Tuesday, January 12, 2010

தேவை மதுவிலக்கு என்னும் மலர்க்கிரீடம்!

சில தினங்களுக்கு முன்பு புத்தாண்டு தினத்தையொட்டி அசம்பாவிதச் சம்பவங்களைத் தடுக்கும்விதமாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களைப் போக்குவரத்து போலீஸôர் கண்காணித்து கைது செய்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்ற அரசின் எச்சரிக்கையை மதித்து நடந்திருந்தால் தண்டனையிலிருந்து தப்பித்திருக்கலாம் என கைதானோர் அதன்பிறகு எண்ணியிருப்பார்களோ என்னவோ?

புத்தாண்டு தினத்தில் மட்டும் தமிழகத்தில் ரூ. 47 கோடி அளவுக்கு மதுவிற்பனை நடைபெற்றிருப்பதாகவும், இது கடந்த ஆண்டைவிட 10 சதவிகிதம் அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுஅருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பது இதன்மூலம் வெட்டவெளிச்சமாகிறது.

சுப நிகழ்ச்சிகளோ, துக்க நிகழ்ச்சிகளோ பார்ட்டி என்ற பெயரில் மதுகுடித்து கூத்தடிப்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அந்தப் பட்டியலில் ஒருசில ஆண்டுகளாகப் புத்தாண்டையும் மதுமயக்கத்திலேயே வரவேற்கும் பு(ம)து வகை கலாசாரம் சென்னை போன்ற பெரிய நகரங்களை மட்டுமன்றி சின்னஞ்சிறிய கிராமங்களிலும் வேரூன்றத் தொடங்கியுள்ளது.

முகவரி கேட்டு வருவோருக்கு வழிசொல்ல முன்பெல்லாம் தலைவர்களின் சிலைகள், பூங்காக்கள், கோயில்கள் உதவின. இப்போது டாஸ்மாக் கடைகளே பெரிதும் உதவுகின்றன. வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளைத் திறந்து மது ஆறு வற்றாமல் பாயும்படி பார்த்துக் கொள்வதால் நாட்டில் நடப்பது "குடி'யாட்சிதான் என்று ஆட்சியாளர்கள் ஒருவகையில் மார்தட்டிக் கொள்ளலாம்.

மயக்கம் தரும் "கள்'ளைத் தரும் என்பதாலேயே பெரியார் தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்}இது கடந்த கால வரலாறு. ஆனால், அவரிடம் "பாஸ்மார்க்' வாங்கியதாகக் கூறிப் பெருமை கொள்ளும் தலைவர்களோ, இளைஞர்களின் எதிர்காலத்தை விழுங்கும் "டாஸ்மாக்' கடைகளைத்தான் திறந்து வைக்கின்றனர். இது நிகழ்காலம் சொல்லும் கசப்பான உண்மை.

திராவிடம் என்னும் இனப்பற்று பேசிய தலைவர்கள் அந்த இனத்தின் இளைஞர்களையும், குடும்பங்களையும் பாதிக்கும் எனத் தெரிந்தே தீரா விடம் (விஷம்) என்னும் மதுவைப் பணப்பற்று காரணமாக ஆதரிக்கின்றனர் என்பது வேதனை தரக்கூடியதுதானே?

அரசர்களான கடையேழு வள்ளல்கள் நாடி வந்த குடிமக்களுக்கெல்லாம் வாரிவாரி வழங்கினார்களாம். கலிகால வள்ளலான மது அரக்கனோ, மக்களின் குடியால் கஜானா நிரம்பி வழியவழிய அரசுக்கு வாரி வழங்குகிறான். நாய் விற்ற காசு குரைக்குமோ என்னவோ, ஆனால் மது விற்ற காசு என்றால் நிச்சயம் மயக்கம்தான், ஆட்சியாளர்களுக்கு.

இப்போது, வாங்கும் ஊதியத்தின் மொத்தத்தையும் ஒரு குடும்பத் தலைவன் குடித்தே அழித்தாலும் பரவாயில்லை. அவன் பாக்கெட்டில் ஒரு ரூபாய் இருந்தால்கூட போதும். அதைக் கொண்டு நியாயவிலைக் கடையில் வாங்கும் கிலோ அரிசியில் அவன் குடும்பம் பசியாறுமே என இவர்கள் நியாயம் பேசலாம்.

பல ஆண்டுகளாய் குடித்துக் குடித்து குடல் வெந்து, உள்ளுறுப்புகளும் கெட்டு, ஒருவன் எந்த நோயில் பாதிக்கப்பட்டாலும் அவனும், அவன் குடும்பமும் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் அதற்கும்தான் இருக்கவே இருக்கிறதே மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்றும் நியாயப்படுத்தலாம்.

மதுபானங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் பெரும் தொகையில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி ஏழை, எளியோரின் வாழ்வில் குடும்ப விளக்கை ஏற்ற முயல்வதாகக் கூறுகின்றனர் ஆட்சியாளர்கள். ஆனால், மதுவால் நிலைகுலைந்த வீடு இருண்ட வீடுதானே?. அங்கு அழகின் சிரிப்பைக் காண்பதெப்படி?

படித்துப் பழகிய தலைமுறை மெல்ல மெல்ல மறைந்து இன்று குடித்துப் பழகும் தலைமுறை உருவாகி வருகிறது. ஊக்கத்தைக் கைவிடாதே என்ற பொருளில் "ஊக்கமது கைவிடேல்' என்றார் ஒüவையார். ஆனால், இனி வரும் தலைமுறை "ஊக்க மது கைவிடேல்' என தங்கள் வசதிக்கேற்ப வாசித்து மகிழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதிகமாய் உலவிய மயிலும், புலியும் தேசியப் பறவையாகவும், விலங்காகவும் ஆகிவிட்ட பின்பு ஏனோ எண்ணிக்கையில் வெகுவாகக் குறைந்துவிட்டன. அந்த வகையில் பார்த்தால் நாட்டில் ஆறாக ஓடும் மதுவை முற்றிலும் ஒழிப்பது என்பது இயலாத காரியம் என்பதால் அதை ஓரளவுக்காவது குறைக்க வேண்டும் என்றால் அதை தேசிய பானமாக ஆக்குவதுதான் ஒரேவழி போலும்.

கள்ளுண்ணாமையை வலியுறுத்திய வள்ளுவரின் குறளுக்கு உரை எழுதி, குறளோவியம் தீட்டிய முதல்வர், மது அரக்கனுக்கும் ஒரு முடிவுரை எழுதி, தமிழகத்துக்கு நல்வழி காட்ட வேண்டும்.

தற்போது தமிழுக்குச் செம்மொழித் தகுதி என்ற கிரீடம் சூட்டி அழகுபார்க்கும் முதல்வர், தமிழகத்துக்கும், தமிழனுக்கும் மதுவிலக்கு என்னும் நிரந்தர மலர்க்கிரீடம் அணிவித்து தலைநிமிரச் செய்து அழகுபார்க்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்.

மா. ஆறுமுககண்ணன்

நன்றி: தினமணி 12.01.2010

5 comments:

ஜோதிஜி said...

அற்புத பங்களிப்புக்கு வாழ்த்துகள்.

ஆனால் மக்களுக்கு ஒரு வழியை காட்டி விட்டார்கள். இனி அவர்களின் வலியைக் காண இப்போது இருப்பவர்கள் அப்போது இருக்க மாட்டார்கள்.

அப்போது வேறு ஒரு மயக்கம் உருவாக்கப்படும். அதையும் அன்று மக்கள் விரும்பும் அளவிற்கு மாற்றி வைத்து இருப்பார்கள் என்பதே நிதர்சனம்.

நம்பி said...

மதுவை பூரணமாக ஒழித்து விடமுடியாது, ஏற்கனவே இதை காங்கிரசார் ஒழித்தபோது அவர்கள் வீட்டின் குப்பைத்தொட்டியிலேயே பல மது பாட்டில்கள் இருந்ததை அந்தக்கால பத்திரிகைகள் பெரிய விசயமாக சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தன. (பழைய பத்திரிகைகள் சான்று)இன்றும் கொத்தனார் வேலை செயபவருக்கோ?, மூட்டைத்தூக்குபவருக்கோ?, கல்குவாரியில் பணிபுரிவருக்கோ?, செங்கல் சூளையில் பணிபுரிவருக்கோ? அந்த வலியை மறக்க இந்த பானங்களே மருந்துகள். இதை அருந்தினாலே அடுத்த நாள் வேலை புரிய முடியும். 100 கிலோ எடையுள்ள மூட்டையை முதுகில் சுமப்பவர்களுக்குத்தான அதன் வலித்தெரியும். (தோல் உறிந்து கொண்டு சிவப்பாக, ரணமாக இருக்கும்) இரவு மல்லாக்காக படுக்க முடியாது. இவர்களை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதே கிடையாது.

அதையும் மீறி மதுவிலக்கு அமல் செய்தால் கள்ளசாராயம் தான் பெருகும். அதைச்சார்ந்த சாவுகள் தான் பெருகும்...(1972 வாக்கில் குதிரை வண்டியில் பல பிணங்கள் ஒவ்வொரு வீதியெங்கும் திரிந்தது நிறையப்பேர் மறந்திருக்கலாம், பிணத்தை எடுக்க குதிரை வண்டிகளே கிடைக்கவில்லை... இது மாதிரி நிறைய சாவுகள்...)

பணக்காரர்கள் பப்!, டிஸ்கோதே! என்று போய் வயிறு முட்ட குடித்து விடுவார்கள்... அவர்களை எந்த சட்டமும் ஒன்றும் செய்யாது...பணம் தடுத்துவிடும். ஆனால் மதுவிலக்கிற்கு பிறகு பாதிப்பதும் இந்த பாட்டாளிகள் தான்...சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவதும் இந்த பாட்டாளிகள் தான். ஒரு தொழிலை தடை செய்வதற்கு முன் அந்த தொழில் சார்ந்தவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பை வழங்கிவிட்டுத்தான் இவையெல்லாம் நிறைவேற்ற முடியும்.

இன்னும் அந்த (குறைந்த பட்சம் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள மாநிலம்) தன்னிறைவை தமிழகம் மட்டுமல்ல எந்த மாநிலமும் எட்டவில்லை. காங்கிரஸ் ஆளும் பாண்டிச்சேரியில் இரண்டு மதுவும் பிரசித்தம் அதை தடை செய்தால் அந்த மாநிலத்திற்கு வருவாயே கிடையாது. கள்ளச்சாராயத்தினால் மறைமுக சாராய வியாபாரிகள், அதைச்சார்ந்த பணமுதலைகள், லஞ்ச லாவண்யங்கள் பெருகவே வாய்ப்பாக இருக்கும்... இந்த மதுவிலக்கை அறிவித்து பலமுறை தேர்தலை சந்தித்து தோல்வியை தழுவியுள்ளனர், நமது ஒரு சில மதுவிலக்கு சார்பு கட்சியினர் (அரசியல்வாதிகள்). இதெல்லாம் வரலாறு...(அதனால் தான் எம்.ஜி.ஆர் இந்த விசயத்தை எச்சரிக்கையாகவே அணுகினார்...அனைவரும் இப்படியே அணுகுகின்றனர்...)

seeprabagaran said...

ஜோதிஜி அவர்களுக்கு நன்றி.

ஆளப்படும் மக்கள் சுய சிந்தனை இழந்து ஏதாவது ஒரு மயக்கத்தில் இருப்பதையே ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள்.

மக்கள் எக்காரணம் கொண்டும் சிந்திக்கக்கூடாது....

seeprabagaran said...

நம்பி அவர்களுக்கு வணக்கம்.

மதுவை பூரணமாக ஒழிக்க முடியாதா? அல்லது அதை ஒழிக்க ஆட்சியாளர்களுக்கு மனமில்லையா?

மதுவை ஒழிக்க முடியாது என்றால்? “கள்” இறக்குவதற்கு மட்டும் தடை விதித்திருப்பது ஏன்? தற்போது விற்பனையில் உள்ள மது வகைகளைவிட ”கள்” போதை அதிகமானதா? அல்லது உடலுக்கு அதிகமான தீங்கு விளைவிப்பதா?

...

சுமை தூக்கும் தொழிலாளர்களின் உடல்வலி போக்கவே மது விற்கப்படுகிறது என்ற கருத்தை ஏற்றுக்கொண்டாலும் எந்தெந்த மதுவகைகள் உடல்வலியை போக்க்கூடியவை எந்தெந்த மதுவகைள் உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடியவை என்று மதுக்கடைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளதா?

நான் புதுச்சேரியை சேர்ந்தவன். எங்கள் குடும்பத்தில் கொத்தனார் வேலை செய்பவர்களும் விவசாய வேலை செய்பவர்களுமே அதிகம் அவர்களில் பெரும்பாலானவர்கள் உடல்வலி தீர நாள்தோரும் சாராயக்கடை செல்பவர்கள் சென்றவர்கள். அவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல. அரசு விற்பனை செய்தும் நல்லச்சாராயம்தான். என்தலைமுறையில் மட்டும் வாழவேண்டிய வயதில் இதுவரை ஐந்து உறவினர்களை இழந்திருக்கிறேன். மேலும் மூன்று பேர் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தாங்க மாட்டார்கள். அந்த வலியும் வருத்தமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.

வாழவேண்டிய வயதில் கட்டிய மனைவியையும், பெற்ற பிள்ளைகளையும்,பெற்றோர்களையும் தவிக்க விட்டுவிட்டு குடியால் செத்தவர்களின் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருந்து இந்த பிரச்சனையை அனுகுங்கள் என்று வேண்டுகிறேன்...

...

மதுவை ஒழித்துவிட்டால் கள்ளச்சாராம் பெருகும் என்ற அரசின் வாதம் பச்சை அயோக்கியத்தனமான வாதம் என்றே கருதுகிறேன். “டாஸ்மாக்” திறந்த பிறகு தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரனமே நிகழவில்லையா? கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டுவிட்டதா?

...

தமிழன் உண்மையாகவே மானத்தோடும் அறிவொம் வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் மதுவுக்கு எதிராகவே இருப்பார்கள்...

நம்பி said...// மதுவை ஒழித்துவிட்டால் கள்ளச்சாராம் பெருகும் என்ற அரசின் வாதம் பச்சை அயோக்கியத்தனமான வாதம் என்றே கருதுகிறேன். “டாஸ்மாக்” திறந்த பிறகு தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரனமே நிகழவில்லையா? கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டுவிட்டதா?

...

தமிழன் உண்மையாகவே மானத்தோடும் அறிவொம் வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் மதுவுக்கு எதிராகவே இருப்பார்கள்...

January 21, 2010 at 11:18 PM//

மதுவிலக்கை அறிவுள்ளவர்கள் வலியுறுத்துவது பெரிய விஷயமில்லை...மூட்டைத் தூக்குபவர் வலியுறுத்தவது தான் அதிசயம்...இதை வலியுறுத்துபவர்கள் மூட்டைத் தூக்கி வேலை செய்து வலியைத் தாங்கி கொண்டு இருந்து காட்டுங்கள்!! மதுக்குடிக்காமல் வாழ்ந்து காட்டுங்கள்..அப்புறம் வலியுறுத்துங்களேன்.....

கல்குவாரியிலே வேலை செய்து...இதோ பார் நான் மதுவே அருந்தாமல் வாழ்கிறேன்.. என்று இதை வலியுறுத்துங்களேன்!!

பிணம் தூக்கும் அறையில் வேலை செய்துவிட்டு இதோ பார் நாத்தத்திலேயும் குடிக்காமல் பொறுத்துக் கொண்டு வேலை செய்கிறேன் மதுகுடிக்காமல் என்று வலியுறுத்துங்களேன் பார்க்கலாம்...

குப்பைக் கூட்டுகிற வேலையில் கார்ப்பொரேஷனில் வேலை செய்து விட்டு ஆகா இதோ பார் மதுக்குடிக்காமல் வாழ்கிறேன். என்று உடலைத் தூக்கி காட்டுங்களேன்!

நீங்கள் தான் ஜாதிக்கொரு வேலையை ஏற்படுத்திவிட்டு சோசலிஷம் பேசுகிறீர்களே!!

இப்போது கார்போரேட் கம்பெனிகளில் பீச் ரிசார்ட்டில் டிஸ்கோதேவுடன் பார்ட்டி நடத்துகிறீர்களே!! அதை தடை செய்யுங்களேன் பார்க்கலாம்....தடை செய்தால் வேலையை விட்டே தூக்கிவிடுவான்.

உங்க அட்டகாசம் தாங்க முடியலை!

உங்களுக்கு மது ஒரு மென்டல் ரிலிப்...அவர்களுக்கு உடல் வலி நிவாரணி...நீ குடிச்சா பணக்காரக் குடி அவன் குடிச்சால் ஏழைக்குடி! அது நல்லது இது தீயதா? என்ன? உங்கள் தத்துவம்.

இரண்டாம் உலகப்போருக்கு முன்பு அமெரிக்காவில் அதாவது பணக்கார நாட்டிலேயே, மக்கள் தொகை 10 கோடிக்கும் குறைவான நாட்டிலேயே வறுமை மக்கள் இல்லாத நாட்டிலேயே மதுவிலக்கை கொண்டுவந்து பயனில்லாமல் ஊத்தி மூடிவிட்டார்கள். பணக்காரனால் மதுவே இல்லாமல் இருக்க முடியவில்லை. அதாவது அவன் மென்டல் ரிலீப்புக்கு மது வேண்டும். கேளிக்கைக்கு மது வேண்டும். ஏழையான, கடும் உடல் உழைப்பைத்தருகிற இவன் உடல் வலிக்கு, தன் சொந்த காசில் குடித்தால் மட்டும் தவறா? என்ன நியாயம் உங்கள் நியாயம்!!