
திருவள்ளுவராண்டு 2041 சுறவம் 12
மொழிப்போர் ஈகியர் நாள் - 25.01.2010
திருவள்ளுவராண்டு 2041 சுறவம் 12
மொழிப்போர் ஈகியர் நாள் - 25.01.2010
இன்று உலகை ஆளும் முதலாளிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் உள்ள ஒரே இலக்கு தாம் செய்யும் தொழிலில் “இலாபம்”, “மேலும் இலாபம்”, “மேலும் மேலும் இலாபம்” ஈட்டுவது மட்டுமே. இந்த இலக்கை அடைய அவர்கள் “எதை” வேண்டுமானாலும் செய்ய தயாராகவே இருக்கிறார்கள். இந்த கட்டுரையின் நோக்கம் அந்த “எதை” வேண்டுமானாலும் என்ற இடத்தில் “தமிழையும்” வைக்கவேண்டும் என்பது மட்டுமே.
உலகில் உள்ள அனைத்து மொழிக்கும் பல்வேறு சிறப்புகள் உண்டு. ஒரு மொழிக்கு எத்தனை சிறப்புகள் இருந்தாலும் அந்த மொழி மக்கள் பயன்பாட்டில் இருந்தால் மட்டுமே காலத்தால் நிலைத்து நிற்கமுடியும். குறிப்பாக ஆட்சி அதிகாரத்திலும், வியாபாரா-வர்த்தக-தொழில் நடைமுறைகளிலும் ஒரு மொழி பயன்படுத்தப்படுமானால் அந்த மொழியும் - அந்த மொழியை அறிந்தவர்களும் – அந்த மொழி சார்ந்த பிற துறைகளும் தானாக வளர்ச்சியடையும்.
மேற்குறிப்பிட்ட வளர்ச்சியை அடைய தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை மனு.., கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம்..., ஆர்ப்பாட்டம்..., கோரிக்கைப் பேரணி... போன்ற கூடிக்களையும் நிகழ்வுகள் எதுவுமே தேவையில்லை. நாம் இருக்கும் இடத்திலேயே, நமது அன்றாட வாழ்க்கை நடைமுறைகளிலேயே இதை சாதிக்கலாம். தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி செயலாற்றுவோம். நாம் செய்ய வேண்டிய செய்யக்கூடிய பணிகள் ஒருசிலவற்றையாவது செய்வொம்...
நம்மால் ஏதாவது ஒருவகையில் பயனடையும் அல்லது இலாபமடையும் அனைவரோடும் தமிழில் தொடர்புகொண்டு அவர்களையும் தம்மோடு தமிழில் தொடர்புகொள்ள வலியுறுத்துவோம்.
நாம் பணிபுரியும் இடத்தில் நமது அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து நடைமுறைகளிலும் தமிழை பயன்படுத்துவோம்.
மின்னணு இயந்திரங்கள், மின்சார வீட்டு உபயோக பொருட்கள், போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றின் பயன்பாடுகள் நமது வாழ்க்கை நடைமுறைகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. நாம் வாங்கும் எந்தவொரு மேற்குறிப்பிட்ட பொருளுடனும் “பயனாளர் கையேடுகள்” (User Manuals) வழங்கப்படுகின்றன. பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும் கையேடுகளை பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே வெளியிடுகின்றன. தாம் உற்பத்தி செய்யும் பொருட்களை அனைத்து வகைகளிலும் பயனாளிகள் விரும்ப வேண்டும் என்றே உற்பத்தியாளர்கள் விரும்புவார்கள். அந்த வகையில் நாம் வாங்கும் பொருட்களின் முகவர்களிடமும் உற்பத்தியாளர்களிடமும் பயனாளர் கையேடுகளை தமிழில் வழங்க அனைத்து வகைகளிலும் வலியுறுத்துவோம். நமது கோரிக்கை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் வர்த்தகமொழியாக தமிழ்மட்டுமே இருக்கும்.
பொருட்களை உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்க “குறைதீர்க்கும் நடுவங்களை” (Customer Care, Help line, etc...) உலகெங்கும் நிறுவியுள்ளன. அந்த நடுவங்களை தொடர்புகொண்டு தாங்கள் உரையாட நேரிட்டால் தங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் தொடர்ந்து தமிழிலேயே உரையாடுங்கள். உறுதியாக அவர்கள் தங்களுக்கு தமிழில் பதிலளிக்கவே முயற்சி செய்வார்கள். எந்தவொரு வர்த்தக நிறுவனமும் வாடிக்கையாளர்களிடமிருந்து தொடர்புகளை துண்டித்துக்கொள்ளாது. அவர்களின் நோக்கம் இலாபம்... இலாபம்... இலாபம் மட்டுமே...
இந்த நூற்றாண்டு முதல் மொழிபெயர்ப்புத்துறைக்கு ஆயிரகணக்கான கோடி ரூபாயை ஒதுக்க பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் உலகெங்கும் குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வட்டார அளவில் தனது வாடிக்கையாளர்களை விரிவுபடுத்த தயாராகிவருகின்றன. இந்தச் சூழலை தமிழர்கள் அனைவரும் சரியாக பயன்படுத்த வேண்டும்.
தொடருவோம்...