Wednesday, March 31, 2010

பென்னாகரம்: பா.ம.க.வின் வெற்றி?

சென்னை, மார்ச் 30: பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்றாலும், பா.ம.க.வுக்கும் இந்தத் தேர்தலில் கிடைத்த வாக்குகள் பெரிய வெற்றியாகவே அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியாமல் போனதும், இனி தமிழகத்தில் கூட்டணிகள் உருவாகும் போது பா.ம.க.வுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படாது என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால் அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மட்டுமே, "ஏற்கெனவே படுதோல்வியை சந்தித்த கட்சிகள் கூட சில ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியையே பிடிக்க முடிந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டி பா.ம.க. அழிந்துவிடவில்லை' என்று கூறிவந்தார்.

இருந்தாலும் அரசியல் வட்டாரத்தில் அவரது பேச்சுக்கு யாரும் அதிக முக்கியத்துவம் தரவில்லை. எனவே தங்கள் செல்வாக்கை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் பா.ம.க.வுக்கு ஏற்பட்டது. பென்னாகரம் இடைத்தேர்தல் இதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது.

1996-ல் அக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி பா.ம.க. சார்பில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க அவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.மற்ற இடைத்தேர்தல்களைப் புறக்கணித்து வந்த பா.ம.க. இந்த இடைத் தேர்தலில் தீவிரமாக களமிறங்கியது.

வெற்றி பெறுவோம் என்று வெளியில் கூறினாலும், தங்கள் செல்வாக்கை நிரூபிக்கும் அளவுக்கு வாக்குகள் வாங்க வேண்டும் என்பதே இக் கட்சியின் குறிக்கோளாக இருந்தது. இப்போது சட்டப்பேரவைக்குச் செல்லும் வாய்ப்பை பாமக வேட்பாளர் பெற முடியாமல் போனாலும், கட்சியின் கொடியை தூக்கிப் பிடிக்கும் அளவுக்கு வாக்குகளைப் பெற்றுவிட்டார் என்று கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பா.ம.க. 41,285 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதுவும் எந்தக் கட்சியுடனும் கூட்டு இல்லாமல் தனித்தே இவ்வளவு வாக்குகளைப் பெற்றுள்ளது.2009-ல் மக்களவைத் தேர்தல் நடந்தபோது பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் செந்தில் 32,753 வாக்குகள் பெற்றார். அப்போது அதிமுகவுடன் கூட்டணி இருந்தது. இப்போது தனித்தே 41 ஆயிரம் வாக்குகளை பா.ம.க. பெற்றுள்ளது என்பது திமுக மற்றும் அதிமுகவில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தொகுதியில் 15 ஆயிரம் வாக்குகள் இருந்தாலே, தாங்கள் இல்லாமல் எந்தக் கூட்டணியும் வெற்றி பெற முடியாது என்று ஒரு கட்சியால் கூற முடியும். ÷இப்போது பா.ம.க. 41 ஆயிரம் வாக்குகள் பெற்றிருப்பதால் 2011 தேர்தலுக்கான கூட்டணியை உருவாக்குவதில் மீண்டும் பா.ம.க. முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக ஆரம்பத்தில் இருந்தே தீவிரமாக பணியாற்றாமல், கடைசியில் ஜெயலலிதா வருகை நேரத்தில் மட்டும் தீவிரம் காட்டியதே அக் கட்சி வேட்பாளர் டெபாசிட் தொகையை இழந்திருப்பதற்கு காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

முந்தைய இடைத்தேர்தல்களைப் புறக்கணித்ததால் தொண்டர்களிடையே ஏற்பட்ட ஆர்வக் குறைவு, நிர்வாகிகள் மீதான அதிருப்தி, ஆரம்பத்தில் இருந்தே தீவிர பிரசாரம் செய்தாதது ஆகியவையே தங்களின் மோசமான தோல்விக்குக் காரணம் என்கின்றனர் அதிமுகவினர்.

தேமுதிகவைப் பொருத்தவரை 2006 தேர்தலைவிட இப்போது சுமார் 600 வாக்குகள்அதிகம் கிடைத்துள்ளது. இடைத் தேர்தலில் பெரிய கட்சிகளின் கடுமையான போட்டிக்கு இடையே இவ்வளவு வாக்குகளைப் பெற முடிந்தது அந்தக் கட்சியினருக்கு ஆறுதலாகவே இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ÷2009 மக்களவைத் தேர்தலில் இந்த சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிகவுக்கு கிடைத்த வாக்குகள் 19239 என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். அதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால் தேமுதிகவின் வாக்குகளில் சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணியில் இடம் பெறாமல் போனால் கட்சியின் செல்வாக்கு மேலும் குறையத்தான் வாய்ப்பு இருக்கிறது என்று பரபரப்பாக வாக்கு எண்ணும் இடத்தில் கட்சித் தொண்டர்கள் பேசிக் கொண்டனர்.

திமுகதான் தமது முதல் எதிரி என்று கடந்த வாரம் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தேர்தல் பிரசாரத்திலும் திமுகவை அவர் கடுமையாகச் சாடினார்.

பா.ம.க.வினர் அதிமுகவை அதிகம் விமர்சிக்கவில்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அந்தக் கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகியது என்றாலும், மறுபடி கூட்டணி என்று வரும் போது வாக்கு விவரங்கள்தான் பேசப்படும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும் பென்னாகரம் தொகுதியை மட்டும் வைத்து அரசியல் கணிப்பைக் கூற முடியாது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். 1996-ம் ஆண்டிலேயே தனித்து வென்ற தொகுதி பென்னாகரம். இதே செல்வாக்கு மற்ற தொகுதிகளிலும் இருக்குமா என்பதையும் பார்க்க வேண்டும் என்பது அவர்களின் கருத்து.

இதையும் கருத்தில் கொண்டே முக்கிய கட்சிகள் கூட்டணி வியூகங்களை வகுக்கும். வெற்றியா, தோல்வியா என்பதில் வேண்டுமானால் பா.ம.க. தோற்றிருக்கலாம். ஆனால் பெரிய கட்சிகளை சிந்திக்க வைக்கும் அளவுக்கு வாக்குகள் வாங்கியிருப்பதே பா.ம.க.வைப் பொருத்த வரையில் வெற்றிதான் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஆளும் திமுகவை அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலில் எதிர்கொள்ள பாமக, தேமுதிக, மதிமுக மற்றும் இடதுசாரிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணி ஒன்றை அதிமுக உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். பென்னாகரம் இதற்குப் பிள்ளையார் சுழி போட்டிருப்பதாக முக்கிய அதிமுக பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

நன்றி தினமணி 31.03.2010

Saturday, March 20, 2010

சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு இனி கிடையாது: அம்பிகா சோனி

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்திய அரசால் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி 2011-ல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் நாடுமுழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதற்காக 3539.24 கோடியில் ரூபாயில் மக்கள் தொகை பதிவேட்டை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்களுக்கு சிறந்த சேவையளிக்கவும் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த மக்கள் தொகை பதிவேடு உதவியாக இருக்கும் என்று அரசால் கூறப்படுகிறது.

மக்கள் பதிவேடு திட்டத்தின் ஓர் அம்சமாக கைரேகை பதிவு, அங்க அடையாளங்களை குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்கப்படும். ஒவ்வொரு அடையாள அட்டைக்கும் ஒரு எண் வழங்கப்படும். இதனால் வெளிநாட்டவர் தங்குவதையும் பயங்கரவாதிகள் ஊடுருவுவதையும் தடுக்க முடியும். 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பெற்றோரின் அடையாள அட்டையுடன் சேர்க்கப்படுவார்கள் என அமைச்சர் அம்பிகா சோனி கூறியுள்ளார்.

மேலும் “சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு இனி கிடையாது.” என்றும் கூறியுள்ளார்.

நாட்டு மக்களின் உணர்வுகளும் நியாமான கோரிக்கைகளும் இந்திய ஆட்சியாளர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பது மீண்டும் ஒருமுறை நிறுபிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: சாதிவாரியான கணக்கெடுப்பு 1936-ல் ஆங்கிலேயனால் எடுக்கப்பட்டதோடு சரி. “உங்களுக்கு ஆட்சிசெய்யத் தெரியாது” என்று ஆங்கிலேயன் நம்மைப்பார்த்து சொன்னது ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது.

“பிளஸ்” அல்லது “ஓசி டிக்கெட்”

பேருந்தில் பயனம் செய்தால் பேருந்தின் நடத்துனர் பயனிகளிடம் கட்டணம் வசூலிப்பார். பயனிகளும் இறங்கவேண்டிய ஊரைச்சொல்லி கட்டணத்தை கொடுப்பார்கள். இந்த நடைமுறை அனைத்து பேருந்துகளிலும் உண்டு.

ஒருசிலரிடம் நடத்துனர் கட்டணம் கேட்கும் போது அந்த நபர் “பிளஸ்” என்பார். நடத்துனர் அந்த நபரிடம் விசாரித்துவிட்டு அடுத்த பயனியை கவனிப்பார். அப்படி “பிளஸ்” என்று சொல்பவர்கள் பெரும்பாலும் காவல்துறையினராகவோ அல்லது வேறொரு பேருந்தின் ஊழியராகவோ இருப்பார். இது அவர்களின் பணிநிமித்தம் தொடர்பான புரிந்துணர்வின் அடிப்படையில் நிகழ்வது. அதில் தவறேதும் இல்லை.

ஆனால், மேற்குறிப்பிட்டவர்கள் அல்லாத ஒருசிலர் மிரட்டல் தோரணையில் அல்லது மிடுக்குடன் “பிளஸ்” என்பார். அந்த நபர்கள் பெரும்பாலும் பேருந்து பயனிக்கும் தடத்தில் உள்ள இளைஞர்களாகவோ, ரௌடிகளாகவோ அல்லது ஏதாவது ஒரு அரசியல் இயக்கத்தை சார்ந்தவர்களாகவோ இருக்கிறார்கள். சில நேரங்களில் அந்த நபர்களிடம் நடத்துனர் பனிவுடன் நடந்துகொள்கிறார்.

இதனால் இலாபம் அடைபவர்கள் இதற்காக வெட்கப்படுவதில்லை. ..

நட்டமடைபவர்கள் இதை சகித்துக்கொள்வது ஏனென்றுதான் புரியவில்லை...

Thursday, March 18, 2010

கள் என்றால் உதடுகள் ஒட்டாது; மது என்றால்தான் உதடுகள்கூட ஒட்டும்

ரசாயனப் பொருள்கள் நிரம்பிய மதுவைவிட, இயற்கை பானமான கள்ளால் மனிதனுக்குக் கேடொன்றும் இல்லை என்பதால் கள் இறக்கவும், விற்கவும் அனுமதிக்க வேண்டும் என தமிழகத்தில் இப்போது குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், கள் விற்க அனுமதித்தால் கள்ளச்சாராயச் சாவுகள் அதிகரித்துவிடும் என்பதால் கள்ளை அனுமதிக்க முடியாது என கரிசனத்துடன் கூறுகின்றனர் ஆட்சியாளர்கள்.

அது என்ன ரகசியமோ, கள் மீது ஒட்டாத ஆட்சியாளர்களின் உள்ளம், மது மீது ஒட்டிக் கொள்கிறது. கள் என்றால் உதடுகள் ஒட்டாது; மது என்றால்தான் (ஆட்சியாளர்களின் உள்ளம் மட்டுமல்ல,) உதடுகள்கூட ஒட்டுகின்றனபோலும்.
ஆனால், கள்ளோ, மதுவோ... இரண்டுமே குடிப்போரின் மூளையைச் சிறிதுசிறிதாக மழுங்கடிக்கச் செய்பவை என்னும்போது அவை இரண்டுமே தேவையற்றதுதான். விஷத்தில் நல்ல விஷம் என்றும் தீய விஷம் என்றும் வேறுபடுத்திப் பார்ப்பது தகுமோ?

விபத்தைத் தடுக்கும் நோக்கில், பஸ் ஓட்டுநர்கள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை விதித்துள்ளது அரசு. மீறி கொண்டு செல்வோருக்கு அபராதம் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் விபத்துகளை ஏற்படுத்தி, சமகால சமுதாயத்தைச் சீரழித்து, ஒன்றல்ல பல தலைமுறைகளைத் தள்ளாட வைக்கும் எனத் தெரிந்தும், மதுக்கடைகளை வீதிகள்தோறும் திறந்து விற்பனையின் விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொள்ளும் ஆட்சியாளர்களுக்கு யார் விதிப்பது அபராதமும், தண்டனையும்?

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை வலியுறுத்தினார் பேரறிஞர் அண்ணா. அவரது வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் தலைவர்களால் தமிழகத்தில் மதுவிற்பனைதான் பெருகி வருகிறது. இதனால், இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழக்கின்றனர். கண்ணியத்தையும் மறக்கின்றனர்; வீட்டுக்கும் நாட்டுக்கும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையையும் கைகழுவுகின்றனர்.

கடந்த கால ஆட்சிகளில் தொடங்கப்பட்ட பல நல்ல திட்டங்கள் இருந்தாலும், தொடர்ந்து வரும் அரசுகள் அந்தத் திட்டங்களை சில வேளைகளில் கண்டுகொள்வதில்லை. ஆனால் மதி விலக்கும் மதுவுக்கு மட்டும் விதிவிலக்கு. அரசுகள் மாறினாலும், மதுவின் ஆட்சி மாறாதது.

இலவசத் திட்டங்கள் வேண்டும் என அரசுகளிடம் பொதுமக்கள் யாரும் கோரிக்கை விடுப்பதில்லை. வாக்காளர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே தேர்தலின்போது இலவசத் திட்டங்கள் குறித்து கவர்ச்சிகர அறிவிப்புகளை கட்சித் தலைவர்கள் வெளியிடுகின்றனர். வாக்காளர்களும் விளக்கில் விழுந்த விட்டிலாய் அந்த அறிவிப்புகளில் மயங்கி வாக்களிக்கின்றனர். விளைவு, அந்தக் கட்சிகள் ஆட்சியில் அமர்ந்ததும், வாக்காளர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே இலவசத் திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.

டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயை இலவசத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதாக அரசுகள் கூறுகின்றன. ஆனால், இந்த இலவசத் திட்டங்களைச் செயல்படுத்த பொதுமக்கள் குடிமகன்களாக மாற்றப்படுகின்றனர். குடும்பத் தலைவனைக் குடிக்கச் செய்து குடும்பத்துக்கு இலவசங்கள் வேண்டும் என யார் கேட்டது?

மகாத்மா காந்தி, மூதறிஞர் ராஜாஜி, கர்மவீரர் காமராஜர் உள்ளிட்ட அன்றைய தலைவர்கள் மது தீது எனக்கூறி இளைஞர்களை நல்வழிப்படுத்தினர். இன்றைய ஆட்சியாளர்களோ மதுபானங்களால் கஜானா நிரம்பி வழிவதைக் கண்டு ஆனந்தம் கொள்கின்றனர்.

மதி (அறிவு) என்ற வெள்ளி முளைத்து, மது என்ற சனி தொலைந்தால்தான் நிம்மதி என்ற ஞாயிறு பிறக்கும் என்பது ஆட்சியாளர்கள் அறியாததா?

குடிப்பழக்கம் உள்ள குடும்பத் தலைவன் ஒருவன் தினமும் சராசரியாக மதுவால் ரூ. 70-க்கும் மேல் இழக்கிறான் என்றும், ஆண்டுக்கு 300 நாள்களுக்கு அவன் குடிப்பதாகவும் கணக்கிட்டுப் பார்த்தால் ஓராண்டுக்கு ரூ. 20 ஆயிரத்துக்கும் மேல் அவன் இழக்கிறான்.

ஆக, இத் தொகையை அவன், அறியாதவண்ணம் அவனது பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொள்ளும் அரசு, அவன் குடும்பத்துக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, எரிவாயு அடுப்பு, வேட்டி, சேலைகளை வழங்குவதாகக் கூறுகிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, மக்களைக் குடியிலிருந்து தடுத்தால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் தங்கள் தேவைகளைத் தாங்களே, உடனடியாக இல்லையென்றாலும் காலப்போக்கிலாவது நிறைவு செய்துகொள்ளும் என்பது உண்மைதானே!

தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையும் ஓராண்டில் உணவு, மருந்துக்காகச் செலவிடும் தொகையுடன் ஒப்பிட்டால் மது குடிக்கச் செலவிடும் தொகையே அதிகமாக உள்ளதாகப் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்நிலை முற்றிலும் மாற வேண்டும். இலவசத் திட்டங்களால் மக்கள் ஏமாற்றப்படும் நிலையும் மாற வேண்டும்.

மது வாங்கும் சக்தியை மக்களிடம் அதிகரிப்பதை அரசு கைவிட்டு, வாழ்வை வளப்படுத்தவும், வசப்படுத்தவும் ஏற்றவகையில் பொருள்களை வாங்கும் சக்தியை அதிகரிக்க மக்களைத் தயார்படுத்த வேண்டும்.

உழைத்துச் சம்பாதித்த தொகை முழுவதையும் குடித்தே அழிக்கும் தன்னால்தான், தன் குடும்பம் ஒரு ரூபாய் அரிசிக்கும், ஒரு வேட்டி, சேலைக்கும் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறது என்பதை ஏழைக் குடிமகன்களும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

பொதுநலம் விரும்பும் அரசு என்பது மக்களை ஒழுக்கமாகவும், கண்ணியத்துடனும் இருக்கச் செய்ய வேண்டும். மது விற்கும் அரசு உள்ளவரை மக்கள் வறுமைப் பிணியிலிருந்து மீளுதல் என்பது மிகக் கடினமே. குடும்ப மானத்தைக் குடிக்கும் மதுவை இனி தான் குடிப்பதில்லை என குடிமக்களும், மதுவால் வரும் வருமானம் பாவத்தின் பலன் என்பதால் மதுக்கடைகளை மூட வேண்டும் என ஆட்சியாளர்களும் தீர்மானமாய் கொண்டால் இலவசங்கள் தேவைப்படாது.

மதுக்கடைகள் மற்றும் குடிமகன்களால் ஏற்படும் தொல்லைகளைக் கண்டு மனம் வெறுத்து டாஸ்மாக் கடைகளை இடம் மாற்ற வலியுறுத்தியும், மதுவை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தியும் தற்போது பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபடுவதாக வரும் பத்திரிகைச் செய்திகள் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ளாதது ஏனோ?

பகுத்தறிவுச் சிந்தனையில் பழுத்த பழமாகி, மூட நம்பிக்கைகளை முற்றும் வெறுப்பவர் தமிழக முதல்வர். ஆனால், மதுவால் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாயை ஆக்கப்பூர்வமான மாற்று வழிகளில் தேடலாம் என உறுதி கொண்டு, மதுக்கடைகளை நிரந்தரமாக மூட, நம்பிக்கை கொள்வார் எனில், அவரை பல கோடி ஏழை இதயங்கள் வாழ்த்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மா. ஆறுமுககண்ணன்

நன்றி தினமணி, 18.03.2010

Monday, March 15, 2010

ஏன் இந்த அவசரம்?


ஒரு வழியாக தமிழகத்தின் “செட்டப் சட்டமன்றம்” 13-ஆம் தேதி திறக்கப்பட்டுவிட்டது.



கடந்த ஆறு மாதத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் அதிக நேரம் ஒதுக்கி ஆர்வத்தோடும் கவனத்தோடும் செயல்பட்ட பொது வேலை ஒன்று இருக்கும் என்றால் அது தமிழகத்திற்கு புதிய சட்டமன்றம் கட்டும் பணியாகத்தான் இருக்கும். காலத்திற்கு ஏற்ப தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றமும் தலைமைச் செயலகமும் கட்டப்பட வேண்டும் என்பது நியாயமான சிந்தனைதான்.



ஆனால், சட்டமன்றம் கட்டும் பணிகள் போர்கால அடிப்படையில் இரவு பகலாக செய்து வேலை முடிந்தும் முடியாமலும் அரைகுறையாக கட்டி திரைப்பட கலை இயக்குனர்களைக்கொண்டு போலி கட்டுமானங்கள் செய்து பிரதமரையும் பாரதமாதா சோனியாவையும் அழைத்துவந்து திறப்பு விழா நடத்த வேண்டிய அவசம் என்ன? என்பதுதான் நாட்டுமக்களின் கேள்வி.


பொதுவாக அரசு ஒரு கட்டுமானப்பணியை மேற்கொள்ள வேண்டுமென்றால் அதற்கான திட்டங்களை வகுத்து, நிதி ஒதுக்கி, சிறந்த கட்டுமான நிறுவனத்திடம் பணியை ஒப்படைத்து, அரசு அதிகாரிகளும் கண்காணித்து, விருப்பமிருந்தால் என்றாவது ஒரு நாள் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பார்வையிட்டு பணிகளை முழுமையாக செய்து முடித்துவிட்டு திறப்பு விழா நடத்துவதுதான் முறை.




அதை விடுத்து நாள்தோறும் புதிய சட்டமன்றப் பணியை பார்வையிடுவதும், ஆலோசனை வழங்குவதும், மறுநாள் அனைத்து ஊடகங்களிலும் ஒரேமாதரியான படம் வெளியிட்டு செய்தி வெளிவருவதும் என தமிழக முதல்வரின் அன்றாட அலுவலாக இது இருப்பது ஏன்? என்று தெரியவில்லை. ஒரு களஆய்வாளரோ அல்லது தலைமைப்பொறியாளரோ செய்யவேண்டிய அன்றாடப்பணியை ஒரு முதலமைச்சர் செய்ய வேண்டிய அவசியமென்ன?

அதுமட்டுமன்றி தமிழக அரசு அதிகார வரம்புக்குள் உட்படாத முதல்வரின் மகள் கனிமொழி, பேரப்பிள்ளைகள் போன்ற முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் கட்டுமானப்பணியை பார்வையிடவேண்டியதன் அவசியம் என்ன? ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றமுறையில் கனிமொழிக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் தமிழகத்தில் உள்ள மற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாதது ஏன்?

அதுமட்டுமன்றி கட்டப்படும் சட்டமன்றம் தமிழ்நாட்டு மக்களுக்காக கட்டப்படுவது. அது தமிழ்நாட்டின் குறியீடுமாகும். ஆனால் இந்த கட்டிட அமைப்புமுறையில் தமிழகத்தின் குறியீடு என்று எதுமில்லை. ஒரு பிரமாண்டமான தொழில்நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் போன்றே இது தோற்றமளிக்கிறது.



தற்போது ஜார்ஜ் கோட்டையில் இயங்கும் சட்டமன்ற கட்டிடமும், தலைமைச்செயலகமும் இடிந்துவிழும் நிலையில் இல்லாமல் உறுதியாகவே உள்ளது. மேலும் பல ஆண்டுகள் அரசின் இயக்கத்தை தாங்கக்கூடிய நிலையிலேயே ஜார்ஜ் கோட்டை உள்ளது. பிறகு ஏன் இவ்வளவு அவசரம்?
தமிழனால் கட்டப்பட்ட கர்நாடக சட்டமன்றம்

பள்ளிகள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்படும்!

தமிழகத்தில் இப்போது பா.ம.க.​ ஆட்சியில் இருந்தால் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

தமிழக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னதாக,​​ கடந்த 8 ஆண்டுகளாக பா.ம.க.​ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்படுகிறது.

2010-2011-ம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ராமதாஸ் வெளியிட,​​ அக்கட்சி எம்.எல்.ஏ.​ வேல்முருகன் பெற்றுக் கொண்டார்.

தமிழகத்தில் இப்போது பா.ம.க.​ ஆட்சியில் இருந்தால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து அதில் விவரிக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியின் பயன் மக்களைச் சென்றடையவில்லை.​ இந்த நிலையை மாற்றக் கூடியதாக நிதிநிலை அறிக்கை இருக்க வேண்டும்.​ நிதிநிலை அறிக்கையின் மூலம் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று பா.ம.க.​ விரும்புகிறது.

மாநில மொத்த வருவாயில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும்.​ பள்ளிக்கல்வி முழுவதும் அரசினால் வழங்கப்படும்.​ தனியார் பள்ளிகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி,​​ அனைத்தும் அரசுப் பள்ளிகளாக மாற்றப்படும்.

தொழில் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு மூலம் பயிலும் மாணவர்களின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும்.

நாட்டின் குடியரசுத் தலைவருக்கு கிடைக்கும் மருத்துவ சிகிச்சை,​​ ஒரு சாதாரண குடிமகனுக்கும் கிடைக்கும் வகையில்,​​ ஒரு விரிவான மக்கள் நல்வாழ்வுக் கொள்கையை அரசு செயல்படுத்தும்.

உலகமயக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள சமத்துவம் அற்ற நிலையை மாற்றி,​​ மண்ணுக்கேற்ற பொருத்தமான மாற்றுக் கொள்கைகளை அரசு செயல்படுத்தும்.​ சிறப்பு வேளாண்-பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படும்.

வேளாண் வளர்ச்சிக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.​ சென்னை மாநகரை வாழத் தகுந்த நகரமாக ஆக்கும் வகையில் போக்குவரத்து முறை மாற்றி அமைக்கப்படும்.​ 'மக்களை இயங்கச் செய்வோம்;​ ஊர்திகளை அல்ல' என்ற அடிப்படையில் மக்களை மையப்படுத்தி போக்குவரத்து முறை உருவாக்கப்படும்.

அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் தேவையான அளவு குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படும்.​ ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்.

குடிசை வாழ் மக்களின் வாழ்விட உரிமை காப்பாற்றப்படும்.​ அரசின் ஒவ்வொரு திட்டத்திலும் 40 சதவீத நிதி பெண்களுக்காக செலவிடப்படும்.​ மகளிர் இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட,​​ சிறுபான்மையின மக்களுக்கு உள்ஒதுக்கீடு வலியுறுத்தப்படும்.

பின் தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்காக தனி கவனம் செலுத்தப்படும்.

பா.ம.க.​ மதிப்பீட்டின்படி நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய் வரவு ரூ.66 ஆயிரத்து 686 கோடியாக இருக்கும்.​ ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு ரூ.41 கோடியே 52 லட்சம் மொத்த நிதிப் பற்றாக்குறையாக இருக்கும்.​ இது சென்ற ஆண்டு நிதிப் பற்றாக்குறையான ரூ.1,894 கோடியைவிட குறைவு என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.​ மூர்த்தி,​​ பசுமைத் தாயகம் அமைப்பின் பொறுப்பாளர் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினமணி 15.03.2010

Thursday, March 4, 2010

மனித மூளையை கழிவறையாக்கும் ஊடகங்களை புறக்கணிப்போம்!

நாட்டின் வாழ்வாதாரமே கேள்விகுறியாக்கப்பட்டுள்ள இன்றை சூழலில், பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய ஊடகங்கள் இன்று விபச்சாரத்தையே முதன்மையான தொழிலாக செய்து வருகின்றன.

காசுக்காக உடலை விற்கும் ஒரு விலைமாதரிடம் இருக்கும் குறைந்த பட்ச நேர்மைகூட இன்று ஊடகங்களுக்கு இல்லை என்பதே உண்மை. மக்கள் பணத்தில் மக்களுக்கே நஞ்சுவைக்கும் பணிகளையே இன்றை ஊடகங்கள் சிறப்பாக செய்து வருகின்றன. இதை ஒழுங்குபடுத்த வேண்டி அரசு இயந்திரமும், ஆட்சியாளர்களும் தங்கள் இச்சைகளை தீர்க்கவே ஊடகங்களுக்கு எலும்புத்துண்டுகளை வீசி வளர்க்கின்றன.

ஒருகாலத்தில் மஞ்சள் பத்திரிக்கை, நீலப்படங்கள் போன்றவைகள் மறைமுகமாகவே வாசிக்கப்பட்டன. இன்று இவைகள் மட்டுமே வெளிப்படையாக விற்கப்படுகின்றன. இவைகளை விற்பவர்களும் வாங்குபவர்களும் இதற்காக குறைந்தபட்சம் வெட்கப்படுவதுகூட கிடையாது. மாறாக அவர்களே மக்களை காக்கும் இரட்சகர்களாக உலாவருகின்றனர்.

பேருந்து நிலைய கழிப்பறை நாற்றம் தாங்காமல் மூக்கை பிடிக்கும் நாம்; மக்களின் மூளையை கழிவறையாக்கும் ஊடகங்களை ஏன் புறக்கணிக்கக்கூடாது?

எதை மூடிமறைக்க “நித்யானந்தா படம்” தொடர்ந்து காட்டப்படுகிறது?

ஊடகங்களை ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், வியாபாரிகளும் கைப்பற்றிய பிறகு மக்கள் நலனும் மக்களின் சுயசிந்தனையும் அழிக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை.

கடந்த இருபது ஆண்டுகளாக நமது நாட்டில் நிகழும் எந்தவொரு முக்கிய பிரச்சனையும் மக்களின் கவனத்திற்கு செல்லவில்லை என்பதும், அப்பிரச்சனைகளை மக்கள் ஒருபோதும் கவனிக்கக்கூடாது என்பதிலும், இதையும் மீறி ஒருசிலர் அப்பிரச்சனையை கையிலெடுத்து போராடும்போது அதை மழுங்கடிப்பதிலும் ஒடுக்குவதிலும் ஆட்சியாளர்கள் தொடர்ந்து வெற்றி பெருகிறார்கள் என்பதும் உண்மையிலும் உண்மை...

கடந்த இரண்டு நாட்களாக ஆளுங்கட்சியினரின் குடும்பத்திற்கு சொந்தமான ஊடகங்களில் ஒரு சாமியாருடன் ஒரு நடிகை உறவு கொண்டதை படம் பிடித்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிகழ்வு உலகின் அதி முக்கிய நிகழ்வாக அரைமணி நேரத்திற்கு ஒருமுறை “சன் நியூஸ்” தொலைக்காட்சியில் தொடர்ந்து காட்டப்படுகிறது. சன் குழுமத்திற்கு சொந்தமான நாளேடுகளும் அந்தப்படங்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளன.

தி.மு.க.வின் ஆதரவு இதழான “நக்கீரன்” போன்ற புலனாய்வு இதழ்களும் இந்த படங்களை அட்டையில் அச்சிட்டு தமிழ்நாடு முழுவதும் தொங்கவிட்டுள்ளன. அவர்களுடைய இணையதளத்திலும் பின்னணி இசை, பாடல்கள் போன்றவற்றை இணைத்து இப்படத்தை ஓடவிடுகிறார்கள். பணம் கட்டினால் முழுபடத்தையும் பார்க்கலாம் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஊடகங்கள் எதிர்பார்த்தபடி நாடு முழுவதும் இந்த படுக்கையறை படங்கள் மக்களால் மனதளவில் இரசிக்கபடுகின்றன. உதட்டளவில் வெறுக்கப்படுகின்றன. சுயசிந்தனை உள்ளவர்களுக்கு இது தொடர்பாக பல்வேறு ஐயங்கள் எழுகின்றன.

33 வயதுடைய ஒரு இளைஞன் ஒரு பெண்ணின் முழு சம்மதத்துடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று இந்த நாட்டில் எப்போது சட்டம் போட்டார்கள் என்று தெரியவில்லை...

சட்டப்படியான எந்தவொரு புகாரும், விசாரனையும் நடைபெறாமல் இப்படத்தை வெளியிட இவர்களுக்கு யார் அனுமதியளித்தது என்றும் தெரியவில்லை...

ஆபாச படங்களை வெளிப்படையாக விற்றாலோ, வெளியிட்டாலோ இந்த நாட்டில் குற்றம் என்று யாரோ சொன்னதாகக் கேள்வி... இந்த நாட்டின் ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையிலும் இந்த ஆபாசப்படம் இரண்டு நாட்களாக தொடர்ந்து காட்டப்படுகிறது... சிறப்பு அனுமதி பெற்று இப்படம் காட்டப்படுகிறது என்று நாம் நம்புவோமாக...

“காதலும் காமமும் உயிர் இயற்கை அல்ல. இன்று முதல் இந்த நாட்டில் இவை தடைசெய்யப்படுகிறது. தேவைப்படுபவர்கள் சன் குழுமத்திடம் முன் அனுமதி பெறவேண்டும். மேலும் ஒரு HD resolution கேமராவை பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் இதில் ஈடபடவேண்டும்.” என்ற அறிவிப்பு எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்க்கலாம். (சன் குழுமத்திற்கு பிட்டுபட பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் எந்த ஏற்பாடு)

..............................................


ஆட்சியாளர்களின் செயல்பாடுகளால் மக்கள் பாதிக்கப்படும் போதும், அவர்கள் மீது மக்கள் வெறுப்படையும் போதும் அது தங்கள் மீதான கோபமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக மக்களின் கவனத்தை திசைத்திருப்ப நமது ஆட்சியாளர்கள் பல்வேறு தந்திரங்களை கையாளுகிறார்கள்.

குறிப்பாக,

அரசியல் நாடகங்களை நடத்துவது...

சலுகைகளை அறிவிப்பது....

விழாக்களை நடத்துவது...

கிரிக்கெட் போட்டி நடத்துவது...

அரசியல் எதிரிகள் அல்லது ஏதாவது ஒரு தலைவரை தாக்குவது... அல்லது அவர்கள் மீது புழுதிவாரி தூற்றுவது... அதனால் உருவாகும் எதிர்விளைவுகளை செய்தியாக்குவது... கேள்வி பதில் அறிக்கை வெளியிடுவது.... எதிர்விளைவுகளை அடக்குவது...

என்கவுண்டர் நடத்துவது...

நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் நடக்கும் காமளியாட்டங்களை படம்பிடித்து செய்தியாக்குவது...

என கணக்கிலடங்கா யுக்திகளை கையாள்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது சுவாமி நித்யானந்தா-நடிகை ரஞ்சித பாலுறவு படம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால்,

தன் நலனைத்தவிர வேறு எதைப்பற்றியுமே சிந்திக்காத “சன் குழுமம்” இந்தப் படத்தை அரைமணிநேரத்திற்கு ஒருமுறை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து வெளியிட்டு வருவதுதான் நமக்கு மேலும் ஐயத்தை ஏற்படுத்துகிறது.

இந்தச் செய்தியால் மக்கள் சிந்திக்க மறந்த நிகழ்வுகள் ஏராளம்...

நாடாளுமன்றம் கூடும் போதெல்லாம் பிரதமர் மண்மோகன் சிங் வெளிநாடு செல்வது...

நடுவணரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கை...

விலைவாசி ஏற்றம்...

வேளாண் உற்பத்தியில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தது...

மரபணுமாற்ற உணவுப்பொருட்களுக்கு எதிராக போராடுபவர்களை ஒடுக்க சட்டம் கொண்டுவர இருப்பது...

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது...

இராகுல் காந்தி என்ற ஒரு கட்சித் தலைவர் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று தொடர்ந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவது...

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என “மண்”மோகன் சிங் மக்களின் முகத்தில் அடிதார்போல் சொல்வது...

இந்திய அரசின் வெளியுறவ கொள்கை தோற்றுப்போனது...

இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்துவருவது...

நடுவண் அரசுக்கு கருணாநிதி எந்தக் கடிதம் எழுதினாலும் சோனியா அதை தூக்கி குப்பைத் தொட்டியில் போடுவது...

கருணாநிதியின் தொடர் தமிழினத் துரோகம்...

விளைநிலங்களை தொழில் வளர்ச்சியின் பேரால் அழிப்பது...

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆட்சியாளர் ஆயிரகணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவிப்பது...

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் காவல்துறையினர் விரட்டியடித்ததால் செத்தது...

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாடு சட்டமன்றத்தின் புதிய கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்காமல் கொத்துங் குறையுமாக ஒப்பேற்றி... திரைப்பட கலை இயக்குனர் தோட்டாதரணியை வைத்து 2 கோடி ரூபாய்க்கு செட்டு போட்டு திறக்க முயற்சிப்பது...

என ஓராயிரம் நிகழ்வுகள் மறைப்பட்டுள்ளன...

வாழ்க! “சன... நாய... கம்...”

Wednesday, March 3, 2010

சன் பிக்சர்ஸ்-நக்கீரன் இணைந்து வழங்கும் “நித்யானந்தா”

தமிழ் திரைப்பட தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களான சன் பிக்சர்ஸ்சும், நக்கீரன் டாக்கீசும் இணைந்து வழங்கும் “நித்யானந்தா” என்ற முழுநீலத்திரைப்படம் உலகெங்கும் தற்போது வெற்றிநடை போடுகிறது. வெளியிட்ட முதல் நாளிலேயே வசூலில் முந்தய சாதனைகளை இத்திரைப்படம் முறியடித்துள்ளது...


இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்ற பணிகளை சிறப்பாகச் செய்த படைப்பாளிகளின் பெயர்கள் பாதுகாப்பு கருதி கமுக்கமாக வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் இவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.

Monday, March 1, 2010

எனது நாட்டை காக்க யாருமே இல்லையா?

மத்திய அரசு ஏன், எதற்காக இப்படியெல்லாம் நடந்துகொள்கிறது? அப்படி என்னதான் நமது இந்திய அரசுக்கு நிர்பந்தம்? யாருடைய வற்புறுத்தலின் பேரில், யாருடைய நன்மையைக் கருதி இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து வருகிறது?- இதுபோன்ற கேள்விகளை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் எழுப்பியே தீரவேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த சில நாள்களாக நமது அரசின் சில செயல்பாடுகள் மக்களாட்சித் தத்துவத்துக்கும், தனிமனித சுதந்திரத்துக்கும் எதிரானதாக அமைந்திருப்பதை நம்மில் பலர் உணராமல் இருக்கிறோம். அதுமட்டுமல்ல, மிகவும் ரகசியமாக சில உடன்பாடுகள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. இந்தியாவின் வருங்காலத்தையே பாதிக்கும் இந்த உடன்பாடுகளுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தரப்பட்டிருப்பது நம்மிடமிருந்து மூடிமறைக்கப்பட்டிருக்கிறது.

விலைவாசி உயர்வு, நிதிநிலை அறிக்கைகள், இடைத்தேர்தல்கள் என்று அன்றாட அரசியல் நிகழ்வுகளை மட்டுமே மையப்படுத்திச் செயல்படும் நமது எதிர்க்கட்சிகளும் சரி, அவ்வப்போதைய பரபரப்புகளை விலைபேசி, தங்களது வாடிக்கையாளர்களையும் வாசகர்களையும் தேசத்தை எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்னைகளைப் பற்றிச் சிந்திக்கவே அனுமதிக்காமல் செயல்படும் ஊடகங்களும் சரி, மத்திய அரசின் முடிவுகளால் கேள்விக்குறியாகப்போகும் இந்திய விவசாயிகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் இருப்பது அதைவிட அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த வாரம் அமெரிக்காவுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை வெளியில் தெரியாதவண்ணம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அடுத்த மாதம் கையொப்பமிடப்பட இருக்கும் விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி விவசாய விரிவாக்கத்தில் தனியார்மயத்தைப் புகுத்துவதும் இந்திய வேளாண்மையில் அமெரிக்க விவசாயப் பன்னாட்டு நிறுவனங்கள் பங்குபெறுவதும் அனுமதிக்கப்பட இருக்கிறது.

அமெரிக்காவில் விவசாயம் என்பது வியாபாரம். இந்தியாவிலோ விவசாயம் என்பது வாழ்வாதாரம். இந்திய விவசாயி வியாபாரநோக்கில் தனது வயலில் உழுது பயிரிட்டு சாகுபடி செய்வதில்லை. தனது வயிற்றுப்பிழைப்புக்காக, வாழ்வாதாரமாக விவசாயத்தில் ஈடுபடுகிறார்.

இவரது விவசாயம் லாபநோக்கில் நடத்தப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி இந்த விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி லாபகரமாக விவசாயம் செய்ய வழிவகுப்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாகிவிட்ட நிலங்களில் பயிரிடுவதை யார் தடுக்க முடியும்? இந்திய-அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் கர்க்கில், மான்சாண்டோ போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்க வழிகோலப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் இவர்கள் உறுப்பினர்களானால் நேரடியாகவே அரசின் மீது தங்களது செல்வாக்கைச் செலுத்துவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

இத்துடன் முடிந்துவிட்டது என்று நினைத்துவிடாதீர்கள். ஒரு சர்வாதிகார ஆட்சியில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு ராட்சத சட்டத்தையும் இந்தப் பன்னாட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் நமது ஆட்சியாளர்களின் உதவியுடன் நம்மீது திணிக்க இருக்கிறார்கள். உயிரி தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம் ஒன்றை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நம்மை விடுங்கள். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் கவலைப்படுகிறார்கள்?

முறையான சாட்சியம் அல்லது விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில் அல்லாமல் மரபணு மாற்ற விதைகள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பற்றித் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது இந்தச் சட்டம் பாயும். இந்தச் சட்டமுன்வரைவின் 13(63) -வது பிரிவின்படி, புதிய அறிமுகங்களுக்கு எதிராகத் தக்க ஆதாரம் இல்லாமல் பிரசாரம் செய்பவர்கள் குறைந்தது 6 மாதம் முதல் ஓராண்டு சிறைத்தண்டனை பெறுவதுடன், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவார்கள்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழில்நுட்பவியல் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்ட முன்வரைவின் 27(1) பிரிவின்படி, மரபணு மாற்றப்பட்ட பொருள்களின் ஆராய்ச்சி, அனுமதி போன்ற விஷயங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பார்வைக்கு உள்படுத்தப்படுவது மறுக்கப்படுகிறது. மேலும், மரபணு தொடர்பாக எந்தவொரு மாநிலத்தின் முடிவையும் நிராகரிக்கும் உரிமை உயிரித் தொழில்நுட்பவியல் துறையால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்கு இருக்கும் என்கிறது இந்தச் சட்ட முன்வரைவு.

இப்போதல்லவா தெரிகிறது ஏன் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விஷயத்தில் பின்வாங்கினார் என்பதும், தாற்காலிகமாகக் கைவிடப்பட்டது என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தார் என்பதும். இப்போதல்லவா தெரிகிறது, பிரதமர் மன்மோகன் சிங் ஏன் மரபணு மாற்றப்பட்ட பொருள்கள் மீதான முடிவு தாற்காலிகமானதுதான் என்று அறிவித்தார் என்பது.

இந்த ஆட்சியும் அரசும் யாருக்காக நடைபெறுகிறது? இவர்கள் இந்தியாவை என்னதான் செய்யக் கருதுகிறார்கள்? தனிமனித உரிமைக்கு, எதிர்ப்புக் குரல் எழுப்புவதற்கு இந்தியக் குடிமகனுக்கு உரிமை மறுக்கப்படும் அளவுக்கு நமது ஆட்சியாளர்களின் மரபணு மாற்றப்பட்ட அவலநிலையைக் கண்டு நமது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒருவருக்குக்கூட எதிர்ப்புக் குரல் எழுப்பத் துணிவில்லையா, இல்லை இவர்களும் விலைபேசப்பட்டு விட்டனரா?

பாரதியின் பாஞ்சாலி சபதம்தான் நினைவுக்கு வருகிறது. "கோயில்பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல்போலும்...
வாயில் காத்து நிற்போர் வீட்டை வைத்து இழத்தல்போலும்...''

சீச்சீ... சிறியர் செய்கை!

நன்றி: தினமணி 27.02.2010