Friday, October 29, 2010

என்கவுன்டர் - முன்னாள் ஐ.ஜி. க்கு ஆயுள் தண்டனை

நக்ஸலைட் தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் காவல்துறை முன்னாள் ஐ.ஜி- லட்சுமனாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வியாழக்கிழமை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது பற்றிய விவரம் வருமாறு: 1970ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி நக்ஸலைட் தலைவர் ஏ. வர்கீஸ், திருநெல்வேலி அருகே உள்ள வனப் பகுதியில் போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இது குறித்து 1998-ம் ஆண்டு சிஆர்பிஎப் கான்ஸ்டபிள் ராமச்சந்திரன் நாயர், காவல்துறை அதிகாரிகள் லட்சுமணா மற்றும் விஜயன் உத்தரவின்பேரில் வர்கீûஸ கொன்றதாக ஒப்புக் கொண்டார். உடனே இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது.

இந்த வழக்கின் முதல் குற்றவாளியான சிஆர்பிஎப் கான்ஸ்டபிள் பி. ராமச்சந்திரன் நாயர் (இப்போது உயிருடன் இல்லை), காவல்துறைத் தலைவர் லட்சுமணா உத்தரவின் பேரில் வர்கீûஸ கொலை செய்துள்ளார் என்று நீதிபதி எஸ். விஜயகுமார் தனது தீர்ப்பில் தெரிவித்தார். ரூ. 10 ஆயிரம் அபராதத் தொகையை லட்சுமணா செலுத்த வேண்டும் என்றும், இந்தத் தொகை உயிரிழந்த நக்ஸலைட் தலைவர் வர்கீஸ் குடும்பத்துக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி கூறினார். மற்றொரு குற்றவாளியான காவல்துறை முன்னாள் துணை ஆணையர் பி. விஜயன் குற்றமற்றவர் என அறிவித்து வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வைக்கம் புருஷோத்தமன் நாயர் வாதிட்டார். சாதாரண நபரை, நக்ஸலைட்டாக சித்தரித்து அவரது கைகளைக் கட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். இது முன்கூட்டியே திட்டமிட்ட கொலை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தீர்ப்பைக் கேட்டதும் லட்சமணாவின் மனைவி மற்றும் வழக்கறிஞரான அவரது மகள் ஆகியோர் கண்கலங்கினர். தனக்கு 70 வயதாகிறது என்றும், அதைக் கருத்தில் கொண்டு தண்டனையைக் குறைக்குமாறு லட்சுமணா, நீதிபதியிடம் கோரினார். தன்னை திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவரை திருவனந்தபுரம் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீஸôர் மேற்கொண்டனர்.

இந்தத் தீர்ப்பு தங்கள் குடும்பத்துக்கு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக வர்கீஸின் சகோதரர் தாமஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மற்றொரு குற்றவாளியான விஜயனை நீதிமன்றம் விடுவித்தது வேதனையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். போலி என்கவுன்ட்டர் நடத்தும் காவல்துறையினருக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கும் என்று முன்னாள் நக்சல் தலைவர் கே. அஜிதா கூறினார். இருப்பினும் இப்போதும் ஜம்மு காஷ்மீர் மற்றும் மேற்கு வங்கத்தில் இதுபோன்ற போலி என்கவுன்ட்டர்கள் நடப்பதை அவர் சுட்டிக் காட்டினார். இந்தத் தீர்ப்பை வர்கீஸின் நண்பர் குரோ வாசு வரவேற்றுள்ளார்.

போலீஸ்-பத்திரிகையாளர் மோதல்: நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே திரண்டிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் காரர்களுக்கும் போலீஸôருக்கும் இடையே சிறிது மோதல் ஏற்பட்டது. லட்சுமணாவை புகைப்படம் எடுப்பதற்கு போலீஸôர் தடுத்ததால் இந்தப் பிரச்னை ஏற்பட்டது.

நன்றி தினமணி 29.10.2010

2 comments:

ஜோதிஜி said...

நண்பா 1970 ஆ தலை சுற்றுகிறது

seeprabagaran said...

அந்த என்கவுண்டர் நடந்த போது காவல்துறைக்கு போதுமான முன் அனுபவம் இல்லை. அதனால்தான் மாட்டிக்கொண்டனர்.

என்கவுண்டர் என்பது சட்டப்படியான நடவடிக்கை என்பது போன்ற ஒரு தோற்றத்தை காவல்துறையும், ஊடகங்களும், அதிகாரமையங்களும் மக்களிடம் ஏற்படுத்தி வைத்துள்ளது.

மக்களும் வழக்கம்போல் அதை ஒரு செய்தியாகவே படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு என்கவுண்டருக்கும் பின்னால் உள்ள அரசியலை அறிந்துகொள்ள தயராக இல்லை...

வழக்கம்போல் நாமும் பாரதமாதாவுக்கு ஜே! சொல்வோம்...

எங்கள் பாரத தேசமென்று தோள் தட்டுவோம்!