Wednesday, November 24, 2010

தமிழ் கலைஞர்களை பழித்தால் குரல்வளையை கடிப்பேன்: வி.சி.குகநாதன்

நான், எந்த நடிகருக்கும் விரோதி அல்ல. ஆனால் தமிழர்களையும், தமிழ் கலைஞர்களையும் பழித்தால், அவர்களின் குரல்வளையை கடித்து துப்பவும் தயங்க மாட்டேன் என்று வி.சி.குகநாதன் கூறினார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் வி.சி.குகநாதனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. தமிழ் நடிகர்களை ஆர்யா இழிவாக பேசியதாக வி.சி.குகநாதன் கயிறு திரித்து புது பிரச்சினையை கிளப்பி இருக்கிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.குகநாதன், “உங்கள் விருப்பம்” படவிழாவில், எந்த நடிகரின் பெயரையும் குறிப்பிட்டு நான் பேசவில்லை. “ஏசியாநெட்” நடத்திய நிகழ்ச்சியில் ஒரு நடிகர் கலந்துகொண்டு பேசும்போது, மலையாள படங்களில் நடிக்க வேண்டும் என்றால் நடிப்பு தெரிந்திருக்க வேண்டும். அது எனக்கு கொஞ்சம்தான் தெரியும். அதற்கு தகுந்த மாதிரி வேஷம் கொடுத்தால், அதை நான் கவுரவமாக நினைத்து மலையாள படங்களில் நடிப்பேன். ஏனென்றால் நான் ஒரு மலையாளி. எல்லோரும் பார்க்கிற மாதிரி மலையாள பட உலகில் இன்னும் தரமான படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் மலையாள படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அந்த நடிகரின் பேச்சு தமிழ் நடிகர்களை கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறது. உலக புகழ்பெற்ற நடிகர்திலகம் சிவாஜிகணேசனில் இருந்து கமல்ஹாசன் வரை பல அபூர்வ நடிகர்களை கொண்டது, தமிழ் பட உலகம். அவர்களை எல்லாம் கேவலப்படுத்துகிற மாதிரி அந்த நடிகர் பேசியிருக்கிறார்.

இதை நான் பெப்சி' தலைவராக கூறவில்லை. தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒரு அங்கத்தினராக கூறுகிறேன். 10 வயதில் இருந்தே தமிழ் மொழிக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் நான் போராடியவன் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும்.

நான் யாருக்கும் கயிறு திரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அடிக்கடி கட்சி மாறுகிற ஆளும் இல்லை. தமிழர்களுக்காக போராடுகிற எல்லா தமிழர்களுடனும் இருப்பேன்.

நான், எந்த நடிகருக்கும் விரோதி அல்ல. ஆனால் தமிழர்களையும், தமிழ் கலைஞர்களையும் பழித்தால், அவர்களின் குரல்வளையை கடித்து துப்பவும் தயங்க மாட்டேன் என்றார்.

நன்றி: நக்கீரன்.காம் (25.11.2010)

No comments: