Wednesday, June 30, 2010

வெங்காய மாநாடு!

“உலகத் தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம். இது எதற்கு? கும்பகோணம் மகாமகத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது. காங்கிரசைவிட, இந்த மந்திரிசபை தேவலாம் என்கிறார்கள். இந்த நேரத்தில் ஏன் இந்த கூத்து? கனம் அண்ணாதுரை 1972 இல் பதவிக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிடட்டும்? உலகத் தமிழ்மாநாடு கூடிக் கலைந்த பின் சூத்திரன், சூத்திரனாகத் தானே இருக்கப் போகிறான்? இழிவு ஒழியப் போகிறதா? கண்ணகி சிலையும் கம்பன் சிலையும் எதற்கு? இவர்கள் நமது இனப் பெருமையை ஒழித்தவர்கள் அல்லவா? - பெரியார் ‘விடுதலை’ 15.12.1967

1968-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டு குறித்து தந்தைபெரியார் கூறிய கருத்து. அன்று அவர் கூறியது போலவே உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை தனது சுயநலத்திற்காக மகாமக திருவிழாபோல் கூடிக்களையும் மாநாடாக மாற்றிய பெருமை அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் மு.கருணாநிதியையே சேரும்.
தான்செய்த தமிழினத் துரோகங்களை மூடிமறைக்க கருணாநிதியால் தற்போது நடத்தப்பட்ட கோவை செம்மொழி மாநாட்டை தந்தைப்பெரியார் பார்த்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்?

Monday, June 28, 2010

பழ. கருப்பையா மீது தாக்குதல்: கருணாநிதியின் சனநாயகம்

எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என எத்தனையோ சுதந்திரங்கள் இந்தநாட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் இவை எதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடையாது என்பதே உண்மை. குறிப்பாக மானமுள்ளவர்களும், சுயசிந்தனையாளகளும் மக்களுக்காக சிந்திக்கவோ செயல்படவோ கூடாது என்பதை தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் மீண்டும் மீண்டும் நிறுபித்து வருகின்றனர்.

அடக்குமுறையின் செயல்வடிவம் தான் ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும் மாறுபடுகிறதே தவிர மற்றபடி யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல. அதிலும் குறிப்பாக செயலலிதாவும், கருணாநிதியும் தங்களுக்கென்று தனித்தனி “அடக்குமுறை கொள்கை”யை தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

செயலலிதா அவர்கள் சனநாயகம், கருத்துச் சுதந்திரம், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, ........ என எதைப்பற்றியும் கவலைப்படவும் மாட்டார். தனக்கு சரி என்று தோன்றியதையும், தன்னை எதிர்ப்பவர்களையும் எதைப்பற்றியும் கவலைப்பாடாமல் ஒடுக்குவார் அல்லது அழித்துவிடுவார்.

கருணாநிதி அவர்கள், கொள்கை, இலட்சியம், பகுத்தறிவு, அரசியல், சனநாயகம், கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் போன்றவைகளைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதுவார், மணிக்கணக்காக பேசுவார். ஆனால் தனக்கு எதிரான எதையுமே விட்டுவைக்கமாட்டார். குறிப்பாக கருணாநிதிக்கு எதிரானவர்கள் தமிழர்களாக இருந்துவிட்டால் காத்திருந்து கருவருத்துவிடுவார். இதற்கு எடுத்துக்காட்டுகள் தேவையில்லை. கருணாநிதியின் வாழ்க்கையே தமிழினத்திற்கு எதிரானதுதான்.

அதன் தொடர்ச்சியான ஒரு நிகழ்வே தற்போது பழ.கருப்பையா அவர்கள் தாக்கப்பட்டது...

சென்னை இராயப்பேட்டையில் பழ. கருப்பையாவின் அவர்களின் வீடு உள்ளது. இங்கு மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளோடு அவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்கியவர்கள் பழ.கருப்பையாவை பார்த்து “நீ என்ன பெரிய எழுத்தாளனா, இந்த வாய் தானே கலைஞருக்கு எதிராக பேசுகிறது” என்று சொல்லி வாயில் குத்தியுள்ளனர். “இந்த கைதானே எழுதியது” என்று அவருடைய கையில் குத்தியுள்ளனர். “இது ஆரம்பம்தான்” என்று கூறிக்கொண்டே வீட்டில் உள்ள பொருள்களை அடித்து நொறுக்கியுனர்.

கருணாநிதியின் அரசியல் நிலைப்பாடுகள், தமிழினத் தூரோகச் செயல்கள், தமிழின துரோகத்தை மறைக்க நடத்தப்பட்ட செம்மொழி மாநாடு என அவரையும் அவரது ஆட்சியையும் பற்றி பழ.கருப்பையா அவர்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். அதற்காகவே இந்த பரிசு கருணாநிதியால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல் ஊடகத்தை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தும் ஊடக வேசிகள் ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்காமல் இதை ஒரு செய்தியாக மட்டுமே வெளியிடுவார்கள். ஒரு சில சூராதி சூரர்கள் வழக்கம் போல் இப்படி ஒரு நிகழ்வு நிகழந்ததாகவே தங்களுடைய ஊடகத்தில் காட்டிக்கொள்ளமாட்டார்கள்.

வாழ்க! சனநாயகம்...

Wednesday, June 23, 2010

திராவிடரா? தமிழரா? எது நமது அடையாளம்? நான் தமிழன்!

தமிழர்களின் அடையாளம் எது? திராவிடரா? அல்லது தமிழரா? என்ற கேள்விக் கணையுடன் வரலாற்று, அரசியல் ரீதியிலான ஒரு விவாதம் சூடாகக் கிளம்பியுள்ளது.

கோவையில் தமிழக அரசால் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அம்மாநாடு குறித்து முரசொலியில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு,கருணாநிதி எழுதிய கடிதம் மற்ற நாளிதழ்களில் திமுக, தலைமைக் கழகத்தால் விளம்பரமாக அளிக்கப்பட்டுள்ளது. அதில், “திராவிடத்தை, திராவிடர் நாகரீகத்தை, அவர் தம் கலையை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, பழக்க வழக்கங்களை, தென்னகப் பலாக்கனியான் - திராவிடத்தில் குலுங்கிடும் இனிய தமிழ்ச் சுளைகளை; ஆம், இலக்கியச் சுளைகளை...” என்று எழுதியுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்க, அதுவே தமிழரின் அடையாளம் எது? திராவிடரா? தமிழரா? என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் துவக்கப்பட்டுள்ள இந்த விவாதம் சென்னை, தியாகராயர் நகரிலுள்ள செ.தெ.நாயகம் மேனிலைப் பள்ளி மைதானத்தில் திங்கட்கிழமை மாலை ஒரு கருத்தரங்கமாக துவங்கி நடைபெற்றது.

கருத்தரங்கின் முதல் பேச்சாளராக வந்த தமிழ்த் திரைப்பட இயக்குனர் புகழேந்தி, தமிழர் என்று சொல்லின் மருவே திராவிடர் ஆனது என்பதை தேவநேயப் பாவாணர் உறுதி செய்துள்ளதை எடுத்துக் கூறி, ஒரு மருவு எப்படி தொன்மையான தமிழினத்தின் அடையாளம் ஆகும் என்று கேள்வி எழுப்பினார்.

தனது கடிதத்தில் திராவிடர், திராவிடம் என்று கூறி அடையாளப்படுத்த முயற்சிக்கும் தமிழக முதல்வர், திராவிடத்தின் அங்கமாகவுள்ள கருநாடகத்திலோ அல்லது ஆந்திரத்திலோ தேர்தலில் நிற்கத் தயாரா என்று கேட்டது மட்டுமின்றி, தனது அடையாளம் என்ன, தன்னை திராவிடர் என்கிறாரா அல்லது தமிழர் என்கிறாரா என்பதை முதலில் கருணாநிதி தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

தமிழர் என்ற உணர்வு இல்லாத காரணத்தால்தான், தமிழ் மொழியை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவிட்டு, அதனை நடைமுறைக்கு கொண்டு வர அனுமதி பெற எந்த முயற்சியும் தமிழக முதல்வர் எடுக்கவில்லை என்று குற்றம் சாற்றினார்.

தமிழ் மொழியின் வளமையை ஆய்வு செய்த அறிஞர் பலர், அதிலிருந்து பிறந்த மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள தமிழ் சொற்களை நீக்கிவிட்டால் அந்த மொழிகளே இருக்காது என்று கூறியதைச் சுட்டிக்காட்டிய தமிழக அரசின் முன்னாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம், தமிழ் மொழியில் உள்ள வடமொழிச் சொற்களை நீக்கினால் அது மேலும் சிறப்புப் பெறும் என்று கூறினார்.

திராவிடர் என்ற சொல் தமிழ் இலக்கியம் எதிலும் இல்லாத ஒரு வார்த்தை என்று கூறிய தமிழறிஞர் அருகோ, அது தாயுமானவர் பாடிய பாடல் ஒன்றில் மட்டும், அதுவும் எதிர்மறைப் பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளதை பாடிக்காட்டினார்.

செம்மொழி என்று கூறுவதால் தமிழிற்கு பெருமை ஏதுமில்லை என்றும், இப்போது தெலுங்கு, கன்னட மொழிகளையும் செம்மொழி என்று மத்திய அரசின் பண்பாட்டுத் துறை அமைச்சர் அம்பிகா சோனி அறிவிக்க உள்ளார் என்றும் அருகோ கூறினார்.

“நாம் மொழியாலும், மரபாலும், தேசியத்தாலும் தமிழரே” என்று அருகோ கூறினார்.

தமிழ் மொழிச் சொற்களே வடமொழியில் உள்ள பெரும்பான்மை சொற்கள் என்று கூறி தனது உரையைத் துவக்கிய தமிழறிஞர் பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா, மாலையை குறிப்பிட, சூரியன் மேற்கில் சாயும் பொருள்பட நாம் கூறும் சாயங்காலம் என்றத் தமிழ்ச் சொல் சாய்ங்கால் என்றும், புவியைக் குறிப்பிட தமிழில் உள்ள பழவி என்ற சொலை பிருத்வி என்றும், பவழம் என்ற சொல் பிரவாகம் என்றும், படி என்ற சொல் பிரதி என்றும், தமிழ் மொழிச் சொற்கள் அவர்கள் வாயில் நுழையாத காரணத்தால் ஒலி மாறி வடமொழியாக புழங்கிவருவதைச் சுட்டிக்காட்டினார்.

வடமொழி என்று கூறப்படும் சமஸ்கிருதம் எந்த ஒரு காலத்திலும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பேசப்பட்ட ஒரு மொழியல்ல என்றும், தமிழ் உட்பட வழக்கில் இருந்த பேச்சு மொழிகளில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மொழியே அது என்றும் கூறிய பேரா.தங்கப்பா, திராவிடம் என்பது பொய் என்றார்.

அப்படி ஒரு பகுதி வரலாற்றில் இல்லை என்று கூறிய பேரா. தங்கப்பா, தமிழை ஆய்வு செய்த மொழியியல் ஆய்வாளரான கால்டுவெல் தமிழையும், அதிலிருந்து பிறந்த மற்ற தென்னாட்டு மொழிகளையும் திராவிடக் குடும்பம் என்று கூறியதையும் சுட்டிக்காட்டினார்.

எனவே, மொழியால், இனத்தால், நாட்டால், பண்பாட்டால் நாம் தமிழர் என்பதே உண்மை, அது மட்டுமே நமது அடையாளம் என்று கூறினார்.

ஈழத்தில் தமிழினப் படுகொலைக்குப் பின்னர், தமிழர்களிடையே உருவாகிவரும் தமிழ்த் தேசிய உணர்வைக் கண்டு அச்சமுற்றதாலும், எங்கே அந்த வரைமுறைக்குள் தன்னால் வர முடியாதோ என்கிற அச்சத்தாலுமே திராவிடர், திராவிடம் என்றெல்லாம் கருணாநிதி பேசுவதாக தமிழக அரசின் முன்னாள் அரசவைக் கவிஞர் புலவர் புலமைப்பித்தன் கூறினார்.

“ஒரு மருந்து காலாவதியாகும் போது அது விஷமாகிறது, அதுபோலவே, திராவிடம் என்பது இப்போது பொருளற்றதாகிவிட்டது” என்று கூறிய புலமைப் பித்தன், தந்தை பெரியார் திராவிடர் என்ற சொல்லால் தமிழை மீட்டார். பெரியார் தோன்றியிருக்காவிட்டால் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்திருக்காது என்றார்.

1956ஆம் ஆண்டுவரை தமிழுக்கு திராவிடம் அரணாக இருந்தது, இன்றைக்கு அது தேவையற்றதாகிவிட்டது என்று கூறிய புலவர் புலமைப்பித்தன், தமிழர் என்ற அடையாளத்தை கண்ட பிறகு என்ன செய்யப்போகிறோம் என்பது முக்கியம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய இதழாளர் கா.அய்யநாதன், ஆங்கில வரலாற்றாளர்கள் எழுதியுள்ளது போல், ஆரியப் படையெடுப்பால்தான் சிந்துவெளி நாகரீகம் அழிந்தது என்பதற்கும், வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள தஸ்யூக்கள் என்பது தமிழர்களையே குறிக்கிறது என்று கூறுவதற்கும் எந்த ஆதாரமும் இதுவரை அளிக்கப்படவில்லை என்று கூறினார்.

தமிழரின் முன்னேற்றத்திற்கு எதிராக இருந்த ஒரு சமூதாயத்தினை எதிர்த்து தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த தந்தை பெரியார், திராவிடர் என்று அடையாளத்தை பயன்படுத்தினார் என்று கூறிய அய்யநாதன், அது அரசியல் அடையாளமாக்கப்பட்டப் பிறகு, தமிழரின் மு்ன்னேற்றத்தைத் தடுக்கும் மற்ற மொழிச் சக்திகளும் தமிழர் அரசியலில் ஊடுறுவ வழி வகுத்துவிட்டது என்றும், இந்த நிலை மாற, தமிழர் என்ற ஒரே அடையாளத்தை தங்களது மொழியை, இனத்தை, பண்பாட்டை, அரசியலை காப்பாற்றிக் கொள்ள தமிழர்கள் கொள்ள வேண்டும் கூறினார்.

இக்கருத்தரங்கை துவக்கி வைத்தும், இறுதியிலும் உரையாற்றிய புதிய தமிழக்ம கட்சித் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி, நாம் திராவிடரா அல்லது தமிழரா என்ற விவாதத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதற்காகவே இந்தக் கருத்தரங்கம் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

“தமிழர் என்கிற நமது அடையாளத்தை முற்றிலும் அழிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது, அதனை தமிழக முதல்வரே செய்து வருகிறார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று வரலாற்றில் செழித்திருந்த தமிழினம், அன்னிய இன ஊடுவல்களால் சாதிய நோய்வாய்ப்பட்டுள்ளது. இதனை திராவிட கோட்பாடுகள் மேலும் வலிமைபடுத்துவதாகவே உள்ளது. திராவிடம் என்பது தமிழரின் வரலாற்றில் இடையில் திணிக்கப்பட்டது, அது இடையிலேயே போய்விட வேண்டும்.

தமிழன் என்கிற அடையாளம் மட்டுமே தமிழினத்தைத் சூழ்ந்துள்ள பிரச்சனைகளக்கு தீர்வு காண உதவும். உலகமெல்லாம் பிரிந்து போவதற்குச் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன, நாம் மட்டுமே இணைந்து வாழ்வதற்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். சாதியால் நாம் ஒருவரை ஒருவர் தாழ்த்திக்கொண்டிருக்கின்றோம். தமிழன் என்கிற உணர்வால் அதனை நாம் வென்றிட முடியும். கண்டதேவி கோயில் தேர் வடம் பிடித்தது, சாதியை ஒழித்து எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்பதற்கே.

ஈழத்தில் நம் இனத்தை அழித்த போரை நிறுத்த நாம் எப்படியெல்லாமோ போராடினோம், ஆனால் போர் நிற்கவில்லை. நமது போராட்டங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. 6 கோடி பேர் தமிழ்நாட்டில் இருந்தும் நம்மால் ஈழத்தில் நம் இனத்தைக் காக்க முடியாமல் போனதற்கு நாம் தமிழர் என்ற ஒரே அடையாளத்துடன் ஒற்றுமையாக போராடததே காரணம் ஆகும்.

ஒரு பக்கம் திராவிடம் என்ற அடையாளம், மறுபக்கம் சாதியம் என்கிற நம்மை பிரிக்கும் சமூக அடையாளம். ஈழ விடுதலைக்கு எதிராக நடந்த துரோகத்திற்கு திராவிடமும் ஒரு காரணம். நாம் எப்படி திராவிடர் என்று அடையாளப்படுத்தப்படுகிறோம்?

இந்த உலகில் உள்ள மனித இனங்கள் மூன்றாக வகைபடுத்தப்பட்டுள்ளன. ஒன்று காக்கசாய்ட் எனும் வெள்ளையினம், இரண்டாவதாக மங்கோலாயிட் எனும் மஞ்சள் இனம், மூன்றாவதாக நீக்ராய்ட் என்கிற கருப்பினம். நம்மை கருப்பினத்திற்கு கீழ் ஆஸ்ட்ராய்ட் என்று துணை இனமாக பிரித்துக் காட்டுகின்றனர். இதையே அடிப்படையாகக் கொண்டு நம்மை திராவிடர் என்றும், நாம் தொன்று தொட்டு வாழ்ந்த இடம் திராவிடம் என்றும் கூறுகின்றனர். ஆனால் திராவிட இனம் என்ற ஒன்று இருந்ததாக சான்றுகள் ஏதுமில்லை.

சிந்து வெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்கின்றனர், அது அழிந்தததற்கு ஆரியப் படையெடுப்பு காரணமென்கி்ன்றனர். ஆனால் அவர்கள் கூறும் காரணங்களை ஆராய்ந்து பார்க்கையில் இவை எதற்கும் சான்றுகள் இல்லையென்பது தெரிகிறது. இங்கு வந்துள்ளவர்கள் ஆரியர்களும் இல்லை, அவ்வாறு கூறுவது ஒருவித மாயை. அதுபோலவே நம்மை திராவிடர் என்று கூறுவதும் மாயையே. நம்மை திராவிடர் என்று அடையாளப்படுத்திவரும் தமிழக முதல்வர் விவாதத்திற்கு அழைக்கட்டும் நான் தயாராகவே இருக்கிறேன்.

எனவே திராவிடர் என்ற பொய் எப்படி நமது அடையாளமாக முடியும்? நம்மை திராவிடர் என்று அடையாளப்படுத்துவது, நமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அல்ல, தமிழினத்தை, அதன் அடையாளத்தை சிதைப்பதற்கே பயன்படுத்துகின்றனர். நாம் நம்மை தமிழர் என்று அடையாளப்படுத்திக்கொண்டால் தான் தமிழினத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். ஈழத்தில் தமிழினத்தை அழிக்க நடந்த போர், இப்போது தமிழினத்தின் அடையாளத்தை அழிப்பதில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், நமது அடையாளம் தமிழர் என்பதை உணர்ந்து நாம் ஒன்றிணைய வேண்டும். திராவிடம் பிரிக்கிறது. தமிழர் என்பது இணைக்கிறது” என்று மருத்துவர் கிருஷ்ணசாமி பேசினார்.

இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

“எங்கள் குருதியோடு இரண்டரக் கலந்துள்ள தமிழ் மொழியின் வழி - எங்கள் தாய் மொழியின் வழி - ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர் என்றே எங்களை அடையாளம் காட்டுகிறது வரலாறு. இந்த நீ்ண்ட நெடிய பெருமிதத்திற்குரிய வரலாற்றைத் திரித்து, தங்களது சுய இலாபங்களுக்காக ‘திராவிடர்’ என்று எங்களை அடையாளப்படுத்த நினைப்பவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், இந்தக் கருத்தரங்கம் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறது. நாங்கள் பிறப்பால் தமிழர், இறப்பாலும் தமிழர். எங்களது அடையாளம். அது மட்டுமே எங்கள் அடையாளம் என்று தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்கும் இந்தக் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. தமிழர் என்கிற எங்கள் அடையாளம் காக்க, தமிழராய் எழுவோம் என்று இக்கருத்தரங்கம் உறுதியேற்கிறது”.

தமிழரா? திராவிடரா? எது நமது அடையாளம் என்பதை ஐயத்திற்கிடமின்றி உறுதிபடுத்த தமிழ்நாடு முழுவதும் இப்படிப்பட்ட கருத்தரங்கத்தை புதிய தமிழகம் கட்சி நடத்தும் என்றும் மருத்துவர் கிருஷ்ணசாமி கூறினார்.

முற்றும்.

நன்றி:வெப்துனியா.காம்

Thursday, June 10, 2010

தமிழர்களுக்கு முதல் எதிரி சிங்களவன் அல்ல: டில்லியில் உள்ளவர்கள்தான்: இரா. செழியன்

தமிழர்களுக்கு சிங்களவர்கள் எதிரிகள் அல்லர். டில்லியில் இருப்பவர்கள்தான் தமிழர்களின் முதல் எதிரிகள் என்று தமிழகத்தின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா. செழியன் தெரிவித்தார்.

பத்திரிகையாளர் பாவை சந்திரன் தினமணி நாளிதழில் 178 நாள்கள் தொடர்ந்து எழுதிய ‘ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சோவியத் கலாசார மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்குத் தலைமை ஏற்று இரா.செழியன் பேசியதாவது:
இத்தொடர் பற்றி இந்த நூலின் முன்னுரையில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், 6 மாதங்களுக்கு முன்பே இத்தொடர் வந்திருந்தால், ஒரு வேளை மிகப் பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமோ என்னவோ என்கிற வருத்தம் என் கடைசி காலம் வரை தொடரும் என்று எழுதியிருந்தார்.

இந்த வருத்தம் தேவையற்றது. 6 மாதம் அல்ல. 6 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருந்தாலும் மாற்றம் ஏற்பட்டிருக்காது. ஆள்பவர்களின் மனம் மாறியிருக்காது. தமிழர்களைக் காப்பாற்ற தமிழர்களால் மட்டுமே முடியும். மற்றவர்கள் யாரும் அதற்காக முன்வர மாட்டார்கள்.

1983-ல் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற நூலகம் எரிக்கப்பட்டபோது அது குறித்து நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைத்தது. நான் பேசியதை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

1960-ல் நேரு பிரதமராக இருந்தபோது தென் ஆப்பிரிக்காவில் நடந்த இனப்படுகொலை குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டதை சுட்டிக்காட்டி அதுபோல, இலங்கைத் தமிழர்களுக்காகவும் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றேன்.

இனப்படுகொலைக்கு எதிராக நேரு குரல் கொடுத்தார். அவருக்கு பிறகு எல்லாம் மாறிவிட்டது.

டில்லியில் ராஜபட்ச ராஜவலம் வந்துகொண்டிருக்கிறார். நமது எதிரி ராஜபட்ச அல்ல. தில்லியில் இருப்பவர்கள்தான் தமிழர்களின் முதல் எதிரிகள். சீனா, பாகிஸ்தானோடு சேர்ந்துகொண்டு இந்தியாவும் இலங்கைக்கு உதவுகிறது. கட்டடங்கள், அரண்மனைகள் அழிந்தால்கூட பரவாயில்லை. ஒரு இனம், மொழி அழிந்தால் நூற்றாண்டுகள் ஆனாலும் அதனை மீட்க முடியாது. இலங்கையில் ஒரு இனம் அழிக்கப்பட்டு வருகிறது.

இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பில் தீர்மானம் வந்தபோது இலங்கைக்கு ஆதரவாக சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. இது குறித்து ஆதாரங்களுடன் 200-க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் கடிதம் அனுப்பினேன். ஆனாலும் யாரும் அதுகுறித்து பேசவில்லை.

இலங்கையில் இனப்படுகொலை நடப்பது குறித்து தில்லியில் இருப்பவர்கள் மெத்தனமாக இருப்பது ஏன் என்று ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தனது வேதனையை பதிவு செய்துள்ளார். அவருக்கு இருந்த உணர்வு தமிழகத்தில் யாருக்கும் இல்லை.

இப்போது இருப்பது நாடாளுமன்றம் அல்ல. சட்டம் இயற்ற வேண்டிய இடத்தில் சத்தம் போடுகிறார்கள். மக்கள் பிரச்னைகளோ, தேசத்தை எதிர்நோக்கும் பிரச்னைகளோ விவாதிக்கப்படுவதில்லை. ஆனால், ஆட்சி நிச்சயமாக மாறும். எப்போது மாறும் என்று சொல்ல முடியாது. தேர்தல் வரும்போது நாட்டைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.

இலங்கைப் பிரச்சினைக்கு மாநில அரசால் தீர்வு காண முடியாது. டில்லிதான் முயற்சி எடுக்க வேண்டும். இப்போதுள்ள ஆட்சியாளர்களுக்கு நாட்டைப் பற்றிய கவலை இல்லை. அவர்கள் இந்தியாவை விற்றாலும் ஆச்சரியம் இல்லை. அதனைப் பங்குபோட பலர் தயாராக உள்ளனர். யாரை எதிர்ப்பது யாரை எதிர்த்து போராடுவது என்றே புரியவில்லை – என்றார் இரா. செழியன்.

எழுத்தாளர் பொன்னீலன்
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, ஈழத் தமிழர்களுக்கு இங்கே பயிற்சி கொடுத்தார். அவர் உயிரோடு இருந்திருந்தால், வங்கதேசத்தை உருவாக்கியதைப் போல, இலங்கையிலும் தனி நாட்டை உருவாக்கியிருப்பார் என்று நான் நம்புகிறேன்.

வித்து வீரியமாக இருந்தாலும், அது வளர்வதற்கு நல்ல மண் தேவை. அதுபோல பாவை சந்திரன் எழுதிய இந்த வரலாற்றுத் தொடர் நன்றாக வருவதற்கு தினமணி மண்ணாக இருந்து உதவியிருக்கிறது.

பாவை சந்திரனின் ஈழப்போராட்ட வரலாறு இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்க வேண்டும். அப்போதுதான், இலங்கையில் நடக்கும் கொடுமைகள் உலகுக்கு தெரியவரும். இந்தியாவில் உள்ள மற்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கும் தெரியவரும்.

நேரு ஒருமுறை இத்தாலிக்கு சென்றிருந்தபோது, பாசிசத் தலைவரான முசோலினியைச் சந்திக்க மறுத்துவிட்டார். முசோலினியின் கறைபடிந்த கரங்களை கைகுலுக்க மாட்டேன் என்று அப்போது நேரு தெரிவித்தார்.

ஆனால், கறைபடிந்த கரங்கள் உடைய ராஜபட்சவுக்கு டில்லியில் இன்று ராஜமரியாதை அளிக்கப்படுகிறது. இதுவெட்கக் கேடானது என்றார் பொன்னீலன்.

கலைமாமணி விக்கிரமன்
எழுத்துகள் மூலம்தான் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே எழுத்துக்கும், பேச்சுக்கும் ஒரு மரியாதை உருவாகும். அந்தப் பணியை தினமணி ஆசிரியர் செய்துவருகிறார்.

1951-ல் இங்குள்ள தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் தமிழ் விழா நடைபெற்றது. அதில் இங்குள்ள தமிழர்கள் பங்குபெற்றனர். 51-ல் சிறப்பாக இருந்த தமிழினம் இன்று அழிக்கப்பட்டுவிட்டது. இன்று தமிழர்களின் நிலை பற்றி கவலைப்பட யாரும் இல்லை.

1982-ல் யாழ்ப்பாணம் செல்ல முயன்றபோது, இங்குள்ள போலீஸôர் அங்கு புரட்சி வெடிக்க உள்ளதாகக் கூறி போக வேண்டாம் என்றனர்.

1983-ல்தான் இனக் கலவரமும், அதைத் தொடர்ந்து புரட்சியும் வெடித்தது. அதை இங்குள்ள உளவுத் துறை முன்கூட்டியே அறிந்துகொண்டிருந்தது. அந்த அளவு சக்திவாய்ந்த அரசாங்கம், தமிழர்களை காப்பாற்றுவதற்கு அன்றும் சரி, இன்றும் சரி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அவர்களின் எச்சரிக்கையையும் மீறி நான் யாழ்ப்பாணம் சென்றேன். தமிழறிஞர்களைச் சந்தித்தேன். அங்கு எரிக்கப்பட்ட புகழ்பெற்ற நூலகத்தையும் பார்த்தேன். சிங்களவர்களின் இன அழிப்புக்கு எரிக்கப்பட்ட நூலகமே சாட்சி.

பாரதியார் இன்று இருந்திருந்தால் பிஜித் தீவு தமிழர்களுக்கு துடித்தது போல், இலங்கைத் தமிழர்களுக்காகவும் துடித்திருப்பார். நேதாஜி போன்ற மாவீரன்தான் பிரபாகரன்.

வரலாறு எப்போதுமே முடிவதில்லை. இந்த நூலிலும் அந்த வரலாறு முடிக்கப்படவில்லை. தனிநாடு கிடைத்தால்தான் ஈழத் தமிழர்களின் வரலாறு முடிவடையும்.

நன்றி: தமிழ்வின்.காம்

Tuesday, June 8, 2010

புதைக்கப்பட்ட நீதி – சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி

அணுஉலைகள் விபத்து இழப்பீடு தொடர்பான மசோதாவுக்கு பரவலாக எழுந்த கடும் எதிர்ப்புகள் மிகமிக நியாயமானவை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது போபால் நீதிமன்றம் யூனியன் கார்பைடு ஆலையின் நச்சுவாயுக் கசிவினால் பல ஆயிரம் பேர் இறந்த வழக்கில் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு.

இந்த வழக்கில் நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்ட,​​ அன்றைய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் செயல் தலைவர் கேசவ் மகிந்திரா உள்ளிட்ட 8 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ள நீதிமன்றம்,​​ அவர்கள் பிணையில் செல்லவும் மேல்முறையீடு செய்யவும் அனுமதித்துள்ளது,​​ அதே நாளில் சிலமணி நேரங்களில் அவர்கள் ​ வீடு திரும்பினர்!

ஆவணங்களின் படி 3000-க்கும் அதிகமானோரும்,​​ ஆவணத்துக்குள் இடம்பெறாமலும் தொடர் விளைவாகவும் 25,000 பேரும் இறந்த இந்தச் சம்பவத்தில் நீதிகேட்டு சலித்துப் போய் காத்திருக்கும் மக்களுக்கு,​​ இந்தத் தீர்ப்பு மேலும் வலியைக் கூட்டுவதாக இருக்கிறது என்பதே உண்மை.​ ​

இந்தத் தீர்ப்பில் யாருக்கும் திருப்தி இல்லை.​ இந்தத் தீர்ப்பு பற்றி கருத்துத் தெரிவித்துள்ள மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி,​​ "தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி ​ என்று சொல்வதுதான் வழக்கம்.​ இது புதைக்கப்பட்ட நீதி' என்று கூறியிருக்கிறார்.​ இந்தத் தீர்ப்பு சரியானதல்ல என்று இத்தனை காலமாக நச்சுவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிவரும் தன்னார்வ அமைப்புகளும் கூறியுள்ளன.​ மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறியுள்ளன.​ ​

இதற்காக போபால் நீதிமன்ற நீதிபதி மோகன் பி.​ திவாரியை குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை.​ ஏனென்றால்,​​ அவர்​ முன் வைக்கப்படும் ஆதாரங்கள் அத்தகைய பலமில்லாத,​​ உறுதியில்லாத,​​ ஆதாரங்கள் இல்லாத அல்லது துடைத்தழிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமே.​ மத்திய புலனாய்வுத் துறை பதிவு செய்த,​​ குற்றப்பத்திரிகையில் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதி யாராக இருந்தாலும் தீர்ப்பு இப்படியாகத்தான் இருந்திருக்கும்.​ ​

குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி பி.ஆர். லால் இந்தத் தீர்ப்பு பற்றி கருத்துத் ​ தெரிவிக்கையில்,​​ தங்களை முழுமையாகச் செயல்பட அப்போதைய அரசு அனுமதிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.​ ஓய்வுபெற்ற அதிகாரி என்பதால்தான் இதைக் கூட இப்போது வாய் திறந்து சொல்கிறார்.​ அவரது துறையில் அவர் நியாயமானவராக இருந்திருந்தால்,​​ அரசின் நிர்பந்தங்களுக்குப் பணிந்துபோக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்குமா?

இந்த வழக்கில் மனப்புண்ணைக் கிளறிப் பார்க்கிற விஷயம் இந்தத் தீர்ப்பு அல்ல.​ இந்தத் தீர்ப்புக்குள் "அடங்க மறுக்கும்' அல்லது இந்திய அரசு "அடைக்க மறுக்கும்' அன்றைய கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை என்பதும்,​​ பிணையில் வெளிவந்து இந்தியாவை விட்டுச் சென்ற ஆண்டர்சன் நியூயார்க்கில் வாழ்கிறார் என்று எல்லோரும் சொன்னபோதிலும் அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பதும்தான்.

இந்தத் தீர்ப்பு வந்த சில மணி நேரங்களில் யூனியன் கார்பைடு நிறுவனம் மிகத் தைரியமாக ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.​ எங்களைக் குற்றவாளியாக விசாரிக்க இந்திய அரசுக்கு அதிகார வரம்பு இல்லை.​ விபத்து நடந்த பின்னர்,​​ என்றைக்கு நாங்கள் இழப்பீட்டை சமரசத் திட்டத்துக்குப் பிறகு அளித்துவிட்டோமோ,​​ அப்போது எங்கள் பங்கு முடிந்துவிட்டது.​ அந்த நிறுவனத்தைச் சரியாக நிர்வகிக்காத அதிகாரிகள் மீதுதான் இப்போதைய வழக்கு என்று கூறியுள்ளது.​ ​

இந்த ஆலையில்,​​ டிசம்பர் 3,​ 1984-ம் ஆண்டு விபத்துக்கு முன்பாகவே நடந்த சிறுவிபத்துகள் குறித்து அமெரிக்க நிபுணர்கள் குழு நேரில் ஆய்வு நடத்தி,​​ குறைகளைச் சுட்டிக்காட்டிய பிறகும் அதைச் சரிசெய்யவில்லை என்பதுதான் சிபிஐ தரப்பிலான ​ வழக்குரைஞரின் வாதம்.​ ​

ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் பணம் செலவழிக்க மறுத்து,​​ குறைகளைக் களைய தாமதம் செய்தால் அது யாருடைய குற்றம்?​ லாபம் மட்டுமே பார்க்க விரும்பும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் குற்றமா அல்லது அங்கு சம்பளத்துக்குப் பணியாற்றும் ஊழியர்களின் குற்றமா?

​சாதாரணமாக ஒரு கட்டடம் இடிந்து விழுந்து சிலர் இறந்துபோனாலும்கூட,​​ கட்டடம் கட்டும் கான்ட்ராக்டரை கைது செய்வார்களா அல்லது மேஸ்திரி,​​ சித்தாள்களைக் ​ கைது செய்வார்களா?​ என்பது நமக்குத் தெரிந்த நியாயங்கள்;​ சட்டம்தான் இருட்டறையாயிற்றே.​ அங்கே இந்த நியாயங்கள் எப்படி எடுபடும்?​ அப்படியே எடுபட்டாலும்,​​ எடுபடாமல் போவதற்கு உப்புச் சப்பில்லாத,​​ நீதியைத் திசைதிருப்பும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதே...

செத்துப் போனவர்களைவிட இப்போது வாழ்பவர்கள் அங்கே கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று 1999-ம் ஆண்டு போபாலில் ஆய்வு நடத்திய கிரீன்பீஸ் அமைப்பு கூறியது.​ இன்னமும் அந்த மண்ணில் சயனைடு நஞ்சு கலந்து கிடப்பதாகவும்,​​ நீர்நிலைகளில் அந்த நச்சு எச்சம் இருப்பதாகவும் கூறியது.​ இருந்தும்கூட,​​ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.​ இந்தியாவை விட்டுத் தப்பிப்போன வாரன் ஆண்டர்சன்னை பிடித்துவந்து தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை.​ ​ இந்நிலையில் என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்?​ ஆண்டர்சன் விவகாரத்தில் எப்படி நடந்துகொள்கிறதோ அதைப்போலவேதான் ஹெட்லி விஷயத்திலும்,​​ கசாப் விஷயத்திலும்கூட இந்திய அரசு நடந்துகொள்ளப் போகிறது.​ ​

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.​ ஆனால் இப்போதெல்லாம் அதற்கு ரொம்ப நாளாகிறது.​ போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு -​ வெந்த புண்ணில் வேல்!

நன்றி: தினமணி 08.06.2010

Sunday, June 6, 2010

உலகின் மிகப்பெரிய கொடுங்கோலன் ராஜபக்சவுக்கு உயரிய மரியாதையா? நாம் தமிழர்

ஈழத்தில் தமிழினத்தை கொன்றொழித்த இலங்கை அதிபர் ராஜபக்ச நாளை இந்தியா வருகிறார். அவருக்கு இந்திய அரசு இரத்தின கம்பள வரவேற்பு அளிக்க இருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இது குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஈழத்தில் தமிழினத்தை கொன்றொழித்த இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை இந்தியா வருகிறார். அவருக்கு இந்திய அரசு இரத்தின கம்பள வரவேற்பு அளிக்க இருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய கொடுங்கோலர் ஒருவர் உயரிய மரியாதையுடன் இந்தியா வருவதை நினைக்கும்போது நாதியற்ற இனமா தமிழினம் என்னும் குரல் உலகம் முழுதும் எழுகின்றது.

நாதியற்ற இனமல்ல தமிழினம் என்று உலகுக்கு எடுத்து சொல்லவும், ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வலியுறுத்தியும், தரணியெங்கும் வாழும் தமிழர்கள் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி ராஜபக்சவின் இனப்படுகொலையை உலகுக்கு அம்பலப்படுத்தி ராஜபக்சவை தண்டித்தே தீர சூளுரை ஏற்க வேண்டும்.

ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்ச மீது ஐ.நா. மன்றம் எடுத்து வரும் போர்க்குற்ற விசாரணை முயற்சிகளுக்கு இடையூறு செய்து வருவதை கண்டிக்கும் வகையில், இந்தியாவுக்கு வருகைதரும் ராஜபக்சவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நாம் தமிழர் இயக்கத்தினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: தமிழ்வின்.காம்