Monday, August 2, 2010

உலக எண்கள் தமிழ் எண்களே!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைத் தொடர்ந்து மக்களிடம் தமிழ்பற்றிய விழிப்புணர்வு உருவாகியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை மாநகராட்சி, வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்க வேண்டும் என முனைந்திருப்பதும் சரியான திசைவழியில் ஒரு நல்ல நடவடிக்கையே. அத்துடன் தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என்ற முதல்வரின் அறிவிப்பும் பல்லாண்டு கால தமிழ் உணர்வாளர்கள் கோரிக்கையின் வெற்றியே.

ஆங்கிலத்தில் எழுதும்போதும், பேசும்போதும் பிழை ஏற்பட்டுவிடக் கூடாது என அஞ்சும் படித்தவர்கள் தமிழில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், பேசலாம் என எண்ணுகின்றனர். அதனால்தான் தமிழ் எண்களை ஆங்கில எண்கள் என்றும், அரபு எண்கள் என்றும், உலக எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் ஆளுக்கு ஆள் பிழைபடப் பேசியும், எழுதியும் வருகின்றனர்.

இப்போது உலகமெல்லாம் வழக்கில் இருக்கும் எண்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 தமிழ் எண்களே என்பதைத் தமிழ் மக்களும், சில தமிழ் அமைப்புகளும் அறியாமல் இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. இதையறிந்த தமிழறிஞர்கள் மக்களிடம் பரப்பவில்லை; அதனால்தான் இதனை ஆங்கில எண்கள் என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இந்த அறியாமையைப் போக்காதது அறிந்தவர்களின் குற்றம்தானே!

மாநில மொழிகளில் வாகன எண் பலகையை எழுதலாம் என்று இந்திய வாகனச் சட்டம் 1989 கூறுகிறது. அதுபோலவே 1998-ம் ஆண்டு தமிழ்நாட்டிலும் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. வாகன உரிமையாளர்கள் விரும்பினால் ஊர்திகளில் தமிழிலும் பதிவு எண்களை எழுதிப் பொருத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது.

தமிழக அரசு தமது ஆணையில் எண்களைப் பொறுத்தவரை உலக எண்களையே (அரபிக் நம்பர்ஸ்) பயன்படுத்தலாம் என்று அறிவித்தது. இதன் மூலம் இந்த உலக எண்கள் அராபிய எண்கள் என்றே அரசும் கருதுகிறது என்றே கொள்ள வேண்டியுள்ளது.

"எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும்' என்றும் "எண்னென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்னென்ப வாழும் உயிர்க்கு' என்றும் தமிழிலக்கியம் கூறுகிறது. ""உயிர்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்களாகும். இதில் ஒரு கண்ணாகிய தமிழ் எழுத்தை எடுத்துக் கொண்டோம். ஆனால், மற்றொரு கண்ணாகிய தமிழ் எண்களை விட்டுவிட்டோம். அவற்றைப் பயன்படுத்த அரசு ஆவன செய்யுமா...? '' என்று சட்டப்பேரவையிலேயே கேட்கப்பட்டது; கேட்டவர் அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் குமரி அனந்தன். "தமிழ் எண்கள் மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வரப்படுமா?' என்று அப்போது தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகனிடம் கேட்கப்பட்டது.

"இதுகுறித்து முதல்வர், கல்வியமைச்சர் ஆகியோருடன் பேசினேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட மைல் கற்களில் தமிழ் இருந்துள்ளது. படிப்படியாகக் கவனிக்கலாம் என்று இருக்கிறோம்...'' என்று அவர் ஒரு நேர்முகத்தில் விடை கூறியுள்ளார் (ராணி: 4-8-1996).

மறுக்க வேண்டிய சில தமிழ் அமைப்புகளும், "இப்போது வழக்கில் இருக்கும் எண்கள் தமிழ் எண்கள் இல்லை' என்ற எண்ணத்தில், "தமிழ் எண்களைப் பயன்படுத்த வேண்டும்' என்றே தீர்மானங்கள் இயற்றின. இதனை மறுக்காமல் தமிழறிஞர்கள் ஏன் அமைதி காத்தனர் என்றே தெரியவில்லை.

இந்த எண்களைப் பற்றிய குழப்பம் இப்போதுதான் இப்படி எழுந்துள்ளது என்று எண்ண வேண்டாம். 1960-ம் ஆண்டு "மத்திய கல்வி ஆலோசனைக் குழு'க் கூட்டத்திலும் இந்தப் பிரச்னை எழுந்துள்ளது.

இந்தியாவில் கல்வி சம்பந்தமாக உலகத்தில் வழங்கி வரும் எண்களையே பயன்படுத்துவது என்று மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று "கல்விக்கு அராபிய எண்களே - ஆலோசனைக் குழு முடிவு' என்ற தலைப்பில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

இதுபற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ""அவை அரபிய எண்கள் அல்ல தமிழ் எண்களே'' என்று தம் இதழாகிய "குயில்' ஏட்டில் 24-1-1960 அன்று எழுதினார். "அன்றைய தமிழகக் கல்வியமைச்சர் சி. சுப்பிரமணியம் அந்தக் குழுவில் இந்த எண்கள் தமிழ் எண்களே என ஏன் சொல்லவில்லை?' என கண்டனம் தெரிவித்தார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் வரிவடிவம் எப்படியிருந்தது என்பதை அரசினர் ஆராய்ச்சித்துறையின் சுவடியில் கண்டால் இன்றைய 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 ஆகியவை தமிழ் எழுத்துகளே என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தத் தமிழ் எண்களை இங்கு வணிகத் தொடர்புடைய அராபியர் கொண்டு போயினர்; அவர்களிடமிருந்து மேல்நாட்டினர் கற்றுக்கொண்டனர். ஒரு மாற்றமும் செய்யாமல் அவர்கள் அப்படியே எடுத்தாண்டனர்; அவர்கட்குக் கிடைத்த அன்றைய உருவமே இன்றைய உருவம்; ஆனால் தமிழகத்தில் அந்த உருவம் நாளடைவில் மாற்றத்துக்கு உள்ளாயிற்று...!'' என்று பாரதிதாசன் எழுதினார்.

டாக்டர் மு. வரதராசனார் தம் "மொழி வரலாறு' என்னும் நூலில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என்ற எண்கள் தமிழ் எண்களே என்பதை கல்வெட்டுத் துணை கொண்டு நிறுவியுள்ளார். அந்தக் கல்வெட்டுச் சான்று (படம்). அவர் எழுதுகிறார்: "1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என இன்று உலகமெங்கும் எழுதப்படும் எண்கள் அரபி எண்கள் என்று கூறப்படுகின்றன. ஆனால், அராபியர்களுக்கு இந்த எண்களின் பழைய வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் இவற்றை இந்திய எண்கள் என்கிறார்கள். வடநாட்டு அறிஞர்களுக்கு இவற்றின் தோற்றம் பற்றி ஒன்றும் விளங்கவில்லை.

தமிழ்நாட்டின் பழைய எண் வடிவங்களைப் பற்றி இவர்கள் அறியாமல் இருத்தலே இவ்வாறு அனைவரும் தடுமாறுவதற்குக் காரணம் ஆகும். அரபி எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் இவ்வாறு தடுமாறிக் கூறப்படும் இந்த எண்கள் (1, 2, 3 முதலியவை) பழைய தமிழ் எண்களே என்பது முன்பக்கத்தில் உள்ள பழந்தமிழ் எண் வடிவங்களை நோக்கின் உணரப்படும்.

இவற்றை நோக்கி எண்ண வல்லார்க்கு 1, 2, 3 முதலிய எண்களின் எழுத்து வடிவம் தமிழகம் உலகத்துக்கு அளித்த கலையே என்னும் உண்மை புலப்படும்...''- இவ்வாறு எழுதிய டாக்டர் மு.வ., கல்வெட்டு ஆதாரத்தையும் படமாக்கி வெளியிட்டுள்ளார் (ஆதாரம்: "மொழி வரலாறு' - பக்கம் 358).

இந்த எண்களைத் "தமிழ் எண்கள்' என்று உலகம் ஏற்றுக் கொண்டாலும், உள்ளூர் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஏன் என்பதுதான் தெரியவில்லை. தமிழில் ஏதேனும் நல்லவை தென்பட்டால் அவை பிறமொழியிலிருந்து வந்ததென்று கூறுவதும், ஆங்கிலத்திலிருந்து கிடைத்ததென்று கருதுவதும் நம்முடைய மரபாகிப் போனது. இந்தத் தாழ்வு மனப்பான்மை அகல வேண்டும்.

இவை தமிழ் என அறிந்த பிறகும், இதன் மாற்று வடிவங்களையே தமிழ் எனக்கூறி புழக்கத்துக்குக் கொண்டுவர முயல்வது சரியன்று; உலகம் ஏற்றுக் கொண்டதை நாமும் உவப்புடன் ஏற்போம்.

செம்மொழித் தமிழின் சிறப்புகளுள் தலையாய மணிமகுடம் இதுவென ஓங்கி ஒலிப்போம். தன் பிள்ளையை உலகம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை எந்தத் தாயும் கண்ணீர் மல்க வரவேற்கவே செய்வாள்.

தமிழகம் உலகத்துக்கு அளித்திருக்கும் மாபெரும் கொடை இது. இதற்கு உலகமே தமிழ்மொழிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. இதற்காக தமிழ்மக்கள் பெருமைப்பட வேண்டும்; பெருமைப்படுவதற்கு அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிந்திருக்க வேண்டுமே!

இனிமேலும் ஐயம் வேண்டாம்; உலக எண்கள் தமிழ் எண்களே!

நன்றி: தினமணி (02.08.2010)

7 comments:

ஜோதிஜி said...

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைத் தொடர்ந்து மக்களிடம் தமிழ்பற்றிய விழிப்புணர்வு உருவாகியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பிரபாகரன் இது உண்மையா?

seeprabagaran said...

தமிழ் மொழி - தமிழ் இனம் தொடர்பான புரிதலும் வழிப்புணர்வும் ஒவ்வொரு தமிழினுக்கும் தேவை. அது இல்லையென்றால் இன்றைக்கு பாலஸ்தின மக்களுக்கு நேர்ந்துள்ளகதி எதிர்காலத்தில் நமக்கும் ஏற்படுவது உறுதி. நமது கடமையை உணர்ந்து செயலாற்றுவோம்.

தமிழ் நாடன் said...

பகிர்ந்தமைக்கு நன்றி! ஜோதிஜி கேட்ட கேள்விதான் எனக்கும் எழுந்தது. பின்னர் இது தினமணி கட்டுரை என்பதை அறிந்தவுடன் கேட்கவில்லை.

சாமக்கோடங்கி said...

தமிழில் இன்னும் அறியப்படாத பல அதிசயங்கள் ஒளிந்துள்ளன...

seeprabagaran said...

ஜோதிஜி, தமிழ்நாடன், சாமகோடங்கி ஆகியோருக்கு வணக்கம். தமிழின விடியலக்காக தொடர்ந்து உழைப்போம்.

Three said...

"உலக எண் குறியீடுகள்!! எல்லாம் தமிழ் குறியீடுகள் சார்ந்தவையே" எனும் கூற்று ஆதாரமற்றது.

வெறும் வரிவடிவத்தின் (கிளிஃப்ஸ்) நெளிவு சுழிவுகளின் ஓரிரு பகுதிகள் ஒத்திருப்பதை வைத்து மேற்படி கூற்றை ஏற்க இயலாது. பிரபாகரனின் பதிவு தனில் அறிவியல்/தொல்லியல்/மொழியியல்/எழுத்தியல் தொடர்பான எந்த ஒரு "தெளிவான" ஆதாரமும் தரப்படவில்லை.

அடிப்படையில், நவீன எண் குறியீடுகளான அரபி வழிவந்த குறியீடுகளின் மூலம் இந்திய துணைக்கண்டத்தை சார்ந்தது என்பது முற்றிலும் உண்மை. இது போக, ஒவ்வொரு கலாச்சாரமும் தனித்தனி எண்குறியீட்டு வழிகளை காலப்போக்கில் வளர்த்துக்கொண்டுள்ளது. எவை, ரோமானிம், சீனம், சுமேரு, எகிப்தியம், மயன்.. இன்னும்பல..

தமிழை பொறுத்தவரை, பழங்காலங்களில் புழக்கத்திலிருந்த வரிவடிவங்கள் மூன்று வகை. 1 . தமிழி எனப்படும் பிரம்மி சார்ந்த முறை; 2 . தமிழ் கிரந்தம்; 3 . வட்டெழுத்து மற்றும் கோலெழுத்து. இதில் தமிழ் பிரம்மியே மிக பழமையானது. இதே பிரம்மி வரிவடிவத்தின் மற்ற்றொரு பரிமாணத்தை வடமாநில மொழிகள் குறிப்பாக வடமொழி பயன்படுத்திவந்தது. காலப்போக்கில் அந்தந்த மொழிகள் பல்வேறு காரணங்களினால் பிரம்மி வரிவடிவத்தை தனக்கென ஒரு பாணியில் மாற்றிக்கொண்டது. ஆனாஆவன்னா எழுத்துக்களுக்கும் எண் வடிவத்துக்கும் இது பொருந்தும். கிரந்தம் அல்லது தமிழ்-கிரந்தம் தமிழ் மொழி வடிவில் வடமொழி ஒலிகளை பதிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று. வட்டெழுத்தும் கொலேழுத்தும் தமிழி வடிவத்தின் வழிவந்த அதிக வளைவுகள் சுழிவுகள் கொண்ட ஒரு வரிவடிவப்பரிமானமாய் காணப்படுகிறது. இதில் நவீன தமிழ் எழுத்து மற்றும் எண் குறியீடுகள் வட்டெழுத்து மற்றும் கிரந்த முறை போலவே உள்ளன. அதிலும் கிரந்த முறையின் தாக்கம் அதிகம். (மலையாளமோ, வட்டெழுத்து/கொலேழுத்தின் மற்றொரு புதிய பரிமாணமான மலையான்ம வடிவத்தையும், தமிழ்-கிரந்த வடிவத்தையுமே முற்றிலுமான தன்னுள் கொண்டுள்ளது)

இங்கே குறிப்பிட்டு நோக்கவேண்டியது என்வென்றால், மூவாயிரத்திற்கும் அதிகமான வருடங்களின் வரிவடிவப்பரிமான மாற்ற வரலாற்றின் ஒரு விளிம்பில், மூல பிரம்மி வரிவடிவத்தின் வாரிசுகளான பல்வேறு மொழிகளும் அவை சார்ந்த/தழுவிய மொழிகளும் உள்ளன. இந்த வரலாறு ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு எழுத்து/எண் வடிவத்திற்கும் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாறுதல்களை பல்வேறு காரணங்களில் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை (அச்சியந்திரம் புழக்கதிலாகும் வரை) ஏற்படுத்தி தற்போது மூலத்திற்கும் நவீனத்திற்கும் ஒற்றுமை மிக மிக குறைவாகவோ முற்றிலும் ஒப்பு இல்லாமலோ காணப்படுகின்றது. அச்சிலேறாதவரை, ஒவ்வொரு மொழியும் அதிகப்படியான மாற்றங்களை கண்டுள்ளன.

தமிழும் மலையாளமும் மயிரிழை பிரிவில் வளர்ந்த மொழிகள் என்றாலும் ஓரிரு நேரடி ஒற்றுமைகள் தவிர, வடிவ பாணி ஒன்றுபோலிருந்தபோதும், வேற்றுமைகள் பல பல.

இப்படி இருக்கையில், இந்திய துணைக்கண்டத்தில் இருந்து சில ஆயிரம் வருடங்களுக்கு முன் சில வியாபாரிகள் வழியாகவும் நாடோடி அறிஞர்/ஆன்மீகவாதிகள் மூலமாகவும் அரபி நாடுகளுக்கு பலவழிகளில் பல காலபுள்ளிகளில் சென்றடைந்து அங்கும் பரிணாமப்பட்டு பரிதாபப்பட்டு பலமாற்றமடைந்து, அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளை அடைந்து அங்கும் பட்டு பட்டு பட்டு கடைசியில் 17ம் நூற்றாண்டுவாக்கில் அச்சுப்பட்டு நாம் இன்று புழங்கும் நவீன எண் வடிவம் கொண்டது.

இந்த வடிவமுறையும் நம் தமிழ் எண் வடிவ முறையும் வம்சாவழி-மரத்தில் (ஃபெமேலி ட்ரீ) ஆளுக்கொரு இலையில் வேறு வேறு திசையில் தொங்கிக்கொண்டிருக்கின்றன. இவற்றுக்கிடையில் ஒற்றுமை காண்பதென்பது அண்டார்டிக் மொழிக்கும் எகிப்திய மொழிக்கும் சீன மொழிக்கும் இடையே ஒற்றுமை காண முயல்வது போல ஒரு செயலாகும்..

இதற்கு மேல் இதைப்பற்றியான விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.

Three said...

"உலக எண் குறியீடுகள்!! எல்லாம் தமிழ் குறியீடுகள் சார்ந்தவையே" எனும் கூற்று ஆதாரமற்றது.

வெறும் வரிவடிவத்தின் (கிளிஃப்ஸ்) நெளிவு சுழிவுகளின் ஓரிரு பகுதிகள் ஒத்திருப்பதை வைத்து மேற்படி கூற்றை ஏற்க இயலாது. பிரபாகரனின் பதிவு தொலைக்காட்சிகளில் வரும் சித்தமருத்துவ ஆன்மைக்குறைவுமருந்தின் பிரச்சார விளம்பரம் போன்றுள்ளது. அறிவியல்/தொல்லியல்/மொழியியல்/எழுத்தியல் தொடர்பான எந்த ஒரு "தெளிவான" ஆதாரமும் தரப்படவில்லை.

அடிப்படையில், நவீன எண் குறியீடுகளான அரபி வழிவந்த குறியீடுகளின் மூலம் இந்திய துணைக்கண்டத்தை சார்ந்தது என்பது முற்றிலும் உண்மை. இது போக, ஒவ்வொரு கலாச்சாரமும் தனித்தனி எண்குறியீட்டு வழிகளை காலப்போக்கில் வளர்த்துக்கொண்டுள்ளது. எவை, ரோமானிம், சீனம், சுமேரு, எகிப்தியம், மயன்.. இன்னும்பல..

தமிழை பொறுத்தவரை, பழங்காலங்களில் புழக்கத்திலிருந்த வரிவடிவங்கள் மூன்று வகை. 1 . தமிழி எனப்படும் பிரம்மி சார்ந்த முறை; 2 . தமிழ் கிரந்தம்; 3 . வட்டெழுத்து மற்றும் கோலெழுத்து. இதில் தமிழ் பிரம்மியே மிக பழமையானது. இதே பிரம்மி வரிவடிவத்தின் மற்ற்றொரு பரிமாணத்தை வடமாநில மொழிகள் குறிப்பாக வடமொழி பயன்படுத்திவந்தது. காலப்போக்கில் அந்தந்த மொழிகள் பல்வேறு காரணங்களினால் பிரம்மி வரிவடிவத்தை தனக்கென ஒரு பாணியில் மாற்றிக்கொண்டது. ஆனாஆவன்னா எழுத்துக்களுக்கும் எண் வடிவத்துக்கும் இது பொருந்தும். கிரந்தம் அல்லது தமிழ்-கிரந்தம் தமிழ் மொழி வடிவில் வடமொழி ஒலிகளை பதிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று. வட்டெழுத்தும் கொலேழுத்தும் தமிழி வடிவத்தின் வழிவந்த அதிக வளைவுகள் சுழிவுகள் கொண்ட ஒரு வரிவடிவப்பரிமானமாய் காணப்படுகிறது. இதில் நவீன தமிழ் எழுத்து மற்றும் எண் குறியீடுகள் வட்டெழுத்து மற்றும் கிரந்த முறை போலவே உள்ளன. அதிலும் கிரந்த முறையின் தாக்கம் அதிகம். (மலையாளமோ, வட்டெழுத்து/கொலேழுத்தின் மற்றொரு புதிய பரிமாணமான மலையான்ம வடிவத்தையும், தமிழ்-கிரந்த வடிவத்தையுமே முற்றிலுமான தன்னுள் கொண்டுள்ளது)

இங்கே குறிப்பிட்டு நோக்கவேண்டியது என்வென்றால், மூவாயிரத்திற்கும் அதிகமான வருடங்களின் வரிவடிவப்பரிமான மாற்ற வரலாற்றின் ஒரு விளிம்பில், மூல பிரம்மி வரிவடிவத்தின் வாரிசுகளான பல்வேறு மொழிகளும் அவை சார்ந்த/தழுவிய மொழிகளும் உள்ளன. இந்த வரலாறு ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு எழுத்து/எண் வடிவத்திற்கும் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாறுதல்களை பல்வேறு காரணங்களில் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை (அச்சியந்திரம் புழக்கதிலாகும் வரை) ஏற்படுத்தி தற்போது மூலத்திற்கும் நவீனத்திற்கும் ஒற்றுமை மிக மிக குறைவாகவோ முற்றிலும் ஒப்பு இல்லாமலோ காணப்படுகின்றது. அச்சிலேறாதவரை, ஒவ்வொரு மொழியும் அதிகப்படியான மாற்றங்களை கண்டுள்ளன.

தமிழும் மலையாளமும் மயிரிழை பிரிவில் வளர்ந்த மொழிகள் என்றாலும் ஓரிரு நேரடி ஒற்றுமைகள் தவிர, வடிவ பாணி ஒன்றுபோலிருந்தபோதும், வேற்றுமைகள் பல பல.

இப்படி இருக்கையில், இந்திய துணைக்கண்டத்தில் இருந்து சில ஆயிரம் வருடங்களுக்கு முன் சில வியாபாரிகள் வழியாகவும் நாடோடி அறிஞர்/ஆன்மீகவாதிகள் மூலமாகவும் அரபி நாடுகளுக்கு பலவழிகளில் பல காலபுள்ளிகளில் சென்றடைந்து அங்கும் பரிணாமப்பட்டு பரிதாபப்பட்டு பலமாற்றமடைந்து, அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளை அடைந்து அங்கும் பட்டு பட்டு பட்டு கடைசியில் 17ம் நூற்றாண்டுவாக்கில் அச்சுப்பட்டு நாம் இன்று புழங்கும் நவீன எண் வடிவம் கொண்டது.

இந்த வடிவமுறையும் நம் தமிழ் எண் வடிவ முறையும் வம்சாவழி-மரத்தில் (ஃபெமேலி ட்ரீ) ஆளுக்கொரு இலையில் வேறு வேறு திசையில் தொங்கிக்கொண்டிருக்கின்றன. இவற்றுக்கிடையில் ஒற்றுமை காண்பதென்பது அண்டார்டிக் மொழிக்கும் எகிப்திய மொழிக்கும் சீன மொழிக்கும் இடையே ஒற்றுமை காண முயல்வது போல ஒரு செயலாகும்..

இதற்கு மேல் இதைப்பற்றியான விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.

இப்படிக்கு
பாக்ஸி.