Friday, May 28, 2010

சிறு, குறு நிறுவனங்களுக்கு வேலை கொடுக்க 3 அமைச்சர்கள் எதிர்ப்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர ரக நிறுவனங்களுக்கு (எஸ்எம்இ) அரசு நிறுவனங்கள் அளிக்கும் டெண்டரில் ஒரு குறிப்பிட்ட அளவு ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்த கருத்துக்கு மூன்று அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

சிறு, குறு மற்றும் நடுத்தர ரக நிறுவனங்கள் நலிவடையாமல் காப்பது தொடர்பாக ஆராய பிரதமரின் முதன்மைச் செயலர் டிகேஏ நாயர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்தது. எஸ்எம்இ நிறுவனங்களுக்கு எளிதாக வங்கிக் கடன் கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்றும், அரசு கொள்முதல் செய்யும் பொருள்களில் 20 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர ரக நிறுவனங்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

ஆனால் அரசின் இந்த முடிவுக்கு பெட்ரோலிய அமைச்சர், வர்த்தக அமைச்சர், உள்துறை அமைச்சர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தங்கள் துறைகளுக்கு ஏற்ற உபகரணங்களைத் தயாரித்து அளிக்க முடியாத நிலையில் எஸ்எம்இ உள்ளன. மேலும் தாங்கள் வகுத்துள்ள தர நிர்ணயத்தை எட்டும் அளவுக்கு திறமை படைத்ததாகவும் இவை இல்லை என்று குறிப்பிட்டன. இருப்பினும் பாதுகாப்பு மற்றும் ரயில்வே அமைச்சர்கள் எஸ்எம்இ துறையிடம் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க ஒப்புக் கொண்டன.

நாடு முழுவதும் 2.6 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. சர்வதேச தேக்க நிலை காரணமாக இத்துறை கடும் சரிவைச் சந்தித்தது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இத்துறையின் பங்களிப்பு 8 சதவீதமாகும். உற்பத்தித் துறையில் 45 சதவீத பங்களிப்பும். ஏற்றுமதியில் 40 சதவீத பங்களிப்பையும் இவை கொண்டுள்ளன.

நன்றி தினமணி 28.05.2010

No comments: