Thursday, February 25, 2010

24 மணி நேர மதுக்கடைக்கு பூட்டுப் போட்ட பெண்கள்

கடலூர், பிப். 25: விதிகளுக்கு மாறாக 24 மணி நேரமும் இயங்கிய டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடைக்கு பூட்டுப் போட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.

கடலூரில் 24 மணி நேரமும் இயங்கும் பெட்ரோல் நிலையம் கிடையாது. 24 மணி நேரமும் இயங்கும் ரத்த வங்கி கிடையாது. தனியார் மருத்துவமனைகள் ஒன்றிரண்டு, மருந்தகங்கள் ஒன்றிரண்டு மட்டுமே 24 மணி நேரமும் இயங்குகின்றன. அவற்றிலும் இரவு 1 மணிக்கு மேல் எதிர்பார்க்கும் அளவுக்குச் சேவை இல்லை. இவையெல்லாம் அத்தியாவசியத் தேவைகளாக இருந்தும் அவைகள் பெருமளவுக்கு 24 மணி நேர சேவையாக மக்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லாத நகரமாகக் கடலூர் உள்ளது.

ஆனால் டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க வேண்டும் என்பது விதி. அவர்களுக்கு வார விடுமுறையும் இல்லை. வார விடுமுறை வேண்டும், 8 மணி நேர வேலையை அமல்படுத்த வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் ஒருபக்கம் போராடி வருகின்றன.

மறுபக்கம் பல டாஸ்மாக் கடைகள் விதிகளுக்கு மாறாக 24 மணி நேரமும் இயங்குவதாக, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுகின்றன. அத்தகைய 24 மணி நேர டாஸ்மாக் மதுக்கடை, கடலூர் முதுநகர் மீன் அங்காடி அருகே இயங்கி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். நள்ளிரவு நேரத்திலும் கடைக்குள் தூங்கிக் கொண்டு இருப்பவர்களை எழுப்பி, மதுபாட்டில்களை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள்.

இதனால் அப்பகுதியில் எந்த நேரமும் குடிகாரர்கள் நடமாட்டம், ஆபாசமான பேச்சுக்கள், மீன் விற்பனை உள்ளிட்ட வியாபாரத்தைப் பெரிதும் பாதிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். பொதுமக்கள் பலரும் அச்சம் அடைய நேரிடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதனால் எரிச்சலடைந்த அப்பகுதிப் பெண்கள் சிலர் வியாழக்கிழமை அதிகாலை, அந்த டாஸ்மாக் மதுக்கடையை வெளிப்புறமாகப் பூட்டி விட்டனர். இதனால் பொதுமக்கள் பலரும் அங்கு திரண்டனர். காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது. முதுநகர் போலீஸ் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் வந்து, டாஸ்மாக் ஊழியர்களை விடுவித்தார். இனிமேல் இவ்வாறு நடக்கக் கூடாது என்றும் எச்சரித்தார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

நன்றி: தினமணி 26.02.2010

No comments: