Friday, April 22, 2011

ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்: ஜெயலலிதா

ஐ.நா. மன்றத்தால் போர்க் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்பதைத்தான் அண்மையில் 4 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட கோரச் சம்பவம் நினைவூட்டுகிறது. இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூர மனப்பான்மைக்கு உண்மையிலேயே ஆதாரம் தேவை என்றால் இலங்கை அதிகாரிகளின் சித்ரவதையால் சிதைந்து அழுகிய நிலையில் கிடந்த மீனவர்களின் சடலங்களே சாட்சி. இந்தியாவைச் சேர்ந்த தமிழர்கள் மீதே இதுபோன்ற கொடூரத் தாக்குதலை இலங்கை அரசு நடத்தியிருக்கும் நிலையில், இலங்கைத் தீவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களின் நிலைமை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

வருத்தம் தெரிவிக்கவில்லை:

இலங்கை அரசின் கொடுஞ் செயலுக்கு எதிராக சர்வதேச அளவில் குரல் எழுப்பப்பட்டதோடு மட்டுமல்லாமல் இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தி போர்க் குற்றத்துக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்திய அரசோ, தமிழக அரசோ இது குறித்து எதிர்ப்பையோ அல்லது வருத்தத்தையோ கூட தெரிவிக்கவில்லை.

மாறாக 2009 அக்டோபரில் தன்னுடைய மகள் கனிமொழி உள்பட திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி. இலங்கையிலிருந்து திரும்பிய நாடாளுமன்றக் குழுவினர் அங்கு எல்லாமே நன்றாக இருக்கிறது என்றும் அங்குள்ள தமிழர்கள் குறைபட்டுக் கொள்ளும் அளவுக்கு புகார் ஒன்றுமில்லை என்றும் தெரிவித்தனர்.

என்னதான் கருணாநிதி நற்சான்றிதழ் கொடுத்தாலும் அங்குள்ள தமிழர்களின் நெஞ்சை உருக்கும் நிலையைக் கண்டு மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு நாடுகளைச் சேர்ந்த அரசுகள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை பொங்கி எழுந்தன. இப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அனுப்பிய குழுவின் அறிக்கை மூலம் இலங்கை அரசின் கொடூரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அந்த அறிக்கையில் இருந்து ஒரு சில பகுதிகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். "ஐ.நா. குழுவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படின் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான ஆபத்து விளைவிக்கக் கூடிய அத்துமீறல்களை இலங்கை அரசாங்கம் நிகழ்த்தியுள்ளது வெட்ட வெளிச்சமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் சில குற்றங்கள் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகும்.

2009-ம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை மனித வர்க்கத்தின் படுகொலை நடந்த இறுதி நாள்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அனாமதேயமாக செத்து மடிந்தனர். இது ஐக்கிய நாடுகள் சபை குழுவின் அறிக்கையில் மிகத் தெளிவாக உள்ளது.

தமிழினப் பாதுகாவலர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதியின் வேஷம் ஐ.நா. அறிக்கையின் மூலம் கலைக்கப்பட்டு இருக்கிறது. தமிழர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட, மனித குல வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான இனப் படுகொலையை தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த கருணாநிதி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ராஜபட்ச, அவருடைய சகாக்களின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் வகையில், சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த உடனடி நடவடிக்கைகளை தனது பங்குக்கு இந்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையெனில் அண்மையில் தமிழக வாக்காளர்கள் முன்பு, இலங்கை குறித்து சோனியா காந்தி தெரிவித்த கருத்துகள் வாய்மையற்றவை என்றாகிவிடும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலையை நடத்தியது இந்திய அரசுதான் என்று கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டும் உண்மை என்று நம்புவதற்கு வழி வகுக்கும்.
நன்றி: தினமணி 23.04.2011

No comments: