என்பதை தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் மீண்டும் மீண்டும் நிறுபித்து வருகின்றனர்.

அடக்குமுறையின் செயல்வடிவம் தான் ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும் மாறுபடுகிறதே தவிர மற்றபடி யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல. அதிலும் குறிப்பாக செயலலிதாவும், கருணாநிதியும் தங்களுக்கென்று தனித்தனி “அடக்குமுறை கொள்கை”யை தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

செயலலிதா அவர்கள் சனநாயகம், கருத்துச் சுதந்திரம், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, ........ என எதைப்பற்றியும் கவலைப்படவும் மாட்டார். தனக்கு சரி என்று தோன்றியதையும், தன்னை எதிர்ப்பவர்களையும் எதைப்பற்றியும் கவலைப்பாடாமல் ஒடுக்குவார் அல்லது அழித்துவிடுவார்.

கருணாநிதி அவர்கள், கொள்கை, இலட்சியம், பகுத்தறிவு, அரசியல், சனநாயகம், கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் போன்றவைகளைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதுவார், மணிக்கணக்காக பேசுவார். ஆனால் தனக்கு எதிரான எதையுமே விட்டுவைக்கமாட்டார். குறிப்பாக கருணாநிதிக்கு எதிரானவர்கள் தமிழர்களாக இருந்துவிட்டால் காத்திருந்து கருவருத்துவிடுவார். இதற்கு எடுத்துக்காட்டுகள் தேவையில்லை. கருணாநிதியின் வாழ்க்கையே தமிழினத்திற்கு எதிரானதுதான்.

அதன் தொடர்ச்சியான ஒரு நிகழ்வே தற்போது பழ.கருப்பையா அவர்கள் தாக்கப்பட்டது...

சென்னை இராயப்பேட்டையில் பழ. கருப்பையாவின் அவர்களின் வீடு உள்ளது. இங்கு மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளோடு அவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்கியவர்கள் பழ.கருப்பையாவை பார்த்து “நீ என்ன பெரிய எழுத்தாளனா, இந்த வாய் தானே கலைஞருக்கு எதிராக பேசுகிறது” என்று சொல்லி வாயில் குத்தியுள்ளனர். “இந்த கைதானே எழுதியது” என்று அவருடைய கையில் குத்தியுள்ளனர். “இது ஆரம்பம்தான்” என்று கூறிக்கொண்டே வீட்டில் உள்ள பொருள்களை அடித்து நொறுக்கியுனர்.

கருணாநிதியின் அரசியல் நிலைப்பாடுகள், தமிழினத் தூரோகச் செயல்கள், தமிழின துரோகத்தை மறைக்க நடத்தப்பட்ட செம்மொழி மாநாடு என அவரையும் அவரது ஆட்சியையும் பற்றி பழ.கருப்பையா அவர்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். அதற்காகவே இந்த பரிசு கருணாநிதியால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல் ஊடகத்தை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தும் ஊடக வேசிகள் ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்காமல் இதை ஒரு செய்தியாக மட்டுமே வெளியிடுவார்கள். ஒரு சில சூராதி சூரர்கள் வழக்கம் போல் இப்படி ஒரு நிகழ்வு நிகழந்ததாகவே தங்களுடைய ஊடகத்தில் காட்டிக்கொள்ளமாட்டார்கள்.

வாழ்க! சனநாயகம்...

Thursday, May 6, 2010

அழகிரி மற்றும் தயாநிதிக்கு என்ன துறை வழங்க வேண்டுமென்பதை இராசா தீர்மானிக்கிறார்!

கருணாநிதி குடும்பத்தில் விளைந்த கத்தரிக்காய் கடைத்தெருவிற்கு வந்துள்ளது. கருணாநிதி குடும்ப ஊடகங்களில் வெளிவராத செய்தியை தாங்கள் அறிந்துகொள்ள... இங்கே சுட்டவும்...

Wednesday, May 5, 2010

கருணாநிதியின் பாசிசப் படை

மிகச்சிறந்த நீதிபதிகளும் சட்ட நுணுக்கங்களில் துறைபோகிய வழக்கறிஞர்களும் சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் பெரும்புகழை ஈட்டிக்கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள பிற உயர் நீதிமன்றங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த பெருமைக்குரிய சென்னை உயர் நீதிமன்றம் இன்று சிறுமைப்பட்டுக் கிடக்கிறது. உயர் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் காவல்படையினாலும், கட்சிக் குண்டர்களாலும் மிருகத்தனமாகத் தாக்கப்படுகிறார்கள். உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் சுதந்திரமாகச் சென்றுவரவே அனைவரும் அஞ்சும் நிலை உருவாகிவிட்டது.

கடந்த 25-4-10 அன்று உயர் நீதிமன்றத்தில் அம்பேத்கரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்றத்தில் 15,000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும் இதர அலுவலர்களும் பணியாற்றி வருகிறார்கள். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, முதலமைச்சர், சட்ட அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளும் இதுபோன்ற விழாவில் சில ஆயிரம் வழக்கறிஞர்களாவது பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால் அன்றைய விழாவில் 50-க்கும் குறைவான வழக்கறிஞர்கள் மட்டுமே பங்கேற்றனர். மிகப்பெரும்பாலான வழக்கறிஞர்கள் விழாவைப் புறக்கணித்துவிட்டனர்.

உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் நடக்கும் விழாக்களில் கலந்து கொள்ளும் வழக்கறிஞர்களின் அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அன்றைய தினம் இந்தப் பரிசோதனையை நடத்தாமல் காவல்துறையினர் அமைதி காத்தனர். வழக்கறிஞர்கள் அல்லாத பலர் இவ்விழாவில் பங்கேற்பதற்கு வசதியாகவே இவ்வாறு செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.

கடந்த 19-02-09 அன்று நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும், காவல்துறையினரால் தாக்கப்பட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு முதல்முறையாக முதலமைச்சர் உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குகொள்ள வருகை தந்தார். எனவே, காவல்துறைத் தலைவர் உள்பட உயர்காவல் அதிகாரிகள் மற்றும் சீருடை அணியாத ஏராளமான காவலர்களும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

முதலமைச்சர் பேசத்தொடங்கியதும் மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பைச் சேர்ந்த ஐந்தாறு வழக்கறிஞர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி காட்டினார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய இவர்களை அங்கிருந்த காவல்படை எத்தகைய அமளியும் இல்லாமல் அப்புறப்படுத்தியிருக்கலாம். ஆனால் காவல்துறைத் தலைவர் உள்பட சீருடையில் வந்திருந்த காவலர்களும், சீருடை அணியாமல் வந்திருந்த ஏராளமான காவலர்களும் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடாமல் அமைதி காத்தனர்.

ஆனால் திட்டமிட்டு உள்நுழைந்திருந்த தி.மு.க. ஆதரவாளர்கள் அந்த ஐந்தாறு பேர் மீது பாய்ந்து காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல் தொடுத்தனர். அதுமட்டுமல்ல, நாற்காலிகள் வீசப்பட்டன. இந்தத் தாக்குதலைப் படம்பிடிக்க முயன்ற ஊடகக்காரர்களின் கேமராக்கள் பறித்தெடுக்கப்பட்டு உடைக்கப்பட்டன. கேமராக்காரர்களும் தாக்குதலுக்குத் தப்ப முடியவில்லை. அவர்களுக்கு ஆதரவாக வந்த செய்தியாளர்களும் தாக்கப்பட்டனர்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, முதலமைச்சர் உள்ளிட்டவர்கள் கண்முன்னாலேயே நடைபெற்ற இந்தத் தாக்குதலை காவல்துறை முழுமையாக வேடிக்கை பார்த்தது.

காவல் துறையின் செயலற்ற தன்மை இத்துடன் நிற்கவில்லை. படுகாயமடைந்த வழக்கறிஞர்கள் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குகளைப் பதிவு செய்த காவல்துறை தாக்குதலுக்குள்ளான செய்தியாளர்களின் புகாரைப் பதிவு செய்யவே மறுத்தது.

செய்தியாளர்கள் எழும்பூரில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்குச் சென்று உயர்அதிகாரிகளைச் சந்தித்து முறையிட நடைபெற்ற முயற்சிகளும் வெற்றிபெறவில்லை. எனவே அனைத்து செய்தியாளர்களும் ஒன்றுதிரண்டு முதலமைச்சர் இல்லத்துக்குச் சென்று ஆர்ப்பாட்டம் செய்வதாக முடிவெடுத்ததன் காரணமாக மாலை 6 மணியளவில் புகார் பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கையின் நகல் வழங்கப்பட்டது.

அது மட்டுமல்ல, உயர் நீதிமன்றத்தில் நடந்த இந்தத் தாக்குதல் நிகழ்ச்சி குறித்து பெரும்பாலான ஊடகங்களிலோ, பத்திரிகைகளிலோ எத்தகைய செய்தியும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தி.மு.க. குண்டர்களால் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திக் கைதுசெய்து இழுத்துச் சென்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை இவ்வாறு செய்வது சட்டவிரோதம் மட்டுமல்ல, மனிதநேயமற்றதுமாகும்.

கருப்புக்கொடி காட்டிய விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரை காவல்துறை அப்புறப்படுத்தியிருந்தால் இந்தப் பிரச்னை வந்திருக்காதே என்று ஓர் உறுப்பினர் குறிப்பிட்டபோது முதலமைச்சர் கருணாநிதி அளித்த பதில் பல தகவல்களை அம்பலப்படுத்திவிட்டது.

உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் காவல்துறையினர்தான் வரக்கூடாதே என முதலமைச்சர் பதிலளித்திருக்கிறார்.

காவல்துறையினர் வரமுடியாத நிலையில்தான் தி.மு.க. குண்டர்கள் உள்ளே கொண்டுவரப்பட்டார்கள் என்பதை முதலமைச்சர் மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

தனக்கு வழக்கறிஞர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பும் என்பதை உணர்ந்தே அந்த எதிர்ப்பை அடக்குவதற்கு கழகத் தொண்டர்களை பயன்படுத்த வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

""நான்கைந்து பேர் முதல்வருக்குத் திருட்டுத்தனமாக கருப்புக்கொடி காட்டுவார்கள். அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டுமா, தி.மு.க.வினருக்கு உணர்ச்சி கிடையாதா, மானமுள்ளவன் இல்லையா, இரண்டு தட்டு தட்டமாட்டானா'' என்று தலைமை நீதிபதிகள் முன்னிலையில் வழக்கறிஞர்களைத் தாக்கியதை நியாயப்படுத்தும் வகையில் சட்ட அமைச்சர் பேசுகிறார்.

ஜனநாயகத்தில் ஆட்சியாளருக்கு கருப்புக்கொடி காட்டுவதென்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாகும். இந்தியாவில் முதல்முதலாக பிரிட்டிஷ் அரசின் சார்பாக அனுப்பப்பட்ட சைமன் கமிஷன் வந்தபோது காங்கிரஸின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்றன. ஆங்கிலேய அரசு அதை அனுமதித்தது.

பிரதமர் நேருவுக்கு எதிராக தி.மு.க. கருப்புக்கொடி காட்டியதை முதலமைச்சரே குறிப்பிட்டிருக்கிறார்.

பிரதமருக்கு மட்டுமல்ல, தமிழகம் வந்த மத்திய அமைச்சர் பலருக்கும் எதிராக தி.மு.க. கருப்புக்கொடி காட்டியது. அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு மீறப்படும் கட்டத்தில் கருப்புக்கொடி காட்டியவர்களை கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளது. ஆனால் நேருவுக்கே கருப்புக்கொடியா என்று காங்கிரஸ்காரர்கள் கொதித்தெழுந்து தி.மு.க. தொண்டர்களுக்கு எதிராக தாக்குதல்களை ஒருபோதும் நடத்தவில்லை.

ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குறிப்பிட்ட பிரச்னைகளுக்காக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது மரபு. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு எதிராகக் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது இதுவரை இல்லாத மரபாகும்.

1978-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தமிழகம் வந்தபோது அவருக்கெதிராக தி.மு.க. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் அவரை மதுரையில் கொலை செய்ய முயன்றது என்பது மறைக்க முடியாத வரலாறு ஆகும். அந்தக் கொடூரத் தாக்குதலில் இருந்து அவரைக் காப்பாற்றியவன் என்ற முறையில் இதை நான் சொல்கிறேன். இவ்வாறு தாக்கிய தி.மு.க.வினருக்கு எதிராக எதிர்த்தாக்குதல்களை நாங்கள் நடத்தவில்லை.

ஆட்சிக்கு வருவதற்கு முன் அறிஞர் அண்ணா கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் அவருக்கு முன் தி.மு.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான என்.வி. நடராசன் காங்கிரஸ் அமைச்சர்களை கல்லால் அடிக்க வேண்டும் என்று பேசியபோது அண்ணா உடனடியாக எழுந்து பகிரங்கமாக அவரைக் கண்டித்ததோடு மன்னிப்பும் கேட்க வைத்தார்.

ஜெர்மனியில் தனக்கு எதிரான கருத்துக்கொண்டவர்களையும், யூதர்களையும் காவல்படையை வைத்து இட்லர் ஒடுக்கவில்லை. மாறாக, நாஜிக் கட்சியைச் சேர்ந்த எஸ்.எஸ். படை என்ற குண்டர் படையை வைத்து சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் இட்லர். அதனால்தான் நாஜிகள் பாசிஸ்ட்டுகள் என்று வர்ணிக்கப்பட்டனர்.

தனக்கு எதிராகக் கருப்புக்கொடி காட்டிய ஐந்தாறு பேரைத் தாக்குவதற்கு முயன்ற தனது கட்சிக்காரர்களைத் தடுத்து அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தாலோ அல்லது காவல்படையினரை வைத்து அந்தச் சிறு கும்பலைப் பத்திரமாக வெளியே அனுப்ப முதலமைச்சர் ஆணை பிறப்பித்திருந்தாலோ அவருடைய மதிப்பு உயர்ந்திருக்கும்.

தமிழ்நாட்டில் ஜனநாயகத்தையும் தனிநபர் சுதந்திரத்தையும் நிலைநாட்டுவதற்காக எண்ணற்ற தலைவர்கள் தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார்கள். அவர்கள் எழுப்பிய ஜனநாயக மாளிகையை கருணாநிதியின் பாசிசப் படை தகர்க்க முயல்கிறது என்பதைத்தான் உயர் நீதிமன்ற நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.

-பழ.நெடுமாறன்

நன்றி தினமணி 05.50.2010

Tuesday, April 6, 2010

கருணாநிதியின் சிந்தனைகளைப் "பணம் கட்டி'ப் படிப்பதற்குப் பதிலாக பத்து மாடுகளை வாங்கி வைத்துக் கொண்டு மேய்க்கலாமே!​

ஒரு காலத்தில் ஒரே ஒரு பல்கலைக்கழகம்தான் தமிழனுக்கு உயர்கல்வி வழங்கும் பல்கலைக்கழகமாக இருந்தது.​ கங்காரு தன்னுடைய குட்டியைத் தன் உடற்பையில் பொத்தி வைத்துப் பாதுகாப்பதுபோல் ஏ.எல்.​ முதலியார் போன்றவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தைத் தங்களின் நெஞ்சோடு சேர்த்துப் பொத்தி வைத்துக் காத்தார்கள்.

நீதியும் நிர்வாகமும் அரசியல் சாசனப்படி பிரிக்கப்பட்டிருந்தன.​ அவைபோல் இல்லையென்றாலும் கல்வி அரசியலிலிருந்து தனித்தொதுங்கி,​​ அறிவை நோக்கமாகக் கொண்டு தன்போக்கில் வளர அன்றைய பெருந்தன்மையான அரசியல் இடமளித்தது.

இடைநிலைப் பள்ளி ஆசிரியரிலிருந்து துணைவேந்தர் வரை "தட்சிணை' வைக்காமல் இன்றைய அரசு அமைப்பில் எதுவும் நடக்காது என்பதால் கல்வியாளர்கள் சத்துணவு ஆயாக்கள் நிலைக்குத் தாழ்ந்து விடுவது தவிர்க்க இயலாததாகி விட்டது.​ சின்னத்தனமான அரசியல்,​​ எல்லா உயர்பதவிகளிலும் சின்னத்தனமானவர்கள் ஏறக் காரணமாகி விட்டது.

கடந்த மாதம் "அப்பாவுக்குத் தப்பாது பிறந்த பிள்ளை' என்னும் நூல் வெளியீட்டு விழாவுக்கு மதுரை சென்ற சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம்,​​ அழகிரியைப் பார்த்து மிகவும் பரவசநிலை அடைந்து,​​ தன்னை மறந்து பேசியிருக்கிறார்.

''முன்பெல்லாம் கோயிலுக்குச் சென்று திருவாசகம் பாடுவேன்!​ ஆனால் அழகிரியைச் சந்தித்த பிறகு இப்போது அழகிரிவாசகம்தான் பாடுகிறேன்.​ அண்ணனின் "காலைப் பிடித்துக் கொண்டிருப்பதுதான்' எனக்கு எப்போதும் சந்தோஷம்!''

என்னுடைய நாக்கால் மனிதனைப் பாட மாட்டேன் என்றார் நம்மாழ்வார்.​ என்னுடைய நாக்கால் கடவுளைப் பாடிய மடைமையை விட்டொழித்துவிட்டு அண்ணன் அழகிரியைப் பாடுகிறேன்;​ வீடு பேறு அளிக்க வல்லதாகச் சொல்லப்படும் தில்லைக் கூத்தனின் ''தூக்கிய திருவடியை''ப் பற்றிக் கொள்வதைவிட,​​ துணைவேந்தர் பதவியை அளிக்க வல்ல அண்ணன் அழகிரியின் திருவடியைப் பற்றிக் கொள்வதுதானே,​​ நடைமுறை வாழ்க்கைக்கு நம்பகமானது என்று அண்ணன் அழகிரியின் திருவடிப் புகழ்ச்சி பாடுகிறேன் என்கிறார் துணைவேந்தர் திருவாசகம்.

இந்தத் தரத்தில் உள்ள துணைவேந்தர்,​​ தான் பதவி வகிக்கும் பல்கலைக்கழகத்தில் "கருணாநிதியின் சிந்தனைகளை' முதுகலைப் படிப்புக்குப் பாடமாக்கப் போவதாகச் சொல்வது வியப்பல்லவே!​ "பேய் அரசு செய்தால் பிணந் தின்னும் சாத்திரங்கள்!'

கணிதம்,​​ அறிவியல்,​​ பொருளாதாரம்,​​ பொறியியல்,​​ மருத்துவம்,​​ மெய்யியல் என்பனவற்றிலெல்லாம் உயர் கல்வி என்பது போய் கருணாநிதியின் சிந்தனைகள்தாம் தமிழ்நாட்டில் உயர்கல்வி என்னும் நிலையில் திருவாசகமாவது தன் பிள்ளைகளை அந்த வகுப்பில் சேர்த்து விடுவாரா?​ கனிமொழியின் மகனாவது அதைப் படிக்க முன்வருவானா?

சங்க காலத்தில் தமிழ்நாட்டுக்கும் கிரேக்கத்துக்கும் நேரடித் தொடர்பு இருந்தது.​ அதே காலகட்டத்தில் சாக்ரடீஸ்,​​ பிளேட்டோ,​​ அரிஸ்டாட்டில் போன்ற எண்ணற்ற அறிஞர்கள் கிரேக்கத்தில் வாழ்ந்தனர்.

பதினான்கு-பதினாறாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா மறுமலர்ச்சி அடையக் காரணம் முன்னாளைய கிரேக்கச் சிந்தனைகள்தாம்.​ கிரேக்கத்தை ரோமாபுரி அடிமை கொண்ட பிறகும் கிரேக்கர்களை அடிமை கொள்ள முடியாமைக்குக் காரணம் அவர்களுடைய அறிவு வலிமைதான்.
அவ்வளவு சிறந்த கிரேக்கம் தமிழ்நாட்டோடு உறவு நிலையில் இருந்தது.​ யவனப் பெண்கள் இறக்குமதியானார்கள்;​ யவன மது இறக்குமதியானது;​ யவன வீரர்கள் இறக்குமதியாகி பாண்டியர்களின் அரண்மனைகளில் மெய்க்காப்பாளர்களாக விளங்கினார்கள்.​ ஆனால் யவன அறிவு மட்டும் இறக்குமதியாகவில்லை.

வள்ளுவன் போன்ற நிகரற்ற பேரறிஞர்கள் தமிழ்நாட்டை உலகின் அறிவுத் தரத்துக்கு உயர்த்தி நிறுத்தினார்கள் என்றாலும்,​​ இன்னொரு வகையான சிந்தனைப் போக்குக்கு வாய்ப்பு வந்தும் தமிழர்களால் தேடப் பெறாமல் கடல் பரப்புக்கு அந்தப் பக்கமே நின்றுவிட்டது.

நாம் சங்க காலத்தில் இழந்தது எவ்வளவு பெரிய சிந்தனைகளை என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளைக்காரன் கொண்டு வந்த அறிவு மூட்டையை அவிழ்த்தபோதுதான் தெரிந்தது.

வெள்ளைக்காரன் நமக்குச் செய்த தீமைகள் எண்ணிலடங்காதவை.​ அவனால் ஏற்பட்ட சில நன்மைகளில் ஒன்று திண்ணைப் பள்ளிக்கூடத்திலிருந்த நம்மைப் பெயர்த்தெடுத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் கொண்டு சேர்த்ததுதான்.​ ஆத்திசூடி மட்டும் படித்த நம்மை அரிஸ்டாட்டிலின் அரசியலையும் படிக்க வைத்ததுதான்.​ ஆனால் துணைவேந்தர் திருவாசகம் பல்கலைக்கழகத்தை மீண்டும் திண்ணைப் பள்ளிக்கூடம் ஆக்கி விடுவார் போலிருக்கிறதே!

கருணாநிதியின் ஒரு புகழ்பெற்ற சிந்தனை ''ஸ்ரீரங்கனாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளந்திடும் நாள் எந்நாளோ?''

இவர்களுக்கு வடிவங்களின் மீது சினமா அல்லது கடவுளின் மீதே சினமா?​ வடிவங்களின் மீதுதான் சினம் என்றால் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தக் கருணாநிதி ஏன் எழுந்து நிற்கிறார்?​ தேசியக் கொடி தேசம் அல்லவே!​ அதன் அடையாளம்தானே!

நீங்கள் ஒரு கந்தையை உயரத்தில் பறக்கவிட்டுத் தேசத்தை அடையாளப்படுத்திக் கொள்வதுபோல,​​ தேவைப்பட்டவன் எங்கும் பரந்து விரிந்து ஊடுருவி நின்று எல்லோரையும் எல்லாவற்றையும் தோற்றுவித்து அழிக்கும் இறையாற்றலை ஸ்ரீரங்கத்தில் "கிடந்த கோலத்தில்' ஒருவன் அடையாளப்படுத்திக் கொண்டால் என்ன குற்றம்?​ சீன எல்லையில் நிறுத்த வேண்டிய பீரங்கியை அவனிடம் கோட்டை விட்டுவிட்டு திருச்சி எல்லையில் நிறுத்துவதாகச் சொல்வதுதான் நவீன சிந்தனையா?

"ஒருவனே தேவன்' என்று திருமந்திரக் கோட்பாட்டைத் தி.மு.க.​ கடன் வாங்கிக் கொண்டதே!​ இவர்கள் தேவன் இருப்பதை அறிந்தது எவ்வாறு?​ இறை மறுப்புவாதிகள் ​ இன்று வரை விளக்கவில்லையே!

காணப்படாத ஒன்றை இருப்பதாகச் சொல்வது " உய்த்தறிந்து' சொல்லும் கருதல் அளவை என்னும் தர்க்க வழிப் பட்டதுதானே.

பானை இருப்பதால் அதைச் செய்த குயவன் ஒருவன் இருக்க வேண்டும்;​ அதுபோல் உலகு இருப்பதால் அதைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்க வேண்டும் என்பவை எல்லாம் உய்த்தறிந்து சொல்லப்படுபவைதானே.​ "ஒருவனே தேவன்' என்னும் கோட்பாட்டைத் தி.மு.க.​ கைக்கொண்டது "கருதல் அளவை' என்னும் தர்க்கப்படிதான் என்றால் அண்ணாவுக்கு முந்தைய வரிசையில் பெரியார் படத்தைத் தூக்கி விட்டுத் திருமூலர் படத்தைப் போட்டுக் கொள்ள வேண்டியதுதானே?

கருணாநிதி சிந்தனைகளை முதுகலை வகுப்புக்கு முதன்மைப் பாடமாக வைத்தால்,​​ எவராவது தப்பித் தவறிச் சேர்ந்து விட்டவர் மேற்கண்ட வினாக்களுக்கு நிகரான வினாக்களை எழுப்பினால்,​​ திருவாசகம் என்ன விடை சொல்வார்?​ எவ்வளவோ அறிவான ஆசிரியர்களும் பேராசிரியர்களும் இதே பல்கலைக்கழகத்தில் தரைமட்டத்தில் கிடக்க,​​ ஆங்கில மொழித் தடுமாற்றம் உள்ள என்னை விண்ணளவு தூக்கி நான் வசதியில் மிதக்கக் காரணமான கருணாநிதி என்று திருவாசகம் வெட்கமில்லாமல்கூட விடையிருப்பார்!​ அறிவுலகம் ஏற்குமா?

பாடம் கற்பிப்பவர் குறைபாடுடையவராக இருக்கலாம்;​ பாடமே குறைபாடுடையதாக இருக்கலாமா?​ எது அறிவு?​ நல்லதன் நலனையும்,​​ தீயதன் தீமையையும் உள்ளவாறு உணர்த்துவது அறிவு என்று தமிழ்மொழி கூறும்.

காந்தியின் சிந்தனைகளை முதுகலை வகுப்புக்கு முதன்மைப் பாடமாக வைக்கும்போது,​​ கருணாநிதி சிந்தனைகளை வைக்கக் கூடாதா என்று கேட்கிறார் திருவாசகம்.

சில ஆயிரம் வெள்ளைக்காரர்கள் பல கோடி இந்தியர்களை ஆள முடிவதற்குக் காரணம் தீமையோடு மக்கள் ஒத்துழைப்பதுதான் என்று அவர்களுக்கு உணர்த்தி,​​ ஆயுதங்களைத் திரட்டாமல் மக்களைத் திரட்டியது,​​ உலகு அதுவரை கண்டறியாத போர்முறை அல்லவா!

காந்தி ஒரு யுகத்தை வடிவமைக்க வந்த சிந்தனையாளர்;​ காந்தியும் கருணாநிதியும் ஒன்றா?

தமிழ்நாட்டில் மாம்பழக் கவிராயர் சீட்டுக்கவி எழுதிக் கொண்டிருந்த காலகட்டத்தில்,​​ ஜெர்மானியச் சிந்தனையாளர் இமானுவேல் காண்ட் தூய அறிவு குறித்த ஆய்வினை மேற்கொண்டிருந்தார்.​ காலமும் வெளியும் நம்முடைய மனத்தின் படைப்புகளே!​ அவை புறப்பொருள்களை ஒழுங்குபட அடுக்கி உணர்வதற்கான மனத்தின் கருவிகள் மட்டுமே என்றார் காண்ட்.

காண்ட்டைப் படிப்பதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா,​​ இல்லை,​​ கருணாநிதியின் பராசக்தி வசனத்தைப் படிப்பதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா?​ திருவாசகம் சொல்லட்டுமே!

வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான் -​ அடித்துச் சொன்னார் ​ காரல் மார்க்ஸ்.

உற்பத்திச் சாதனங்களைப் பொதுவுடைமை ஆக்காத சமூகத்தில் பணமே எல்லாமாக விளங்கும்.​ ஆட்சி,​​ சமூக மதிப்பு,​​ தலைமைப் பொறுப்பு அனைத்துமே பணத்தால் தீர்மானிக்கப்படும்.​ பணம் இல்லாத உண்மைகள் உறங்கும்;​ பணமுடைய பொய்மைகள் கோலோச்சும்.​ பணமுடைய முட்டாள் மதிக்கப்படுவார்;​ பணமில்லாத அறிஞர் இழிவுபடுத்தப்படுவார்!
திருவாசகங்கள் துணைவேந்தர்களாவார்கள்;​ கருணாநிதிகள் நாடாள்வார்கள் என்று மார்க்ஸ் பெயர் குறிப்பிடாமல் அனைத்தையும் பேசுவது போலில்லையா மேற்கண்ட வாதங்கள்.

​வர்க்க வேறுபாடற்ற சமூக உருவாக்கத்தைப் பற்றிப் படிக்க பல்கலைக்கழகம் வேண்டுமா?​ கருணாநிதியின் "இல்லற ஜோதி' வசனத்தைப் படிக்கப் பல்கலைக்கழகம் வேண்டுமா?​ திருவாசகம் சொல்லட்டுமே!

தாவோயியம்,​​ புத்தர்,​​ வள்ளுவர்,​​ ஏசு,​​ நபிகள் நாயகம்(ஸல்),​​ சங்க இலக்கியம்,​​ எபிகூரியன் கொள்கை,​​ ஸ்டோயிசிசம்,​​ மாக்கிவெல்லி,​​ சாணக்கியன்,​​ உபநிடதங்கள்,​​ ஹாப்சின் லெவியதான்,​​ ஜான் லாக்கின் அரசியல் தத்துவம்,​​ ரூசோ,​​ நீட்சே,​​ ஹியூம் இவர்களோடு நம்முடைய ஊர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களைப் படித்து முன்னேறிச் செல்வதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா?​ "திரும்பிப் பார்' வசனத்தைப் படித்துவிட்டுத் திரும்பி நடப்பதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா?

பல்கலைக்கழகங்களில் முதுநிலை வகுப்பில் கருணாநிதியின் சிந்தனைகளைப் "பணம் வேறு கட்டி'ப் படிப்பதற்குப் பதிலாக அந்தப் பணத்தில் பத்து மாடுகளை வாங்கி வைத்துக் கொண்டு மேய்க்கலாமே!​ பால் வளமாவது பெருகுமே!

மீனாட்சி அம்மன் கோயிலில் செருப்புக் குத்தகையை ஏலம் எடுப்பவர் ஒரு முதுநிலைப் பட்டதாரியாகவும் இருந்தால் அடுத்த துணைவேந்தராகி விடலாம்.​ கூடுதல் தொகைக்கு ஏலம் கேட்பதுதான் முக்கியமானது.
திண்ணைப் பள்ளிகளாகின்றன பல்கலைக்கழகங்கள்!

பழ.​ கருப்பையா

நன்றி தினமணி, 07.04.2010

Thursday, April 1, 2010

தி.மு.க. தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் யாருமே இல்லையா?

தி.மு.க. தமிழ்நாட்டு மக்களின் இனமான உணர்ச்சியால் உருவான கட்சி என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆயிரக்கணக்கான உண்மையான தொண்டர்களின் உழைப்பாலும் தியாகத்தாலும் உருவான தி.மு.க. என்ற மக்கள் இயக்கத்தை ஒரு குடும்பச்சொத்தாக மாற்றிய பெருமை கருணாநிதியை சேரும். இந்த இயக்கத்தை தனது குடும்பச்சொத்தாக மாற்ற கருணாநிதி நடத்திய நாடகங்கள் ஏராளம்.

தி.மு.க. தொடர்ந்து தனது குடும்பச்சொத்தாக இருக்க நல்ல கதை வசனத்தோடு புதிய நாடகத்தை எப்போதோ எழுதி முடித்துவிட்டார். தற்போது தனது வாரிசுகளை அந்த நாடகத்தில் நடிக்க வைத்து இயக்கிக்கொண்டிருக்கிறார் என்பதை கருணாநிதி உணர்ந்தவர்கள் நன்கு அறிவார்கள்.

இந்த நாடகத்தின் சம்பவங்களை நிகழ்த்தியவர், நிகழ்த்துபவர், நிகழ்த்த இருப்பவர் கருணாநிதியே. இந்த நாடகத்தில் அவரே தற்போது ஒரு முடிச்சைப் போட்டுள்ளார். அதற்காக அவர் எழுத்திய வசனங்களை அவருடைய துடுக்கு மகன் அழகிரி தற்போது பேசிவருகிறார்.

“கருணாநிதிக்குப் பிறகு யாரையும் தலைவராக நான் ஏற்க மாட்டேன்; அவர் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை”

... நான் கூறிய கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.

“நான் எண்ணுவதைக் கூறுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. என் மனசாட்சிப்படிதான் இது தொடர்பாக முதன்முதலில் எனது கருத்தைக் கூறினேன்.”“

“தி.மு.க.வில் ஜனநாயக ரீதியில் கட்சி மூலம் மட்டுமே தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதை ஏற்கிறேன்.”“

“திமுக ஜனநாயகக் கட்சி என்பதால், கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டால் நான் போட்டியிடுவேன். அதற்கு இப்போது அவசியம் இல்லை.
ஏனெனில், திமுக தலைவராக முதல்வர் கருணாநிதி இருப்பதால், அந்தப் பதவி பற்றி பேசத் தேவையில்லை.”

இப்போது மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருக்கிறார். எதிர்காலத்தில் கட்சிக்கு தேவைப்பட்டால் நான் போட்டியிடுவேன்“

போன்ற வசனங்கள் அழகிரியால் சிறப்பாக பேசப்பட்டுள்ளது.


“கருணாநிதிக்குப் பிறகு யாரையும் தலைவராக நான் ஏற்க மாட்டேன்; அவர் இடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை” என்று சொல்லிவிட்டு தனக்கு மட்டுமே அந்தத் தகுதி இருப்பதாக அழகிரி அப்போதே சொல்லியிருந்தால் நாடகத்தின் “கிளைமேக்ஸ்” உடனே வந்துவிடும். பிறகு நாடகத்தில் எந்த விருவிருப்பும் இருக்காது என்பது நாடக ஆசிரியர் கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும். அதனால் கிளைமேக்சை கொஞ்சம் தள்ளி வைத்துள்ளார்.

“தி.மு.க.” நாடக ஆசிரியர் கருணாநிதி போட்ட முடிச்சை மக்கள் வியக்கும்படி அவரே அவிழ்ப்பார் என்பதை நம்புவோமாக!
.......................

இந்த நாட்டில்,

“மக்களாட்சியின் பெயரால் நடைபெறும் அரசியல் நாடகத்தில் குடிமக்கள் மிகச்சாதாரண பார்வையாளர்களாக மட்டுமே இருக்கமுடியும்...

நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு நடிக்கும்போது அவர்கள் வீசும் கத்தி பார்வையாளர்களான நம்மீது விழுந்தால் நமக்கு சாகமட்டுமே தகுதியுண்டு, உரிமையுண்டு...

செத்துப்போன பார்வையாளனின் குடும்பத்தினர் ஆட்சியாளர்கள் சொல்லும்போது மட்டுமே அழவேண்டும்...

தேவைப்பாட்டால் செத்தவன் “என் மகன் இல்லை” என்று சொல்வதற்கும் அவனை பெற்றவர்கள் தயாராக இருக்கவேண்டும்.”
....................
நாடகம் நடக்கட்டும்! வாழ்க!! வளர்க!!!

Wednesday, November 18, 2009

தமிழகத்தின் உரிமைகள் பலவும் தில்லி பலிபீடத்தில் கருணாநிதியால் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன

முல்லைப்பெரியாறு அணை நீர்ப் பிரச்னையில் மீண்டும் கேரளம் தான் நினைத்ததைச் சாதித்துவிட்டது. தமிழகம் மறுபடியும் மறுபடியும் வஞ்சிக்கப்பட்டுவிட்டது.

1979-ம் ஆண்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக பெரியாறு அணைப் பிரச்னையில் கேரளம் பொய்யான புள்ளி விவரங்கள், அடிப்படை இல்லாத ஆதாரங்கள் இவற்றின் மூலம், தான் நினைத்ததைச் சாதித்து வருகிறது.

பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைத்து அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீரைக் கொண்டு சென்று மின்உற்பத்தியை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக அணை பலவீனமாக இருப்பதாகக் கூக்குரல் எழுப்பியது.

இதன் விளைவாக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் அணையைப் பார்வையிட்டு, பெரியாறு அணை பலமாக இருந்தாலும் கேரள மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்கும்படியும், தமிழக அரசு தனது செலவில் அணையை மேலும் பலப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்யும்படியும், இந்தப் பணிகள் முடிந்தபிறகு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் கூறினார். அதன்படி அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க தமிழகம் ஒப்புக்கொண்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.

அணையைப் பலப்படுத்தும் பணிகளைத் தமிழகம் மேற்கொள்வதற்கு, கேரளம் பலவகையிலும் முட்டுக்கட்டைகளைப் போட்டது. 1980-ல் தொடங்கிய இந்தப் பணிகள் 2001-ம் ஆண்டு வரை 21 ஆண்டுகளாக நடைபெற்றன. மராமத்து வேலைகள் முடிவடைந்த பிறகும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்குக் கேரளம் சம்மதிக்கவில்லை. எனவே தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. 2001-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக்கொண்டபோது, அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தருமாறு டாக்டர் டி.கே. மிட்டல் தலைமையில் 15 நிபுணர்கள் கொண்ட குழுவையும், டாக்டர் எஸ்.எஸ்.பிரார் தலைமையில் 20 நிபுணர்கள் கொண்ட குழுவையும் நியமித்தது.

இக்குழுவினர் பல்வேறு ஆய்வுகளை நடத்தி அணை பலமாக உள்ளது என்றும், 142 அடிக்கு தண்ணீர் மட்டத்தை உயர்த்தலாம் என்றும், பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் 2001-ம் ஆண்டில் தாக்கல் செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையை இழுத்தடித்துக் காலம் கடத்துகிற தந்திரத்தைக் கேரளம் கையாண்டது. இதன் விளைவாக 5 ஆண்டுகள் கடந்தன. இது கேரளத்துக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியாகும்.

இறுதியாக 2006 பிப்ரவரி 27-ம் நாளில் தலைமை நீதிபதி சபர்வால், நீதிபதிகள் தக்கர், பாலசுப்பிரமணியம் ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற ஆயம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரளம் கூறும் புகாருக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும், அணையின் நீர்மட்டத்தை 142அடிக்கு உயர்த்தலாம் என்றும் கூறியது. ஆனால் இத் தீர்ப்பை செயல்படுத்தவிடாத வகையில் கேரளம் 17-3-2006 அன்று சட்டமன்றத்தில் நதிகள் பாதுகாப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இதற்கு எதிராகத் தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடுத்தது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கேரள அரசு கொடுத்த விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதன் பின்னர் கேரளம் புதிய தந்திரத்தைக் கையாண்டது. புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. 2006-ம் ஆண்டு இறுதியில் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்த மத்திய வனத்துறை மட்டும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரளம் விண்ணப்பித்தது. அப்போது அத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த ராசாதான் இருந்தார். 2007 மே மாதத்துக்குப் பிறகு இத்துறையின் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு பொறுப்பேற்றார். கேரளத்தின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்ய இவர்கள் இருவரும் முன்வரவில்லை. அதன் விளைவாகத்தான் இப்போது ஆய்வு நடத்துவதற்குக் கேரளம் அனுமதி பெற்றுவிட்டது. இது கேரளத்துக்குக் கிடைத்த மூன்றாவது வெற்றியாகும்.

கேரளத்தின் புதிய சட்டம் செல்லாது என தமிழக அரசு தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மூன்றாண்டு காலத்துக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் முடிவு தனக்கு எதிராக இருக்கும் என்பதை உணர்ந்த கேரளம், விசாரணையின் இறுதிக் கட்டத்தில் புதிய பிரச்னையை வேண்டுமென்றே எழுப்பியது. பெரியாறு அணைப் பிரச்னையில் அரசியல் சட்டம் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் இந்த வழக்கை அரசியல் சட்ட ஆயம்தான் விசாரிக்க வேண்டும் எனக் கூறியது. வழக்கு நடந்த மூன்றாண்டு காலமும் இந்தக் கோரிக்கையை எழுப்பாத கேரளம் விசாரணையின் முடிவுக் கட்டத்தில் இந்தக் கோரிக்கையை எழுப்பியதற்கே காலம் கடத்தும் நோக்கமே காரணமாகும்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் கூடிய நீதிபதிகளின் ஆயம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை இப்போது அரசியல் சட்ட ஆயம் விசாரிக்கவோ, மாற்றவோ அதிகாரம் உண்டா என்ற கேள்வியை எழுப்பி, கேரளத்தின் முயற்சியைத் தமிழகம் முறியடித்திருக்க வேண்டும். கேரளம் பிறப்பித்த புதிய சட்டம் குறித்த தீர்ப்பை உடனடியாக வழங்கவேண்டும் எனவும் வற்புறுத்தியிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் முதலில் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், பிறகு தமிழக அரசின் ஆலோசனையைப் பெற்று அதன் விளைவாக அரசியல் சட்ட ஆயம் அமைப்பதற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்ற செய்தி அதிர்ச்சிகரமானது. மூன்றாண்டுகாலமாக நடைபெற்ற விசாரணையை முடக்கிப் போட்டதன் மூலம் கேரளம் நான்காவது வெற்றியை அடைந்துவிட்டது.

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கேரள அமைச்சர்களும் கேரளத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு புதிய அணை கட்டவேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரதமர் முதல் அனைவரிடமும் ஆதரவு திரட்டியுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ நமது நியாயத்தை எடுத்துக்கூறி ஆதரவு தருவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. இதுமட்டுமல்ல. நமது எதிர்ப்பை பிரதமரிடமும் மற்றவர்களிடமும் பதிவு செய்ய தமிழக அரசு முற்றிலுமாகத் தவறிவிட்டது.

கடந்த 16-9-09 அன்று மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் புதிய அணை கட்டுவது குறித்து ஆய்வு நடத்துவதற்கு கேரளத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டார். ஆனால் உடனடியாக இப்பிரச்னையை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்று இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய வேலையைத் தமிழக அரசு செய்யவில்லை. தில்லியில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் மதுரையில் 1-11-09 அன்று மத்திய இணையமைச்சரைக் கண்டிக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

ஆனால் 21-10-09 அன்று தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இணையமைச்சரைக் கண்டித்துக் கூட்டம் என்பது, பெரியாறு புதிய அணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டம் என மாற்றப்பட்டது. பிறகு அந்தக் கூட்டத்தை நடத்தும் துணிவும் தி.மு.க.வுக்கு இல்லை.

காங்கிரசோடு மத்திய அரசில் தி.மு.க.வும் அங்கம் வகிக்கிறது. ஆனால் காங்கிரசுக்கு எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன் தில்லியில் சாதிக்க முடிந்ததை கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. தில்லி அமைச்சருக்கு எதிராகக் கண்டனக் கூட்டத்தைக் கூட நடத்தும் துணிவு தி.மு.க.வுக்கு இல்லை. இது கேரளத்துக்குக் கிடைத்த ஐந்தாவது வெற்றியாகும்.

முல்லைப்பெரியாறு கேரள மாநிலத்தில் ஓடும் நதியாகும். தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே ஓடும் நதியல்ல என்ற தவறான வாதத்தை கேரளம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தபோதும், தமிழகத்தின் சார்பில் சரியான முறையில் அது மறுக்கப்படவில்லை. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி கேரளத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் உள்ளது.

மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவில் 20 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது. பெரியாற்றில் ஓடும் நீரின் மொத்த அளவு 4,767.9 மில்லியன் கன மீட்டராகும். இதில் ஐந்தில் ஒருபகுதி நீர், அதாவது சுமார் 960 மில்லியன் கன மீட்டர் நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகி கேரளத்துக்குள் பாய்ந்தோடுகிறது. அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்தினால் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் நீர் வெறும் 126 மில்லியன் கன மீட்டர் ஆகும். அதாவது தமிழ்நாட்டு எல்லைக்குள் உற்பத்தியாகி பெரியாற்றில் கலக்கும் நீரில் சுமார் 8-ல் ஒரு பகுதி நீரையே நாம் கேட்கிறோம். எட்டில் ஏழு பகுதி நீர் கேரளத்துக்கு நம்மால் வழங்கப்படுகிறது. எனவே பெரியாறு பன்மாநில நதியே தவிர, கேரள நதி அல்ல.

இந்த உண்மைகளை மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் உணர்த்துவதற்குத் தமிழக அரசு அடியோடு தவறிவிட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் புகார்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவது எப்படி என்பதற்கு மட்டுமே கருணாநிதி கவலைப்படுகிறாரே தவிர பெரியாறு அணை நீர் மீது தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டுவது குறித்து அவர் கவலைப்படவில்லை.

காவிரிப் பிரச்னையிலும் தமிழகத்தின் உரிமைகளை வற்புறுத்தி நிலைநாட்டுவதைவிட மத்திய அரசுக்கு நல்லபிள்ளையாக நடந்துகொள்வதிலேயே கருணாநிதி முழு கவனம் செலுத்தியதால் நாம் பேரிழப்புக்கு ஆளாகியுள்ளோம்.

1970-ம் ஆண்டில் காவிரிப் பிரச்னையில் பேச்சுவார்த்தைகள் பயன்தராத நிலையில், நடுவர் மன்றம் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக விவசாயிகளின் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டிருந்தது. பெங்களூரில் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் துணைத் தேர்தலில் இரு காங்கிரஸ் கட்சிகளும் போட்டியிட்டன. எனவே அதில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இந்திரா காங்கிரஸýக்கு இருந்தது.

அப்போது பிரதமர் இந்திரா, முதலமைச்சர் கருணாநிதியை அழைத்துப் பேசி, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெறுமாறும், தான் காவிரிப் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்த்து வைப்பதாகவும் கூறினார். அதை ஏற்று அன்று கருணாநிதி அந்த வழக்கைத் திரும்பப் பெற்றதன் விளைவு பின்னால் நமக்குப் பெரும் இழப்புகளைத் தந்தது.

1971-ம் ஆண்டு இந்திரா காங்கிரஸýடன் தி.மு.க. கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட இந்த உறவு வழிவகுத்தது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சரானார். ஆனால் இதற்குப் பிறகு கர்நாடகத்தில் இந்திரா காங்கிரஸின் சார்பில் முதலமைச்சரான தேவராஜ் அர்ஸ், காவிரியிலும் அதனுடைய துணை நதிகளிலும் சட்டவிரோதமாகவும், தமிழகத்தின் சம்மதமின்றியும் அணைகளைக் கட்டத் தொடங்கினார். 1990-ம் ஆண்டில் தான் உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி அப்போதைய பிரதமர் வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைக்க முன்வந்தார். இடைக்காலத்தில் 19 ஆண்டுகளில் அவ்வளவு அணைகளையும் கர்நாடகம் கட்டி முடித்துவிட்டது. அதன் விளைவாக தமிழகத்துக்குத் தண்ணீர் வருவது அறவே தடைப்பட்டுப்போனது.

நடுவர் மன்றத்தின் தலைவரான சித்ததோஷ் முகர்ஜி, நீதி தவறாதவர் என்ற பெயரெடுத்தவர். அவர் காவிரிப் பாசன பகுதி முழுவதையும் நேரில் பார்வையிட்டு உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொண்டார். எனவே அவரது தீர்ப்பு தங்களுக்கு எதிராகத்தான் அமையும் என்பதை உணர்ந்த கர்நாடக அரசியல்வாதிகள் அவரை நீக்குவதற்குரிய வழிமுறைகளைக் கையாண்டார்கள். அப்போது கர்நாடக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேவ கௌடா, சித்ததோஷ் முகர்ஜி மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொய்யான புகாரைத் தாக்கல் செய்தார். தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசனப் பகுதிகளை நடுவர் மன்ற நீதிபதிகள் பார்வையிட்டபோது, சில கோயில்களில் அவர்களுக்குப் பரிவட்ட மரியாதைகள் அளிக்கப்பட்டன. இவ்வாறு விலையுயர்ந்த பரிசுகளை இவர்கள் பெற்றிருப்பதால் நடுநிலை தவறிவிட்டார்கள் என தேவ கௌடா குற்றம் சாட்டினார். பிறகு அவரே கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகிவிட்டார். அப்போதும் இந்த வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அந்த வேளையில் தேவ கௌடாவின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவருக்கு எதிரான நிலையை எடுத்து வைக்கத் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் முன்வரவில்லை.

காவிரிப் பிரச்னையில் தொடக்கம் முதல் தமிழகத்தின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த தேவ கௌடாவை மத்தியில் பிரதமராக்கவும் தி.மு.க. துணைநின்றது என்பதுதான் துரோகத்தின் உச்சகட்டமாகும். தேவ கௌடா பிரதமரான பிறகும்கூட நடுவர் மன்றத் தலைவருக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெறவில்லை. அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. அமைச்சர்களோ அல்லது தமிழ் மாநில காங்கிரஸ் அமைச்சர்களோ சித்ததோஷ் முகர்ஜி மீது சுமத்தப்பட்ட பழியைப் போக்குவதற்கு எதுவுமே செய்யவில்லை. எனவே அவர் மனம் நொந்து தனது பதவியிலிருந்து விலகினார். கர்நாடகத்தின் நோக்கம் வெற்றிபெற்றது. இதற்குக் கருணாநிதி துணைநின்றார் என்பதுதான் வரலாற்றுச் சோகமாகும்.

காவிரிப் பிரச்னையில் துரோகம் தொடர்ந்தது. நடுவர் மன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பைக் கர்நாடகம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இந்தத் தீர்ப்பு வெளியானவுடன் அதைச் செயல்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு தீட்டியிருக்க வேண்டும். ஆனால் அதை மத்திய அரசு செய்ய முன்வரவில்லை. அவ்வாறு செய்ய வேண்டுமென்று தமிழக அரசும் வற்புறுத்தத் தவறிவிட்டது. 1992-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது. அப்போது பிரதமராக இருந்த குஜ்ரால் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்ற மத்திய அரசு ஒரு திட்டத்தை தீட்டி, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்தைப் பெற்று இறுதி முடிவு செய்யும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி 30-5-97-ல் மத்திய அரசு ஒரு வரைவுத் திட்டத்தை தீட்டி மாநிலங்களின் கருத்தை அறிய அனுப்பியது. இந்த வரைவுத் திட்டத்தின்படி முழுமையான அதிகாரம் கொண்ட நதி நீர் ஆணையம் ஏற்படுத்துவதற்கான யோசனை கூறப்பட்டது. இதையும் கர்நாடகம் ஏற்காமல் வழக்கில் வாய்தா வாங்கியபடியே இருந்தது.

இதற்கிடையில் தில்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமராக வாஜ்பாய் பொறுப்பேற்றார். பிரதமர் வாஜ்பாய் 6-8-98 அன்று கூட்டிய முதலமைச்சர்கள் கூட்டத்தில் புதிய வரைவுத் திட்டம் விவாதத்துக்கு வைக்கப்பட்டது. இதில் காவிரி நதிநீர் ஆணையம் ஏற்படுத்தும் யோசனை கைவிடப்பட்டு பிரதமர் தலைமையிலான மாநில முதலமைச்சர்களின் கூட்டுக் குழு அமைக்கப்படும் என்ற யோசனை கூறப்பட்டிருந்தது. எந்த அதிகாரமில்லாத இந்தக் குழு அமைக்கும் யோசனையை கருணாநிதி ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டார். இதன் விளைவாக நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்போ அல்லது இறுதித் தீர்ப்போ இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. பிரதமர் தலைமையிலான முதலமைச்சர் குழுவும் எதுவும் செய்யவில்லை. பிரதமர் வாஜ்பாய் கூறியதற்காக அவரது யோசனையைக் கருணாநிதி ஏற்றுக்கொண்டதுதான் நமக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

தில்லியின் விரல் அசைவுக்கு ஏற்ப ஆடுவதைக் கருணாநிதி மற்ற பிரச்னைகளிலும் தொடர்ந்தார். ஒகேனக்கல் பிரச்னை அவ்வாறுதான் ஆனது.

1998-ம் ஆண்டில் தமிழக கர்நாடக அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி பெங்களூர் குடிநீர்த் திட்டத்துக்கும், ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டுமே குடிநீர்த் திட்டங்கள் என்பதால் எந்த மாநிலமும் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. பெங்களூர் குடிநீர்த் திட்டத்தை உடனடியாக கர்நாடக அரசு நிறைவேற்றிவிட்டது. ஆனால் தமிழகம் ஜப்பானிய அரசின் உதவியைப் பெற்று இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்ததால் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஆயிற்று. இத்திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கியபோது கர்நாடகம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போது கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடியூரப்பா, ஒகேனக்கல்லுக்கே வந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அந்த வேளையில் கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. எனவே கூட்டணிக் கட்சியான காங்கிரசின் நலன் கருதி, ஒகேனக்கல் திட்டத்தை நிறுத்தி வைக்க கருணாநிதி தயங்கவில்லை.

“கர்நாடகத்தில் இன்று நடந்திடும் ஆளுநர் ஆட்சி முடிவுற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைய இருக்கும் புதிய ஆட்சி மலரும் வரை அவசியம் கருதி பொறுத்திருப்போம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்த பிறகு அந்த ஆட்சி நமது நியாயத்தை உணரும் என்ற அசையாத நம்பிக்கையோடு இப்போது தாற்காலிகமாக அமைதி காப்போம்’’ என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். தமிழக எதிர்க்கட்சிகள் எல்லாம் இதைக் கண்டித்தன. மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லியும் ஓர் உண்மையைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டதன் பேரில்தான் முதல்வர் கருணாநிதி ஒகேனக்கல் திட்டத்தை ஒத்திவைத்தார் என்று சொன்னார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்காக ஒகேனக்கல் திட்டத்தைத் தள்ளி வைக்க கருணாநிதி முன்வந்தபோதிலும் காங்கிரஸ் அங்கு வெற்றிபெறவில்லை. பா.ஜ.க.தான் வெற்றிபெற்றது. ஒகேனக்கல் திட்டம் கிடப்பில் போடப்பட்டதுதான் மிச்சம்.

தில்லியில் எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் அந்தக் கட்சிகளின் நலன்களைக் காக்க தமிழகத்தின் நலன்களைக் காவு கொடுக்க கருணாநிதி ஒருபோதும் தயங்கமாட்டார் என்பதற்கு மேலும் ஓர் உதாரணம் உண்டு.

2008-ம் ஆண்டு இறுதியில் இலங்கையில் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது, அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள், கட்சி வேறுபாடின்றி போராட்டங்களை நடத்தினார்கள். மக்களின் கொதிப்புணர்வைச் சமாளிப்பதற்காக முதலமைச்சர் கருணாநிதி அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் 15 நாள்களுக்குள் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவது என்ற தீர்மானத்தை முதலமைச்சர் கருணாநிதியே முன்மொழிந்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் வழிமொழிய ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் இந்திய அரசை மட்டுமல்ல, சிங்கள அரசையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் பெரும் உற்சாகத்துடன் இந்தத் தீர்மானத்தை வரவேற்றனர். இலங்கையில் போர் முனையில் சாவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழர்கள் புதிய நம்பிக்கையைப் பெற்றார்கள். ஆனால் இவையனைத்தும் வீணடிக்கப்பட்டன.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தில்லியிலிருந்து விரைந்து வந்து முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். அவரது பேச்சு, தனக்குத் திருப்தி அளித்ததாக கருணாநிதி அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜியோ போர் நிறுத்தம் பற்றி எதுவும் சொல்லவில்லை. அப்படியானால் கருணாநிதிக்கு திருப்தி அளித்த அம்சம் எது? அனுபவமிக்க முதலமைச்சரான கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும்? அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு; இதில் நானாகத் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. எனவே மீண்டும் அனைத்துக்கட்சிகளையும் கூட்டி இது குறித்து விவாதித்து எங்கள் முடிவை உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்று கருணாநிதி சொல்லியிருக்க வேண்டும். ஆனால் வந்தவரோ தில்லி அதிகாரபீடத்தின் தூதுவராயிற்றே. அவரையும் அவர் மூலம் தில்லி அதிகாரபீடத்தையும் திருப்திப்படுத்துவதுதானே கருணாநிதியின் நோக்கமும் கடமையும். எனவே உலகத் தமிழர்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி. தொடர்ந்து தமிழகத்தின் உரிமைகள் பலவும் தில்லி பலிபீடத்தில் கருணாநிதியால் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன. பதவி பேரத்தில் தமிழக உரிமைகள் பாழாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

நன்றி: தினமணி 18.11.2009