Wednesday, March 31, 2010

பென்னாகரம்: பா.ம.க.வின் வெற்றி?

சென்னை, மார்ச் 30: பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்றாலும், பா.ம.க.வுக்கும் இந்தத் தேர்தலில் கிடைத்த வாக்குகள் பெரிய வெற்றியாகவே அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்திலும் வெற்றி பெற முடியாமல் போனதும், இனி தமிழகத்தில் கூட்டணிகள் உருவாகும் போது பா.ம.க.வுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படாது என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால் அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மட்டுமே, "ஏற்கெனவே படுதோல்வியை சந்தித்த கட்சிகள் கூட சில ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியையே பிடிக்க முடிந்துள்ளது என்பதை சுட்டிக் காட்டி பா.ம.க. அழிந்துவிடவில்லை' என்று கூறிவந்தார்.

இருந்தாலும் அரசியல் வட்டாரத்தில் அவரது பேச்சுக்கு யாரும் அதிக முக்கியத்துவம் தரவில்லை. எனவே தங்கள் செல்வாக்கை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் பா.ம.க.வுக்கு ஏற்பட்டது. பென்னாகரம் இடைத்தேர்தல் இதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது.

1996-ல் அக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி பா.ம.க. சார்பில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால் தங்கள் செல்வாக்கை நிரூபிக்க அவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.மற்ற இடைத்தேர்தல்களைப் புறக்கணித்து வந்த பா.ம.க. இந்த இடைத் தேர்தலில் தீவிரமாக களமிறங்கியது.

வெற்றி பெறுவோம் என்று வெளியில் கூறினாலும், தங்கள் செல்வாக்கை நிரூபிக்கும் அளவுக்கு வாக்குகள் வாங்க வேண்டும் என்பதே இக் கட்சியின் குறிக்கோளாக இருந்தது. இப்போது சட்டப்பேரவைக்குச் செல்லும் வாய்ப்பை பாமக வேட்பாளர் பெற முடியாமல் போனாலும், கட்சியின் கொடியை தூக்கிப் பிடிக்கும் அளவுக்கு வாக்குகளைப் பெற்றுவிட்டார் என்று கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பா.ம.க. 41,285 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதுவும் எந்தக் கட்சியுடனும் கூட்டு இல்லாமல் தனித்தே இவ்வளவு வாக்குகளைப் பெற்றுள்ளது.2009-ல் மக்களவைத் தேர்தல் நடந்தபோது பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் செந்தில் 32,753 வாக்குகள் பெற்றார். அப்போது அதிமுகவுடன் கூட்டணி இருந்தது. இப்போது தனித்தே 41 ஆயிரம் வாக்குகளை பா.ம.க. பெற்றுள்ளது என்பது திமுக மற்றும் அதிமுகவில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தொகுதியில் 15 ஆயிரம் வாக்குகள் இருந்தாலே, தாங்கள் இல்லாமல் எந்தக் கூட்டணியும் வெற்றி பெற முடியாது என்று ஒரு கட்சியால் கூற முடியும். ÷இப்போது பா.ம.க. 41 ஆயிரம் வாக்குகள் பெற்றிருப்பதால் 2011 தேர்தலுக்கான கூட்டணியை உருவாக்குவதில் மீண்டும் பா.ம.க. முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக ஆரம்பத்தில் இருந்தே தீவிரமாக பணியாற்றாமல், கடைசியில் ஜெயலலிதா வருகை நேரத்தில் மட்டும் தீவிரம் காட்டியதே அக் கட்சி வேட்பாளர் டெபாசிட் தொகையை இழந்திருப்பதற்கு காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

முந்தைய இடைத்தேர்தல்களைப் புறக்கணித்ததால் தொண்டர்களிடையே ஏற்பட்ட ஆர்வக் குறைவு, நிர்வாகிகள் மீதான அதிருப்தி, ஆரம்பத்தில் இருந்தே தீவிர பிரசாரம் செய்தாதது ஆகியவையே தங்களின் மோசமான தோல்விக்குக் காரணம் என்கின்றனர் அதிமுகவினர்.

தேமுதிகவைப் பொருத்தவரை 2006 தேர்தலைவிட இப்போது சுமார் 600 வாக்குகள்அதிகம் கிடைத்துள்ளது. இடைத் தேர்தலில் பெரிய கட்சிகளின் கடுமையான போட்டிக்கு இடையே இவ்வளவு வாக்குகளைப் பெற முடிந்தது அந்தக் கட்சியினருக்கு ஆறுதலாகவே இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ÷2009 மக்களவைத் தேர்தலில் இந்த சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிகவுக்கு கிடைத்த வாக்குகள் 19239 என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். அதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால் தேமுதிகவின் வாக்குகளில் சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணியில் இடம் பெறாமல் போனால் கட்சியின் செல்வாக்கு மேலும் குறையத்தான் வாய்ப்பு இருக்கிறது என்று பரபரப்பாக வாக்கு எண்ணும் இடத்தில் கட்சித் தொண்டர்கள் பேசிக் கொண்டனர்.

திமுகதான் தமது முதல் எதிரி என்று கடந்த வாரம் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தேர்தல் பிரசாரத்திலும் திமுகவை அவர் கடுமையாகச் சாடினார்.

பா.ம.க.வினர் அதிமுகவை அதிகம் விமர்சிக்கவில்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அந்தக் கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகியது என்றாலும், மறுபடி கூட்டணி என்று வரும் போது வாக்கு விவரங்கள்தான் பேசப்படும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும் பென்னாகரம் தொகுதியை மட்டும் வைத்து அரசியல் கணிப்பைக் கூற முடியாது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். 1996-ம் ஆண்டிலேயே தனித்து வென்ற தொகுதி பென்னாகரம். இதே செல்வாக்கு மற்ற தொகுதிகளிலும் இருக்குமா என்பதையும் பார்க்க வேண்டும் என்பது அவர்களின் கருத்து.

இதையும் கருத்தில் கொண்டே முக்கிய கட்சிகள் கூட்டணி வியூகங்களை வகுக்கும். வெற்றியா, தோல்வியா என்பதில் வேண்டுமானால் பா.ம.க. தோற்றிருக்கலாம். ஆனால் பெரிய கட்சிகளை சிந்திக்க வைக்கும் அளவுக்கு வாக்குகள் வாங்கியிருப்பதே பா.ம.க.வைப் பொருத்த வரையில் வெற்றிதான் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஆளும் திமுகவை அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலில் எதிர்கொள்ள பாமக, தேமுதிக, மதிமுக மற்றும் இடதுசாரிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணி ஒன்றை அதிமுக உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். பென்னாகரம் இதற்குப் பிள்ளையார் சுழி போட்டிருப்பதாக முக்கிய அதிமுக பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

நன்றி தினமணி 31.03.2010

No comments: