Thursday, March 26, 2009

நீதி கிடைக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்? சனநாயகத் தூண்கள் வாய்திறக்குமா?

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ்சை தொடர்ந்து சீனப் பிரதமரை நோக்கி செருப்பு வீசப்பட்டது. இந்த சம்பவம் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அந்த பல்கலைக்கழகத்தின் ஒரு அரங்கில் சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் அவரை நோக்கி செருப்பை வீசி “இது ஒரு மோசடி’ என்று கத்தினார். “இந்த சர்வாதிகாரி இங்கே பொய்கள் சொல்லிக் கொண்டிருப்பதை எப்படி கேட்டுக் கொண்டிருக்க முடியும்” என்று அந்த இளைஞர் தெரிவித்தார்.
...

சுவீடன், ஸ்டாக்ஹோம் நகர பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டு தூதுவர் Benny Dagan மீது இரண்டு மாணவர்கள் தமது காலணிகளை கழற்றி வீசினார்கள். தொடர்ந்து புத்தகங்களும் பறந்து வந்து தூதுவரை தாக்கி நிலை குலைய வைத்தது. இருப்பினும் சில நிமிடங்களில் சுதாகரித்துக் கொண்ட தூதுவர் தொடர்ந்து "ஹமாசிடமிருந்து தேசத்தை பாதுகாப்பது பற்றி" உரையாற்றினார். "கொலைகாரன்", "இன்டிபதா" போன்ற சுலோகங்களை முழங்கிக் கொண்டிருந்த, மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவீடன் ஊடகங்கள் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.
...

இந்திய வரலாற்றிலும் “செருப்பு“-க்கு எப்போதுமே ஒரு முக்கிய இடம் உண்டு. “இராமனின் செருப்பு” இந்த நாட்டை ஆண்டது முதல் அண்மையில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி மீது செருப்பு வீசப்பட்டது வரை வரலாற்றில் செருப்பின் பதிவுகள் ஏராளம்.

“செருப்பால் அடிப்பேன்” என்று சொல்வது, ஒருவரை செருப்பால் அடிப்பது, செருப்புமாலை போடுவது போன்ற நிகழ்வுகள் அனைத்தும் குறிப்பிட்ட நபரின் மீதோ அல்லது குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதுதோ உள்ள எதிர்ப்பு உணர்ச்சியே இதற்கு காரணமாக உள்ளது.

...

அண்மையில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியின் மீது செருப்பு வீசப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மராட்டிய மாநிலத் தலைநகர் மும்பையில் செயல்பட்டு வரும் பாசுகோ இசைக் கல்லூரிக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நன்கொடை வருகிறது. இதை கல்லூரி நிர்வாகம் முறைகேடு செய்வதாக அக்கல்லூரியில் ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவிகள் மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

ஆனால் இந்த வழக்கை மராட்டிய அமர்வு நீதிமன்றமும், மும்பை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.

இதனை எதிர்த்து பவித்ரா முரளி என்ற ஆராய்ச்சி மாணவி உச்ச நீதிமன்றத்தில் 10 முறைக்கும் அதிகமாக மேல் முறையீடு செய்தார். ஆனால் ஏதேதோ காரணம் காட்டி ஒவ்வொரு முறையும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தங்களது வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளாததுடன், தங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர ஆணையிட்ட நீதிபதிகளை சிறையில் அடைக்க வேண்டும் என்று பவித்ரா முரளி உள்ளிட்ட 4 மாணவிகள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இசைக் கல்லூரி மீதும் புதிய வழக்கைத் தொடர்ந்தனர்.

இந்த இரு வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அரிசித் பசாயத், ஏ.கே. கங்கூலி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

இதில், மாணவிகள் பவித்ரா முரளி, லீலா டேவிட், சரிதா பாரிக், என்னட் கோட்டியான், சரிதா பாரிக்கின் தந்தை கிசோர் பாரிக் உள்ளிட்டவர்கள் நீதிமன்றத்தில் நேர் நின்று வாதிட்டனர்.

இவர்கள் முறைகேடுகள் தொடர்பாக 700 பக்க ஆவணங்களைத் தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்த அவர்கள், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தக் கோரினர்.

ஆனால் 700 பக்க ஆவணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிபதி அரிசித் பசாயத் கூறியதை அடுத்து அவருக்கும், மாணவிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதத்தால் கோபமடைந்த நீதிபதி, மாணவிகளை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். நீதிபதியின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த மாணவி பவித்ரா முரளி, கீழ் நீதிமன்றங்களைப் போல உச்ச நீதிமன்றத்திலும் ஊழல் மலிந்துவிட்டது என்று கூறியபடியே தனது காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி அரிசித் பசாயத்தை நோக்கி வீசினார். அப்போது அரிசித் பசாயத் சற்று நகர்ந்ததால் அவர் மீது செருப்பு படவில்லை.

இ‌ந்த சம்பவத்தைக் கண்ட வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

நீதிபதிகள் ஆணைப்படி அங்குப் பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.

நீதிபதி மீது செருப்பு வீசியதற்காகவும், நீதிமன்றத்தை அவமதித்ததற்காகவும் 5 பேருக்கும் 3 மாதச் சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மேலும், நீதிபதிகள் அரிசித் பசாயத்தும், ஏ.கே. கங்கூலியும், நீதிமன்ற அவமதிப்பு மற்றும் இந்த நடவடிக்கை குறித்து பெரிய அமர்வு விசாரித்து தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர்.

வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நீதிபதி அரிசித் பசாயத்திற்கும் மாணவிகளுக்குமிடையே நடந்த விவாதம் இங்கே குறிப்பிடத்தக்கது,

நீதிபதி அரிசித் பசாயத்: 700 பக்க ஆவணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. சுருக்கமாக தாருங்கள்.

மாணவிகள்: எங்களுக்குக் கிடைத்த அனைத்து சான்றுகளையும் உங்கள் முன் தாக்கல் செய்திருக்கிறோம். அவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும்.

பசாயத்: எங்களுக்கு அதிகப் பணிகள் உள்ளன. சான்றுகளைச் சுருக்கமாகத் தாருங்கள்.

மாணவிகள்: இசைப் பள்ளியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக மராட்டிய நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடர்ந்தோம். ஆனால் அங்கு ஊழல் நிலவியதால் எங்கள் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. எனவே உங்களிடம் நீதி கிடைக்கும் என்று இங்கு வந்திருக்கிறோம். நீங்கள் மராட்டிய நீதிமன்றங்களைப் போல நடந்துகொள்ளக்கூடாது.

பசாயத்: நீதிபதிகளுக்கு நீங்கள் கட்டளையிடக்கூடாது

மாணவிகள்: நீதிபதிகளும் மக்களுக்காகத்தான் இருக்கிறார்கள்.

பசாயத்: எங்களைப் பதவியில் அமர்த்தியவர்கள் நீங்கள் அல்ல. எங்களுக்கு நீங்கள் கட்டளையிடாதீர்கள்.

மாணவிகள்: நாங்கள் இந்தியக் குடிமக்கள். நாங்கள்தான் உங்களைப் பதவியில் அமர்த்தும் அதிகாரம் பெற்றவர்கள். எங்களது வரிப்பணத்தில்தான் உங்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.
...
சனநாயகம் தழைத்தோங்குவதாக சொல்லப்படும் விடுதலை பெற்ற இந்தியாவில் மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்பதற்கும் அப்படியே கிடைத்தாலும் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை என்பதற்கும் நம் நாட்டு நீதிமன்றத்தில் நடைபெறும் அனைத்து வழக்குகளுமே சான்று...

“நீதித்துறையில் ஊழல் மலிந்து விட்டது...” “நீதித்துறையில் கருப்பு ஆடுகள் ஊடுருவி உள்ளது...” என நீதிபதிகளே பலமுறை குறிப்பிட்டுள்ளனர். நீதித்துறையில் ஊழல் நடைபெறுவதை அனைவரும் அறிந்திருந்தும் இதை தடுப்பதற்காக நீதிமன்றமோ ஆட்சிமன்றமோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

நீதி நெறியோடு ஆட்சியை நடத்துவதும், அதை உறுதிபடுத்துவதும் சனநாயகத்தூண்களின் தலையாய கடமை.

சனநாயக நாட்டில் உரிமைக்காகவும், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், நீதியை நிலைநாட்ட வேண்டியும் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன. போராட்டம் நடத்துபவர்களுக்கு அதைச் செய்யக்கூடாது, இதைச் செய்யக்கூடாது, மீறினால் இந்த தண்டனை என்று சட்டம் எச்சரிக்கை விடுத்தே அவர்களை போராட அனுமதிக்கிறது. உணர்ச்சி வேகத்தில் தன்னெழுச்சியாக நடைபெறும் மக்கள் போராட்டங்களும் சட்டத்தால் ஒடுக்கப்படுகின்றன.

சனநாயக முறையில் சட்டத்திற்கு உட்பட்டு நீதிக்காக போராடும் ஒருவருக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நீதி கிடைக்க மாற்று வழியையும் சட்டம் திறந்துவிடவேண்டும். அது பற்றி ஆட்சியாளர்களும் நீதிமன்றமும் சிந்திக்க வேண்டும்.
மக்களுக்குத் தேவை நீதி! நீதி! நீதி மட்டுமே...

இல்லையெனில் இதுபோன்ற செருப்படி நிகழ்வுகளால் சனாநாயக நாடுகள் வெட்கி தலைகுணிவது தொடர்கதையாகிவிடும்...

“இராமனின் செருப்பின் பெயரால் ஆளப்பட்டதற்கே வெட்கப்படாத நாம், செருப்பால் அடிவாங்கியதற்காகவா வெட்கப்படப்போகிறோம்...”


துணைநின்றவை:
தமிழ் ஓசை நாளேடு, 21.03.2009
யாகூ.காம்
கூகுல்.காம்

1 comment:

இரா.சுகுமாரன் said...

தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக முத்துக்குமார் தீக்குளித்ததும் அதனை தொடர்ந்து பலர் தீக்குளித்துள்ளார்கள்,

//அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ்சை தொடர்ந்து சீனப் பிரதமரை நோக்கி செருப்பு வீசப்பட்டது//

அதே போல இந்த செருப்படி மன்மோகன், சோனியா, கருணாநிதி, சிவசங்கர்மேனன், செயலலிதா உள்ளிட்ட தமிழின விரோதிகளுக்கு கிடைக்கவேண்டும் என எதிர்பார்ப்போம்.