Thursday, December 9, 2010

தமிழக அரசின் முகத்திரையைக் கிழித்த சீமான் விடுதலை

தமிழக மீனவர்களை சிறிலங்க கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவருவதைக் கண்டித்து பேசியதற்காக நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமானை, தேசப் பாதுகாப்பு (National Security Act - NSA) சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது செல்லாது என்று கூறி, அவரை விடுதலை செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, தேச பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு தவறாகவே பயன்படுத்தியுள்ளது என்பதை நிரூபித்துள்ளது.

தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்யும் உத்தரவை கூடுதல் ஆணையர் பிறப்பிக்க முடியாது என்று கூறி, எவ்வாறு இச்சட்டம் அவசர கதியில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், ஹரி பரந்தாமன் ஆகியோர் கொண்ட அமர்வு, அரசு செய்த தவறை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி, அரசு வழக்கறிஞரை நோக்கி பல கேள்விகளை கேட்டுள்ளது.

“தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டால், இங்கு படிக்கும் சி்ங்கள மாணவர்கள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்” என்று சீமான் கூறியது எதிர்காலத்தை கருத்தில் கொண்டுதான் பேசியதுதானே தவிர, அது வன்முறையை தூண்டும் நோக்கம் கொண்டதல்ல என்று நீதிபதிகள் கூறியுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.

அதுமட்டுமின்றி, சீமான் பேசியதன் காரணமாக வன்முறை ஏதாவது ஏற்பட்டதா என்றும் அரசு வழக்கறிஞரை கேட்டுள்ளனர். அப்படி ஏதும் நடக்காதபோது தேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று எவ்வாறு எடுத்துக்கொள்வது என்றும் கேட்டுள்ளனர். நீதிபதிகளின் கேள்விகள் எதற்கும் அரசு வழக்கறிஞரால் பதில் கொடுக்க முடியவில்லை.

அதுமட்டுமல்ல, சீமானின் பேச்சு உணர்ச்சியை தூண்டக்கூடியதாக இருந்தது என்று அரசு தலைமை வழக்கறிஞர் கூறியதற்கு நீதிபதிகள் எழுப்பிய கேள்வியே மிகவும் கவனிக்கத்தக்கதாகும். சிறிலங்க இராணுவத்தினர் இசைப்பிரியா என்ற தமிழ் பத்திரிக்கையாளரை மானபங்கப்படுத்தி கொலை செய்த காட்சிகளை பிபிசி உள்ளிட்ட பன்னாட்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றனவே, அவைகள் கூட உணர்ச்சியைத் தூண்டக்கூடியதுதான், அதற்காக அரசு அந்த தொலைக்காட்சிகள் மீது நடவடிக்கை எடுத்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


ஆனால் இதற்கெல்லாம் தமிழக அரசின் வழக்கறிஞரிடம் எந்த பதிலும் இல்லை. அதனால்தான் நீதிபதிகள் கேட்டனர், இது என்ன அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா? என்று. அதுவே உண்மையாகும்.

தமிழக மீனவர்கள் கால் நூற்றாண்டிற்கும் மேலாக சிறிலங்க கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு, 500க்கும் அதிகமானோர் அவர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிறகும், அவர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு, இந்தியாவின் நாடாளுமன்றத்திலேயே சிறிலங்காவை தங்களது நட்பு நாடு என்று அறிவிக்கிறது. இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் தமிழின உணர்வு பொங்கும் தமிழக அரசும் துணைபோகின்றது.

தமிழக மீனவர்களை கண்டுகொள்ளாமல், சிறிலங்க அரசுடன் நட்பு பாராட்டும் மத்திய, மாநில அரசுகளின் முகத்திரையை கிழிப்பதாக சீமான் பேச்சு இருந்ததால் அவர் தேசப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் அடைத்தனர். எனவே ஐயத்திற்கிடமின்றி இது அரசியல் பழிவாங்கு நடவடிக்கையே.

இந்த தேசத்தின் சொத்தை, பெரு நிறுவனங்கள் கொள்ளையடிக்க ஏதுவாக ‘கொள்கை’ வகுத்து செயல்படும் மத்திய, மாநில அரசுகள்தான் இந்த தேசத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைக் காட்டிக்கொள்கின்றனர்.


தேசப் பாதுகாப்பு என்று கூறி, இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்காக உரிமைக் குரல் கொடுப்பவர்களை, குறைந்தது ஓராண்டிற்காவது உள்ளே வைப்பதற்குத்தானே தேச பாதுகாப்புச் சட்டமே நிறைவேற்றப்பட்டது? ஓராண்டுக் காலத்திற்கு உள்ளே வைத்தால் மீண்டும் மக்கள் நலன் பற்றியெல்லாம் பேச மாட்டார்கள் அல்லவா?

அதுவும் இந்த தமிழ் திருநாட்டை ஆளும் முதலமைச்சர், சட்டத்தையும் நீதிமன்றத்தையும் எப்போதும் மதிப்பவர். அதனால்தான் சீமானை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கோரி அவருடைய சகோதரர் தொடுத்த மனுவை விசாரணைக்கே அனுமதிக்காமல் ‘வாய்தா’ வாங்கியே பல மாதங்கள் இழுத்தடித்தனர். கடைசியாக அவர்கள் தங்கள் மனுவை வேறு ஒரு நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று மனுச் செய்து, அது இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட முதல் நாளிலேயே விடுதலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்க்கத்தானே, மனு விசாரணைக்கு வரும்போதெல்லாம் அரசு வழக்கறிஞர் வாய்தா கேட்டு இழுத்தடித்தார்.

இந்த ஆளும் கட்சிதான் எதிர்க்கட்சித் தலைவரை வாய்தா ராணி என்று வர்ணித்து, போக்குவரத்தை முழுமையாக பாதிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்தியது. எந்த அளவிற்கு இந்த அரசு வெட்கமற்றது என்பதை நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளிக்காட்டியுள்ளது.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பது அதன் அரசமைப்புச் சட்டதோடு நின்று விடுகிறது. அரசமைப்பில் மக்களுக்கு அளிக்கப்பட்ட சிந்தனைச் சுதந்திரத்தில் இருந்து கருத்துச் சுதந்திரம் வரை அனைத்துச் சுதந்திரங்களையும் பறிக்கவே தேச பாதுகாப்புச் சட்டம், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், குண்டர்கள் சட்டம் என்று மக்களை மிரட்டும் சட்டங்களை நிறைவேற்றி வைத்துள்ளார்கள். இந்தச் சட்டங்களையெல்லாம் சரியாக பயன்படுத்துவதாகயிருந்தால், போபர்ஸ், காமன்வெல்த் ஊழலில் இருந்து 2ஜி அலைக்கற்றை ஊழல் வரை கொள்ளையடித்த நமது தேசத்தின் தலைவர்கள் பலர் சிறையில் இருக்க வேண்டும். உள்ளபடியே தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவுள்ள இவர்களை எல்லாம் உள்ளே வைத்தால், இன்றைக்கு இந்த நாட்டை ஆண்டுக் கொண்டிருக்கிற பல தலைகளின் இடங்கள் காலியாகத்தான் இருக்கும்.

அதுவும் ஒரு நாள் நடந்தே தீரும்.

நன்றி: தமிழ்.வெப்துனியா.காம்

3 comments:

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சூப்பர் பகிர்வு நண்பரே நன்றி

subra said...

செம செருப்படி நண்பரே ,உறைக்குமா
இதுகளுக்கு

மனசாட்சி said...

எல்லாம் சரிதான் எத்துனை பேருக்கு புரியுது செவிடன் காதில் ஊதிய......???? உங்களின் இந்த பதிவுக்கு நன்றி