Thursday, November 26, 2009

இந்தியத் தாய்க்குப் பதினெட்டு நாக்குகள்; இருநூறு கோடி கைகள்!

மராத்தியச் சீற்றம் மாண்புடையதே!-பழ. கருப்பையா

“போரில் காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்” என்று மராத்தியர்களின் வீரத்தைத் தூக்கிப் பிடிக்கிறான் பாரதி. இந்தியப் பண்பாட்டின் உருவாக்கத்திலும் அதன் மீட்டெடுப்பிலும் அவர்களுக்குக் கணிசமான பங்கு உண்டு.

சிவசேனையின் வரவுக்குப் பின்னர் மராத்திய இலக்கியங்கள் போற்றப்பட்டன. மராத்தியர் என்னும் இன உணர்வு வளர்க்கப்பட்டது. மராத்தி மொழி, மராத்திய வீரம், மராத்தியப் பண்பாடு என்று இவை இனங்கண்டு போற்றப்படுவதற்கு அவர்களுக்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்கிறது என்பது ஒரு சோகந்தான்!

இவ்வளவுக்கும் பெறற்கரிய மாவீரன் சிவாஜியைப் பெற்றவர்கள் அவர்கள், ஒரு பஞ்சு மிட்டாய் பெறுவதற்குக் கூட வெள்ளைக்காரனுக்கு மனுப்போட்டு மண்டியிட்டு நின்ற மிதவாதிகளிடமிருந்து, இந்திய விடுதலைப் போராட்டத்தை மீட்டு, அதற்கு வேகங்கொடுத்து அந்தப் போரை முன்னெடுத்துச் சென்ற மகான் திலகரைப் பெற்றவர்கள் அவர்கள்.

மராத்தி மொழியில்தான் பதவி ஏற்பு உறுதிமொழியைப் படிக்க வேண்டும் என்று குட்டிச் சிவசேனா வீறு கொண்டு கிளம்பியது மகாராஷ்டிரச் சட்டமன்றத்தில். ஆனால் இந்தியில்தான் உறுதிமொழியை ஏற்பேன் என்று முலாயம்சிங் கட்சிக்காரர் வம்பு செய்தார். மராத்தியர்களின் வாக்குகளைப் பெற்று, மராத்தியர்களுக்குத் தொண்டு செய்வதற்காக, மகாராஷ்டிர சட்டமன்றத்துக்குள் நுழைகிறவன், தன்னுடைய தொண்டினை மராத்திய மொழியிலிருந்து தொடங்குவதுதானே நியாயம்!

மராத்தி மொழி தெரியாதென்றால் “அதைக் கற்றுக் கொள்ள ஆறுமாதம் அவகாசம் கொடுங்கள்” என்று சொல்லியிருந்தால் ஒப்புக் கொண்டிருப்பார்களே! அதை விட்டுவிட்டு “இந்திதான் தேசிய மொழி; அதில்தான் உறுதி எடுப்பேன்” என்றால், இந்திமொழி ஆட்சி மொழியாக இருக்கும் உத்தரப் பிரதேசத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ போக வேண்டியதுதானே! மும்பையில் என்ன வேலை?

ஆனால் சிவசேனைக்காரர்களிடம் உள்ள ஒரு மோசமான பழக்கம், ஒத்துவராதவர்களை உதைப்பது. இப்படிச் செய்வதால் கடைசியில் மராத்தி மொழி நியாயங்கள் மறக்கடிக்கப்பட்டு, வன்முறை குறித்த விவாதமும், வன்முறையாளர்களிடம் மக்களுக்குள்ள வெறுப்பும்தான் தலைதூக்கி நிற்கும். நியாயமான தாய்மொழிக் கொள்கை தோற்றுப் போகும் நிலை ஏற்படும்.

தாயையும், தாய்மொழியையும் போற்றச் செய்வதற்குக்கூட அடியாள்களின் பக்கபலம் வேண்டுமென்பது நினைக்கவே அருவருப்பானது. தமிழ்நாட்டில் மறைமலை அடிகள் தொடங்கி அண்ணா வரை தமிழ் வளர்த்த யாரும் தாதாக்களுமில்லை; தாதாக்களின் துணையை நாடியவர்களுமில்லை.

மேலும் பால்தாக்கரேயை விமர்சித்துவிட்டு, யாரும் தப்பிச் சென்றுவிட முடியாது என்று வெளிப்படையாக மிரட்டுவது, முற்ற முழுக்கச் சிவசேனையைத் தாதாக்களின் கூட்டமாகவே காட்டுகிறது. கடவுளும் காந்தியும்கூட விமர்சனத்துக்கு உள்பட்டவர்கள்தான் என்றால், பால்தாக்கரே எந்த மூலைக்கு? விமர்சனத்தை அனுமதித்துத் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ளாத எந்தத் தலைவனும், தன்னுடைய செயல்களின் பாரம் தாங்காமல் ஒருநாள் முறிந்து போவான்.

நடந்து முடிந்த தேர்தலில் சிவசேனை வாங்கிய அடி கடுமையானதுதான். அதில் மனங்கலங்கிப் போன பால்தாக்கரே நாற்பது ஆண்டுகளாகத் தான் செய்த பணியை மறந்து நன்றி கொன்றுவிட்டார்களே என்று மராத்தியர்களை வசை பாடியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி பால்தாக்கரேயிடமிருந்து விலகி வந்த ராஜ் தாக்கரேக்கும், தமிழ்நாட்டில் விஜயகாந்துக்கும், ஆந்திரத்தில் சிரஞ்சீவிக்கும், தனித்தனியே நிற்பதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்து, வாக்குகளைச் சிதறடித்து, நாடாளுமன்றத்தில் ஐம்பது இடங்களைக் கூடுதலாகக் கைப்பற்றியது.

சிவசேனை கட்டிக் காத்த மராத்திய உணர்வு தோற்றுவிட்டது என்பது சரியான மதிப்பீடு ஆகாது. அந்த உணர்வை முன்னெடுத்துச் செல்லும் வல்லமையும், தலைமைக் கூறுகளுமுடைய அண்ணன் மகன் ராஜ் தாக்கரேயை விரட்டி விட்டு, ஒரு திறமையுமில்லாத, சவசவத்த உப்புக்குச் சப்பாணியான தன் மகனைத் தலைவர் பதவிக்கு உயர்த்திய வாரிசு அரசியலுக்குப் பால்தாக்கரே கொடுத்த விலைதான் சிவசேனையின் சரிவு. இப்போது இந்தத் தள்ளாத வயதிலே அண்ணன் மகனோடு போட்டி அரசியல் நடத்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார். எவ்வளவு நாளைக்கு மகனைப் பக்கத்திலேயே வைத்துக் கொண்டு பொத்திக் காக்க முடியும்?

பொதுவாக ஒரு வெறுப்பின்மீது கட்டப்பட்டு, வெறுப்பின் மீதே வளர்க்கப்பட்ட கட்சி சிவசேனைக் கட்சி. அது குறுகிய காலத்துக்குப் பயனளிக்குமே ஒழிய, நீண்ட காலத்துக்கு உகந்த அரசியல் ஆகாது. தன்னினத்தை நேசிப்பது என்பது வேறு; மாற்றினங்களின் மீது வெறுப்பை உமிழ்வது என்பது வேறு.

மராத்தியர்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறிக்க வந்தவர்கள் என்று தொடக்ககாலத்தில் தமிழர்களைச் சிவசேனை அடித்து விரட்டியது. பெருந் தொழில்நகரமான மும்பைக்குத் தொழிற்சாலைகளிலும் தனித்தும் கூலி வேலை செய்ய வந்தவர்கள்தாமே தமிழர்கள். ஆசியாக் கண்டத்தின் அசிங்கமான பகுதி என்றும், ஆடு மாடுகளை அடைத்து வைக்கும் கொட்டில்கூட இன்னும் சுகாதாரமாக இருக்கும் என்று சொல்லத்தக்க அளவுக்குள்ள தாராவிச் சேரிதானே தமிழர்களின் வாழிடம். இதில் போட்டிக்கும் பொறாமைக்கும் என்ன வேலை?

அவர்கள் சுரண்ட வந்தவர்கள் இல்லையே; சுரண்டப்பட்டு எலும்பும் தோலுமாய் ஆனவர்கள்தாமே. அண்ணாந்து பார்த்து வியக்கின் எழில் மிகுந்த மும்பையை உருவாக்கும் முயற்சியில் எழில் குலைந்து போனவர்கள்தாமே.

உனக்கு வெளி முதலீடு வேண்டும்; அந்த முதலீட்டைக் கொண்டு வருபவன் எந்த இனமாகவும், எந்த நாடாகவும் இருக்கலாம். சுரண்டுபவனிடம் உனக்கு இனப் பகை இல்லை; சுரண்டப்படுபவனிடம் இனப் பகை கொள்கிறாய். மாற்று இன முதலாளிகளையும் வெளியேறச் சொல்ல வேண்டியதுதானே.

இப்போது தமிழர்களை விட்டுவிட்டார்கள்; ஏழைப் பிகாரிகளின் மீது பாயத் தொடங்கியிருக்கிறார்கள்.

பாகுபடுத்தி அறியத் தெரியாத சிவசேனையின் குருட்டுத்தனமான இனப் போற்றுதலில் ஒரு குற்றமுண்டு. ஏராளமான புகார்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளான மராத்திப் பெண்மணியான பிரதிபா பாட்டீலைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட்டணி தர்மத்தை உடைத்துக் கொண்டு போய் ஆதரித்தார்கள். தவறானவர்களால் நாடு கெடுவது ஒருபுறமிருக்கட்டும்; உங்கள் இனமாவது வாழுமா?

பால்தாக்கரேயை இடத்தில் வைத்தால் கருணாநிதியை வலத்தில் வைக்க வேண்டும். இருவருமே ஒரே மாதிரியான கோணல் சிந்தனையாளர்கள். ஆ. ராசா ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்துவிட்டாரே என்னும்போதும், உயர் நீதிமன்ற நீதிபதி தினகரன் அரசு நிலத்தை வளைத்துக் கொண்டு விட்டாரே என்னும்போதும், அவர்களெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் மேல்ஜாதியினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று சொல்லி அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசு இயந்திரத்தை வேறு பயன்படுத்துவார் கருணாநிதி.

கருணாநிதி, பால்தாக்கரேக்கெல்லாம் தடித்த நாக்கு; எதையும் பேசுவார்கள்.

நல்லவன் தன் இனத்துக்கும் மாற்றானுக்கும்கூட நன்மையே செய்வான். கெட்டவன் மாற்றானுக்கு மட்டுமில்லை; தன் இனத்துக்கும் கூடக் கேடே செய்வான்.

இப்போது சச்சின் டெண்டுல்கர் இன உணர்வுக் கொள்கைக்கு எதிராகக் கொம்பு சீவி விடப்பட்டுள்ளார்.

“நான் முதலில் இந்தியன்; இரண்டாவதாகத்தான் மும்பைக்காரன்; மும்பை அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தம்” இது டெண்டுல்கரின் ஞானமொழி!

ஒருகாலத்தில் மும்பைக்குக் குஜராத்திகள் சொந்தங் கொண்டாடினார்கள். அப்போது மும்பையை மீட்பதற்குத் தன்னுடைய ஒரு சுண்டுவிரலைக்கூட அசைக்காத டெண்டுல்கர், இப்போது மும்பையை இந்தியாவுக்குத் தானம் வழங்குகின்ற ஞானகுருவாக மாறிவிட்டார்.

ஆனால் டெண்டுல்கரின் முதிர்ச்சியற்ற இயற்கை அல்லாத பேச்சு நேர்மையே வடிவான பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் பிகாரிகளைப் போட்டுச் சிவசேனை குதறி எடுத்ததுதான். பால்தாக்கரே போன்ற முறையற்ற வழிமுறைகளைக் கையாளுவோரால், நியாயமான மொழி வழி இனக் கொள்கை கூடச் சிக்கலுக்குள்ளாகிறது.

ஒருகாலத்தில் "மதராஸ் மனதே' என்று தெலுங்கர்கள் சென்னைக்குச் சொந்தம் கொண்டாடினார்கள். அப்போது கருணாநிதி பராசக்திக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார். அன்றைய முதலமைச்சர் ராஜாஜி, மத்திய அமைச்சரவையில் அமைச்சராவதற்குத் தனக்கொரு மகன் நரசிம்மன் இருந்தும், மாநிலங்களவை உறுப்பினராக்குவதற்குத் தனக்கொரு மகள் நாமகிரி இருந்தும், தெலுங்கர்களின் மாபெரும் கிளர்ச்சிகளுக்கிடையே, தன்னுடைய நிகரற்ற செல்வாக்கை தில்லியிலே செலுத்திச் சென்னையை மீட்டுத் தந்தார். ராஜாஜி இல்லாவிட்டால் சென்னைதான் எங்கே?

மும்பை இந்தியாவுக்குச் சொந்தம் என்று ஒரு மராத்தியன் டெண்டுல்கரே சொல்கிறான் என்றால் பால்தாக்கரே கொதித்தெழ மாட்டாரா?

மும்பை இந்தியாவுக்குச் சொந்தம் என்று டெண்டுல்கர் சொன்னவுடன் மகாராஷ்டிர காங்கிரஸ் முதலமைச்சரும் கைதட்டுகிறார். ஏதாவது புரிந்துதான் கைதட்டுகிறாரா?

உலகம் யாவையும் தாம் உளவாக்கி, பின்பு அவற்றை நீக்கி, தான் மட்டும் நீங்காமல், எல்லையிலா விளையாட்டுக்குடையவனாகத் திகழ்கிறானே எம்பெருமான், அவனுக்குத் தானமாகக் கொடுப்பதற்கு வள்ளல் மாபலிக்குச் சொந்தமாக இரண்டடி மண் இருந்தது.

இந்தியாவுக்குச் சொந்தமாக அந்த இரண்டடி மண்ணையாவது டெண்டுல்கர் காட்டட்டுமே. எல்லா மண்ணும் மொழிவழி இனங்களுக்குத்தானே சொந்தம்.

இந்தியா சீனாபோல் ஒரே மொழி; ஒரே இனம் என்னும் அமைப்புடைய நாடில்லை. இந்தியத் தாய்க்குப் பதினெட்டு நாக்குகள்; இருநூறு கோடி கைகள்!

பந்தடிக்கிறவன் பந்துதான் அடிக்க வேண்டும்; பாரதி போல் ஞானம் புகலக் கூடாது.

பாரதி வரிசைப்படுத்துவான்: “வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய பாரத மணித்திருநாடு”.

மொழிவழி இனங்களை எம்மான் காந்தி இனங்கண்டு உடன்பட்டதால்தான் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் தோன்றின. அவற்றிற்கான அரசுகளும் பிறந்தன.

சிவசேனையின் வெறுப்பு அடிப்படையிலான மூர்க்கப் போக்குகள் நல்ல கொள்கைகளையும், நிலைகொள்ள விடாமல் செய்து விடுகின்றன என்றாலும் பால்தாக்கரேயின் மராத்தியச் சீற்றம் மாண்புடையதே!

நன்றி: தினமணி 25.11.2009

3 comments:

ஜோதிஜி said...

உண்மை

ஜோதிஜி said...

ஆக்கம் அதிகம் தேவை பிரபாகரன். முத்து என்றாலும் அதிக எண்ணிக்கையும் மாலையில் கோர்த்தால் தானே அழகு. நேரம் இல்லை என்று சொல்லாதீர்கள். வாய்ப்பு இருக்கும்.

சீ. பிரபாகரன் said...

ஜோதிஜி அவர்களுக்கு வணக்கம்.

நேரம் இல்லை என்று சொல்லமாட்டேன். கடந்த மே மாதத்திலிருந்து எனது மனம் ஒருநிலையில் இல்லை...

எதை எழுதுவது, எதை விடுவது, யாரை எதிர்ப்பது, யாரை ஆதரிப்பது, என்ன செய்வது என்ற தடுமாற்றம் என்னிடமுள்ளது. மொழி இனம் தொடர்பான கட்டுரைகளுக்கு பின்னூட்டம் எழுதும்போது கடுமையான கோபத்துடன் தாருமாறான வார்த்தைகள் வந்து விழுகிறது. இதனாலே என்னால் தொடர்ந்து இயங்க முடியவில்லை....

விரைவில் இயங்குவேன்...