Saturday, January 23, 2010

தமிழால் வளம்பெறலாம்!

இன்று உலகை ஆளும் முதலாளிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் உள்ள ஒரே இலக்கு தாம் செய்யும் தொழிலில் “இலாபம்”, “மேலும் இலாபம்”, “மேலும் மேலும் இலாபம்” ஈட்டுவது மட்டுமே. இந்த இலக்கை அடைய அவர்கள் “எதை” வேண்டுமானாலும் செய்ய தயாராகவே இருக்கிறார்கள். இந்த கட்டுரையின் நோக்கம் அந்த “எதை” வேண்டுமானாலும் என்ற இடத்தில் “தமிழையும்” வைக்கவேண்டும் என்பது மட்டுமே.

உலகில் உள்ள அனைத்து மொழிக்கும் பல்வேறு சிறப்புகள் உண்டு. ஒரு மொழிக்கு எத்தனை சிறப்புகள் இருந்தாலும் அந்த மொழி மக்கள் பயன்பாட்டில் இருந்தால் மட்டுமே காலத்தால் நிலைத்து நிற்கமுடியும். குறிப்பாக ஆட்சி அதிகாரத்திலும், வியாபாரா-வர்த்தக-தொழில் நடைமுறைகளிலும் ஒரு மொழி பயன்படுத்தப்படுமானால் அந்த மொழியும் - அந்த மொழியை அறிந்தவர்களும் – அந்த மொழி சார்ந்த பிற துறைகளும் தானாக வளர்ச்சியடையும்.

மேற்குறிப்பிட்ட வளர்ச்சியை அடைய தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை மனு.., கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம்..., ஆர்ப்பாட்டம்..., கோரிக்கைப் பேரணி... போன்ற கூடிக்களையும் நிகழ்வுகள் எதுவுமே தேவையில்லை. நாம் இருக்கும் இடத்திலேயே, நமது அன்றாட வாழ்க்கை நடைமுறைகளிலேயே இதை சாதிக்கலாம். தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி செயலாற்றுவோம். நாம் செய்ய வேண்டிய செய்யக்கூடிய பணிகள் ஒருசிலவற்றையாவது செய்வொம்...

நம்மால் ஏதாவது ஒருவகையில் பயனடையும் அல்லது இலாபமடையும் அனைவரோடும் தமிழில் தொடர்புகொண்டு அவர்களையும் தம்மோடு தமிழில் தொடர்புகொள்ள வலியுறுத்துவோம்.

நாம் பணிபுரியும் இடத்தில் நமது அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து நடைமுறைகளிலும் தமிழை பயன்படுத்துவோம்.

மின்னணு இயந்திரங்கள், மின்சார வீட்டு உபயோக பொருட்கள், போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றின் பயன்பாடுகள் நமது வாழ்க்கை நடைமுறைகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. நாம் வாங்கும் எந்தவொரு மேற்குறிப்பிட்ட பொருளுடனும் “பயனாளர் கையேடுகள்” (User Manuals) வழங்கப்படுகின்றன. பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும் கையேடுகளை பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே வெளியிடுகின்றன. தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை அனைத்து வகைகளிலும் பயனாளிகள் விரும்ப வேண்டும் என்றே உற்பத்தியாளர்கள் விரும்புவார்கள். அந்த வகையில் நாம் வாங்கும் பொருட்களின் முகவர்களிடமும் உற்பத்தியாளர்களிடமும் பயனாளர் கையேடுகளை தமிழில் வழங்க அனைத்து வகைகளிலும் வலியுறுத்துவோம். நமது கோரிக்கை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் வர்த்தகமொழியாக தமிழ்மட்டுமே இருக்கும்.

பொருட்களை உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்க “குறைதீர்க்கும் நடுவங்களை” (Customer Care, Help line, etc...) உலகெங்கும் நிறுவியுள்ளன. அந்த நடுவங்களை தொடர்புகொண்டு தாங்கள் உரையாட நேரிட்டால் தங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் தொடர்ந்து தமிழிலேயே உரையாடுங்கள். உறுதியாக அவர்கள் தங்களுக்கு தமிழில் பதிலளிக்கவே முயற்சி செய்வார்கள். எந்தவொரு வர்த்தக நிறுவனமும் வாடிக்கையாளர்களிடமிருந்து தொடர்புகளை துண்டித்துக்கொள்ளாது. அவர்களின் நோக்கம் இலாபம்... இலாபம்... இலாபம் மட்டுமே...

இந்த நூற்றாண்டு முதல் மொழிபெயர்ப்புத்துறைக்கு ஆயிரகணக்கான கோடி ரூபாயை ஒதுக்க பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் உலகெங்கும் குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வட்டார அளவில் தனது வாடிக்கையாளர்களை விரிவுபடுத்த தயாராகிவருகின்றன. இந்தச் சூழலை தமிழர்கள் அனைவரும் சரியாக பயன்படுத்த வேண்டும்.

தொடருவோம்...

3 comments:

சுப.நற்குணன்,மலேசியா. said...

நல்ல கருத்துகளை நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

//நாம் இருக்கும் இடத்திலேயே, நமது அன்றாட வாழ்க்கை நடைமுறைகளிலேயே இதை சாதிக்கலாம். தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி செயலாற்றுவோம். //

மிகச் சரி.

இப்படியெல்லாம் சிந்தித்தால் தமிழனின் தலைவிதியே வேறாக இருக்கும்.

தமிழரிடம் நிறைய இயலாமைகள் உள்ளன. நீங்கள் சொல்லுவது போல செயல்படத் தொடங்கினால் தமிழ்ச் சமுதாயம் எழுச்சி பெறும்.

இதற்கு அடிப்படையாகத் தமிழர் முதலில் தங்களை ஓர் இனமாகச் சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தொடருக.. அன்பரே!

ஜோதிஜி said...

இந்த கருத்துக்களை விமர்சனம் செய்ய முடியாது. காரணம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை.

seeprabagaran said...

சுப.நற்குணன் அவர்களுக்கும்,
ஜோதிஜி அவர்களுக்கும் வணக்கம்.


அன்மையில் ”மக்கள் தொலைக்காட்சியில்” வளாகம் என்ற நிகழ்ச்சியல் “பொருள் வணிகம்” குறித்த நிகழ்ச்சியை பார்த்தேன். மேலதிக தகவல்களை பெறுவதற்காக அவர்கள் கொடுத்த இணைதள முகவரிக்கு சென்றேன். அந்த இணையதளத்தில் அனைத்துத் தகவல்களும் ஆங்கிலத்தில் இருந்தது. எனக்கு ஆங்கிலம் அதிகமாக தெரியாது (நான் 10-ஆம் வகுப்பு படிக்கும் போது ஆண்டுமுழுவதும் ஆங்கிலபாடத்தை மட்டுமே மனப்பாடம் செய்து இறுதித்தேர்வில் ஆங்கிலத்தில் 35 மதிப்பெண்கள் பெற்றவன்). அதனால் அந்த நிறுவனத்தினரை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு “சென்னையை தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் நீங்கள் தகவல்களை தமிழில் கிடைக்க ஆவனசெய்யுமாறு வேண்டிக்கொண்டேன்.” அவர்கள் மாறுநாளே பொருள் வணிகம் குறித்த தகவல்கள் அடங்கிய புதிய பக்கத்தை அவர்களுடைய இணைய தளத்தில் அளித்து எனக்கு இன்ப அதிச்சியை ஏற்படுத்தினார்கள்.


அதுபோல் “டிஸ்கவரி” தொலைக்காட்சியினர் அவர்களுடைய ஒளிபரப்பை தற்போது தமிழில் வெளியிடுகின்றனர். அவர்கள் முதலில் மாலை நேரத்தில் மட்டுமே நிகழ்ச்சிகளை தமிழில் ஒளிபரப்பினர். அவர்கள் அவ்வாறு ஒளிபரப்பியபோது அவர்களை பாராட்டி நானும் எனது நண்பர்களும் தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பினோம். மேலும் 24 மணிநேரமும் நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டிக்கொண்டோம். எங்களைப்போன்று பலபேர் அக்கோரிக்கை தொடர்ந்து வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். தற்போது “டிஸ்கவரி” தொலைக்காட்சி நிறுவனத்தார் அவர்களுடைய நிகழ்ச்சிகளை 24 மணிநேரமும் தமிழில் ஒளிபரப்புகிறார்கள்.

வர்த்தக நிறுவனத்தினர் தமிழில் ஒரு முயற்சியை செய்யும் போது தமிழர்கள் முதலில் அவர்களை பாராட்ட வேண்டும். அந்த முயற்சி பரவலான பிறகு அதில் உள்ள நிறைகுறைகளை சுட்டிக்காட்டலாம்... தாங்களும் இந்த முயற்சியை தொடருங்கள்...