Wednesday, November 24, 2010

தமிழ் கலைஞர்களை பழித்தால் குரல்வளையை கடிப்பேன்: வி.சி.குகநாதன்

நான், எந்த நடிகருக்கும் விரோதி அல்ல. ஆனால் தமிழர்களையும், தமிழ் கலைஞர்களையும் பழித்தால், அவர்களின் குரல்வளையை கடித்து துப்பவும் தயங்க மாட்டேன் என்று வி.சி.குகநாதன் கூறினார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் வி.சி.குகநாதனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. தமிழ் நடிகர்களை ஆர்யா இழிவாக பேசியதாக வி.சி.குகநாதன் கயிறு திரித்து புது பிரச்சினையை கிளப்பி இருக்கிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.குகநாதன், “உங்கள் விருப்பம்” படவிழாவில், எந்த நடிகரின் பெயரையும் குறிப்பிட்டு நான் பேசவில்லை. “ஏசியாநெட்” நடத்திய நிகழ்ச்சியில் ஒரு நடிகர் கலந்துகொண்டு பேசும்போது, மலையாள படங்களில் நடிக்க வேண்டும் என்றால் நடிப்பு தெரிந்திருக்க வேண்டும். அது எனக்கு கொஞ்சம்தான் தெரியும். அதற்கு தகுந்த மாதிரி வேஷம் கொடுத்தால், அதை நான் கவுரவமாக நினைத்து மலையாள படங்களில் நடிப்பேன். ஏனென்றால் நான் ஒரு மலையாளி. எல்லோரும் பார்க்கிற மாதிரி மலையாள பட உலகில் இன்னும் தரமான படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் மலையாள படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அந்த நடிகரின் பேச்சு தமிழ் நடிகர்களை கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறது. உலக புகழ்பெற்ற நடிகர்திலகம் சிவாஜிகணேசனில் இருந்து கமல்ஹாசன் வரை பல அபூர்வ நடிகர்களை கொண்டது, தமிழ் பட உலகம். அவர்களை எல்லாம் கேவலப்படுத்துகிற மாதிரி அந்த நடிகர் பேசியிருக்கிறார்.

இதை நான் பெப்சி' தலைவராக கூறவில்லை. தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒரு அங்கத்தினராக கூறுகிறேன். 10 வயதில் இருந்தே தமிழ் மொழிக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் நான் போராடியவன் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும்.

நான் யாருக்கும் கயிறு திரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அடிக்கடி கட்சி மாறுகிற ஆளும் இல்லை. தமிழர்களுக்காக போராடுகிற எல்லா தமிழர்களுடனும் இருப்பேன்.

நான், எந்த நடிகருக்கும் விரோதி அல்ல. ஆனால் தமிழர்களையும், தமிழ் கலைஞர்களையும் பழித்தால், அவர்களின் குரல்வளையை கடித்து துப்பவும் தயங்க மாட்டேன் என்றார்.

நன்றி: நக்கீரன்.காம் (25.11.2010)

Tuesday, November 23, 2010

பீகார் தேர்தல் - நிதிசுகுமார் வாழ்க!

பீகாரில் நிதிசுகுமார் தலைமையிலான கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்க பீகார் மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். மக்களுக்காக உண்மையாக உழைக்கும் ஒருதலைவரை பீகார் மக்கள் பெற்றுள்ளனர். பீகார் மக்கள் மேலும் வளச்சியடைய வாழ்த்துவோம்!

இந்தத்தேர்ததில் கங்கிரசின் வெற்றி ஒற்றை இலகத்திலேயே சுருக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக உண்மையாக உழைக்கும் தலைவரை அடையாளங்கண்டு காங்கிரசு-சோனியா-இராகுல் போன்ற வேடதாரிகளை பீகார் மக்கள் புறக்கணித்துள்ளனர்.

தமிழகத் தலைவர்களும் தமிழர்களுக்கு துரோகம் செய்யாமல் தமிழர்களின் நலனுக்காக உண்மையாக உழைத்தால் காங்கிரசை அண்டிப்பிழைக்கும் நிலைக்கு ஆளாகத்தேவையில்லை. தமிழர்களுக்காக உண்மையாக உழைக்கும் ஒருதலைவர் கிடைக்கமாட்டாரா?

Saturday, November 20, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழலை “நக்கீரன்” கண்டுகொள்ளாது ஏன்?

ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது என்பது ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊழலின் தொகை எவ்வளவு? யார் யாருக்கு எவ்வாளவு தொகை பங்கு பிரிக்கப்பட்டுள்ளது? பங்கு ஒழுங்காக பிரிக்கப்பட்டுள்ளதா? என்பது போன்ற தகவல்கள்தான் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.

அதற்குப் பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து!!!!!!!!! விசாரணை நடத்தி!!!!!!!!!! வாய்தா வாங்கி!!!!!!!!!!! வழக்கு நடத்தி!!!!!!!!!!! இவ்வளவு பெரிய தவறு செய்த பெரிய மனிதர்களை சட்டம் தண்டிக்கும் என குடிமக்களாகிய நாம் நம்பித்தான் ஆக வேண்டும். (நம்புவோமாக!)

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசியல் அத்துமீறல்களை, ஊழல்களை, மனித உரிமை மீறல்களை புலணாய்வு செய்து “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என எதற்கும் அஞ்சாமல்(!!!!!) செய்தி வெளியிடும் “நக்கீரன்” வாரம் இருமுறை இதழ், ஸ்பெக்டரம் ஊழலைப்பற்றி பட்டும் படாமல் செய்தி வெளியிடுகிறது. அதுமட்டுமின்றி இந்த ஊழலில் ஆ.இராசாவும் தி.மு.க.வும் தவறே செய்யவில்லை, அவர்கள் உத்தமர்கள் என்பது போன்று செய்திகளை வெளியிடுகிறது.... நெற்றிக்கண் திறந்துவிடுமோ என நக்கீரன் அஞ்சுகிறாரா என தெரியவில்லை...

அண்மையில் சவுக்கு இணையதளத்தை பார்த்தபோது தான் அதன் இரகசியம் புரியந்தது. அலைக்கற்றை ஊழலில் முக்கிய பங்குவகித்த “ஸ்வாம் டெலிகாம் நிறுவனத்தில்” நக்கீரன் துணை ஆசிரியர் காமராஜ் அவர்களும் பங்குதாரராக இருக்கிறாராம். ஆண்டிமுத்துவும், சின்னப்பிள்ளையும். http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=165:2010-11-18-12-48-20&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

வாழ்க! சனாநாயகத்தின் நாண்காவது தூண்!

Wednesday, November 17, 2010

புதுச்சேரியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்!

ஈழ அகதிகள் வெளிநாடு செல்ல உதவியதாக பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு.அய்யப்பன், வீராம்பட்டினம் கவுன்சிலர் சக்திவேல், காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி உள்ளிட்ட 10 பேரை புதுச்சேரி குற்றப்புலணாய்வு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நிபந்தனை பிணையில் வெளிவந்து குற்றப்புலணாய்வு அலுவலகத்தில் நாள்தோறும் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், வீராம்பட்டினம் கவன்சிலர் சக்திவேல் ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து புதுச்சேரி அரசு சிறையில் அடைத்துள்ளது.

அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கத்தோடு புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்தும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய கோரியும் இன்று காலை 10 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியலில் ம.தி.மு.க., பார்வர்டு பிளாக், செந்தமிழர் இயக்கம், தமிழர் தேசிய இயக்கம், நாம் தமிழர் இயக்கம், மண்ணின் மைந்தர்கள் நல உரிமைக் கழகம், அம்பேத்கர் தொண்டர்படை, பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம், லோக்ஜனசக்தி, புரட்சிப்பாவலர் இலக்கியப் பாசறை, புதுவைக்குயில் பாசறை, செம்படுகை நன்னீரகம், தந்தை பெரியார் பாசறை, மாணவர் நல அறக்கட்டளை, மீனவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தோழமை அமைப்பினரும் திரளாக கலந்துகொண்டனர். இதனால் கடலூர், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 200 பெண்கள் உள்ளிட்ட 500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் கைது!

புதுச்சேரியில் இருந்து வெளிநாட்டுக்கு ஈழ அகதிகளை அழைத்து சென்றது தொடர்பாக வீராம்பட்டினம் திமுக கவுன்சிலர் சக்திவேல், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், சிலோன் மணி, படகு ஓட்டுநர் ஜீவா ஆகியோர் புதுச்சேரி குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்துறையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் பயன்படுத்தியப் படகு காரைக்காலில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த டீசல், கேஸ் சிலிண்டர், அடுப்பு உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று, தடயங்களை அழித்தது தொடர்பாக காரைக்கால் மாவட்ட பாமகச் செயலர் தேவமணியும் பின்னர் கைது செய்யப்பட்டார்.பின்னர் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டு, நிபந்தனை ஜாமீனில், வெளியில் வந்து, தினமும் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழக புதுச்சேரி தலைவர் லோகு.அய்யப்பன் மற்றும் வீராம்பட்டினம் கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் இன்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்நிலையத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

Tuesday, November 16, 2010

ஈழ அகதிகளுக்கு உதவிய காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது

புதுச்சேரியில் இருந்து, படகு மூலம் ஈழ அகதிகளை வெளிநாட்டுக்கு அழைத்து சென்ற வழக்குத் தொடர்பாக, காரைக்கால் பாமக செயலர் தேவமணி செவ்வாய்க்கிழமை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரியில் இருந்து வெளிநாட்டுக்கு ஈழ அகதிகளை அழைத்து சென்றது தொடர்பாக வீராம்பட்டினம் திமுக கவுன்சிலர் சக்திவேல், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், சிலோன் மணி, படகு ஓட்டுநர் ஜீவா ஆகியோர் புதுச்சேரி குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸôரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் பயன்படுத்தியப் படகு காரைக்காலில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த டீசல், கேஸ் சிலிண்டர், அடுப்பு உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று, தடயங்களை அழித்தது தொடர்பாக காரைக்கால் மாவட்ட பாமகச் செயலர் தேவமணியும் பின்னர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டு, நிபந்தனை ஜாமீனில், வெளியில் வந்து, தினமும் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர். இந்நிலையில் காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய காரைக்கால் மாவட்ட ஆட்சியர் பிராங்கிளினிடம் புதுச்சேரி குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸôர் பரிந்துரை செய்தனர். அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பிராங்கிளின் உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து தேவமணி, புதுச்சேரியில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

அரசை கண்டித்து போராட்டம்: புதுச்சேரியில் பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் தந்தை பிரியன் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

ஈழத்தமிழர் போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்து போராடி வரும் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், கவுன்சிலர் சக்திவேல், காரைக்கால் பா.ம.க. செயலர் தேவமணி ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் புதுச்சேரி அரசு கைது செய்துள்ளதை கண்டிக்கிறோம்.

இதை அரசு கைவிட வேண்டும். மீறி செய்தால் சட்டரீதியாக போராட்டம் நடத்தவும், அனைத்து அரசியல், சமுதாய இயக்கங்களை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டங்களை நடத்தவும் முடிவெடுத்துள்ளோம் என்றார்.

நன்றி: தினமணி 17.11.2010

Wednesday, November 3, 2010

1,39,652,00,00,000 ரூபாய் கொள்ளை!

வரலாறு காணாத ஊழல்!


1,39,652,00,00,000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அளித்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் தொகை இது.

இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல். நேற்று வரை உத்தேசமாகக் கணக்கிட்டு ஆளாளுக்கு ஒரு தொகை - ரூ. ஐம்பதாயிரம் கோடி - ரூ. எழுபதாயிரம் கோடி - என்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், இப்போது நாட்டின் உயரிய கணக்குத் தணிக்கை அமைப்பு நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பிடம் அதிகாரப்பூர்வமாக - அறிக்கையாக அளித்திருக்கிறது. இன்னமும் ஏன் மெüனம்?

இந்த ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நாளிலேயே இது மாபெரும் ஊழலுக்கான சூதாட்டம் என்பது தெரிந்துவிட்டது. தொலைத்தொடர்புத் துறையின் இணையதளத்தில் திடீரென்று ஒதுக்கீடு குறித்து அறிவிப்பு வெளியானதும், முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டதும், ஒரு மணி நேரத்தில் அவசர அவசரமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதும், விண்ணப்பங்கள் பெறப்பட்ட "சஞ்சார் பவ'னில் நடந்த அடிதடியும்... இவையெல்லாமும் ஊடகங்களில் உடனுக்குடனே வெளியாயின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், எடுக்கவில்லை.

தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலகம், தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வழிகாட்டுதல்களை மீறி ஒதுக்கீட்டில் ஏல முறைக்குப் பதிலாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை முறையைக் கையாள அமைச்சகம் முடிவெடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை.

தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை எந்தச் சம்பந்தமுமில்லாத நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதையும் உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தாம் பெற்ற ஒதுக்கீட்டின் பெரும் பகுதியை பல மடங்கு லாபத்தில் பிற நிறுவனங்களுக்கு விற்றதையும் ஊடகங்கள் வெளியிட்டன. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்போதும் அசையவில்லை.

பிரச்னை நீதிமன்றப் படியேறியது. ""நாட்டின் மதிப்புமிக்க வளமும் பொதுமக்களின் பணமும் வீணடிக்கப்பட்டிருப்பது அதிரவைக்கிறது'' என்று கூறி விசாரணைக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். அரசு நேர்மையானதாக இருந்தால், அப்போதாவது விழித்துக் கொண்டு செயல்பட்டிருக்கும்.

அரசியல் நிர்பந்தம் மற்றும் நீதித் துறையின் நெருக்கடியால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்குகிறது. பல ஆதாரங்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. முக்கியமாக அதிகாரத் தரகர் ஒருவருக்கும் அமைச்சருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்களின் பதிவு மத்திய புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்திருப்பதாகவும், அந்த உரையாடலில் இந்த ஊழல் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அரசு நேர்மையானதாக இருந்தால், உடனடியாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் மேற்கொண்ட தணிக்கையில், இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்திருப்பது தெரியவருகிறது. தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் விளக்கம் கேட்கிறது தணிக்கை அலுவலகம். அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அறிவிக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் தன்னுடைய அறிக்கையை அளிக்கிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இனியும் மௌனம்காப்பது சரியல்ல என்று உணர்ந்து நடவடிக்கையில் இறங்கி இருக்க வேண்டும்.

இந்த வழக்கின் விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு காட்டிவரும் அசாதாரண தாமதத்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது உச்ச நீதிமன்றம். ""அரசு செயல்படும் லட்சணம் இதுதானா?'' என்று கேள்வி எழுப்புகிறது. அரசு நேர்மையானதாக இருந்தால், இவ்வளவு கண்டனங்களுக்குப் பிறகாவது மௌனம் கலைத்திருக்க வேண்டும்.

ஒரு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள். சாதாரண தொகையல்ல. இந்த ஊழல் நடந்த 2007-08-ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் சேர்த்து மத்திய அரசு ஒதுக்கீடு செய்த மொத்தத் தொகைக்கு ஏறத்தாழ இணையான தொகை இது.

இந்தத் தொகையில் நாடு முழுவதும் தலா ரூ. 25 லட்சத்தில் 5,58,608 பள்ளிக்கூடங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 1 கோடியில் 1,39,652 தரமான ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திருக்கலாம்; ரூ. 5 கோடியில் 27,930 கல்லூரிகளை அமைத்திருக்கலாம்; ரூ. 100 கோடியில் எல்லா வசதிகளையும் கொண்ட 1,396 மருத்துவமனைகளை அமைத்திருக்கலாம்; 11,63,766 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைத்திருக்கலாம்; 27,930 கி.மீ. தொலைவுக்கு புதிய மின் ரயில் பாதைகளை அமைத்திருக்கலாம். ஆனால், சில தனிப்பட்ட நபர்களின் கைக் காசாக மாறியிருக்கிறது நாட்டின் வளமும் மக்களின் பணமும்.

ஏறத்தாழ 45.58 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஒரு நாட்டில் - ஒரு நாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கக் குடும்பத்தோடு சேர்ந்து உழைக்கும் கோடிக்கணக்கானோர் வாழும் ஒரு நாட்டில் - இந்த ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்?

ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஆ. ராசா மீண்டும் அமைச்சராகி "நாளை மற்றுமொரு நாளே' என்று தன் பணிகளைத் தொடர்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங், அரசு தன் கடமையைச் செய்வதாகக் கூறுகிறார்; எதிர்க்கட்சிகள் சில மணி நேரக் கூச்சலோடும் அறிக்கைகளுடனும் முடித்துக் கொள்கின்றன; ஊடகங்கள் சில பத்திச் செய்திகளோடு முடித்துக் கொள்கின்றன; மக்களோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே...'!

நன்றி தினமணி 03.11.2010