Tuesday, November 16, 2010

ஈழ அகதிகளுக்கு உதவிய காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது

புதுச்சேரியில் இருந்து, படகு மூலம் ஈழ அகதிகளை வெளிநாட்டுக்கு அழைத்து சென்ற வழக்குத் தொடர்பாக, காரைக்கால் பாமக செயலர் தேவமணி செவ்வாய்க்கிழமை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரியில் இருந்து வெளிநாட்டுக்கு ஈழ அகதிகளை அழைத்து சென்றது தொடர்பாக வீராம்பட்டினம் திமுக கவுன்சிலர் சக்திவேல், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், சிலோன் மணி, படகு ஓட்டுநர் ஜீவா ஆகியோர் புதுச்சேரி குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸôரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் பயன்படுத்தியப் படகு காரைக்காலில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த டீசல், கேஸ் சிலிண்டர், அடுப்பு உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று, தடயங்களை அழித்தது தொடர்பாக காரைக்கால் மாவட்ட பாமகச் செயலர் தேவமணியும் பின்னர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டு, நிபந்தனை ஜாமீனில், வெளியில் வந்து, தினமும் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். இந்நிலையில் காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய காரைக்கால் மாவட்ட ஆட்சியர் பிராங்கிளினிடம் புதுச்சேரி குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸôர் பரிந்துரை செய்தனர். அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பிராங்கிளின் உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து தேவமணி, புதுச்சேரியில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

அரசை கண்டித்து போராட்டம்: புதுச்சேரியில் பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் தந்தை பிரியன் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

ஈழத்தமிழர் போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்து போராடி வரும் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், கவுன்சிலர் சக்திவேல், காரைக்கால் பா.ம.க. செயலர் தேவமணி ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் புதுச்சேரி அரசு கைது செய்துள்ளதை கண்டிக்கிறோம்.

இதை அரசு கைவிட வேண்டும். மீறி செய்தால் சட்டரீதியாக போராட்டம் நடத்தவும், அனைத்து அரசியல், சமுதாய இயக்கங்களை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டங்களை நடத்தவும் முடிவெடுத்துள்ளோம் என்றார்.

நன்றி: தினமணி 17.11.2010

No comments: