Friday, December 31, 2010

மனித உரிமைப் போராளி கே.ஜி.கண்ணபிரான் காலமானார்


சுதந்திரப் போராட்டத் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் துவக்கிய மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் (People’s Union for Civil Liberties - PUCL) தலைவராக 15 ஆண்டுகள் இருந்த பிரபல மனித உரிமைப் போராளியும், இந்நாட்டின் தலைசிறந்த வழக்குரைஞராகவும் திகழ்ந்த கே.ஜி.கண்ணபிரான் காலமானார்.

ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் 30.12.2010 அன்று மாலை 5.00 மணிக்கு அவர் காலமானார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த கண்ணபிரான், கடந்த 2 மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார்

81 வயதான கே.ஜி. கண்ணபிரான், மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் தொடக்க காலத்தில் இருந்தே உறுப்பினராக இருந்து தீவிரமாக பணியாற்றிய மாபெரும் ஜனநாயகவாதியாவார். 1995ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை பி.யு.சி.எல். அமைப்பின் தலைவராக இருந்துள்ளார்.

ஹைதராபாத்தில் வழக்கறிஞர் பணியாற்றி வந்த கண்ணபிரான், முஸ்லீம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கி ஆந்திர மாநில அரசு பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அவசியம் குறித்து விரிவாக வாதிட்டார்.

ஆனால் தீர்ப்பு இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வந்த நிலையில் அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் எழுதிய கட்டுரையில் முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு பெறுவதற்கான நியாயத்தை ஆணித்தரமாக வைத்தார்.

தீவிர சிகிச்சைக்கு சென்ற நிலைவரை ஒரு போராளியாகவே வாழ்ந்த பெருமையுடன் மறைந்துள்ளார் கே.ஜி.கண்ணபிரான்.

நன்றி: தமிழ்.வெப்துனியா.காம்

Thursday, December 16, 2010

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட லோகு.அய்யப்பன் விடுதலை!

அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கத்தோடு பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு.அய்யப்பன், வீராம்பட்டினம் தி.மு.க. கவுன்சிலர் பா.சக்திவேல், பாட்டாளி மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் க.தேவமணி ஆகியோரை கடந்த மாதம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதுச்சேரி அரசு கைது செய்தது.

இதனைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு தோழமை அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் புதுச்சேரி அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதையும் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டியும் புதுச்சேரி ஆளுநருக்கும் நடுவண் அரசின் உள்துறைக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது.

இந்த புகார் மனுவை விசாரித்த நடுவன் அரசின் உள்துறை; எந்த முகாந்திரமும் இன்றி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தோழர் லோகு.அய்யப்பன், தோழர்.பா.சக்திவேல் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. அதன்படி நேற்று நள்ளிரவு 10 மணியளவில் (15.12.2010) இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இத்தகவலை அறிந்த நூற்றுக்கணக்கான தமிழின உணர்வாளர்களும், பெரியார் திராவிடர் கழகத்தினரும் புதுவை காலாப்பட்டு சிறைச்சாலை வாசலில் திரண்டிருந்து தோழர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். விரைவில் தோழர்.க.தேவமணி அவர்களும் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, December 9, 2010

தமிழக அரசின் முகத்திரையைக் கிழித்த சீமான் விடுதலை

தமிழக மீனவர்களை சிறிலங்க கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவருவதைக் கண்டித்து பேசியதற்காக நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமானை, தேசப் பாதுகாப்பு (National Security Act - NSA) சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது செல்லாது என்று கூறி, அவரை விடுதலை செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, தேச பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு தவறாகவே பயன்படுத்தியுள்ளது என்பதை நிரூபித்துள்ளது.

தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்யும் உத்தரவை கூடுதல் ஆணையர் பிறப்பிக்க முடியாது என்று கூறி, எவ்வாறு இச்சட்டம் அவசர கதியில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், ஹரி பரந்தாமன் ஆகியோர் கொண்ட அமர்வு, அரசு செய்த தவறை சுட்டிக்காட்டியது மட்டுமின்றி, அரசு வழக்கறிஞரை நோக்கி பல கேள்விகளை கேட்டுள்ளது.

“தமிழக மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டால், இங்கு படிக்கும் சி்ங்கள மாணவர்கள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்” என்று சீமான் கூறியது எதிர்காலத்தை கருத்தில் கொண்டுதான் பேசியதுதானே தவிர, அது வன்முறையை தூண்டும் நோக்கம் கொண்டதல்ல என்று நீதிபதிகள் கூறியுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.

அதுமட்டுமின்றி, சீமான் பேசியதன் காரணமாக வன்முறை ஏதாவது ஏற்பட்டதா என்றும் அரசு வழக்கறிஞரை கேட்டுள்ளனர். அப்படி ஏதும் நடக்காதபோது தேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று எவ்வாறு எடுத்துக்கொள்வது என்றும் கேட்டுள்ளனர். நீதிபதிகளின் கேள்விகள் எதற்கும் அரசு வழக்கறிஞரால் பதில் கொடுக்க முடியவில்லை.

அதுமட்டுமல்ல, சீமானின் பேச்சு உணர்ச்சியை தூண்டக்கூடியதாக இருந்தது என்று அரசு தலைமை வழக்கறிஞர் கூறியதற்கு நீதிபதிகள் எழுப்பிய கேள்வியே மிகவும் கவனிக்கத்தக்கதாகும். சிறிலங்க இராணுவத்தினர் இசைப்பிரியா என்ற தமிழ் பத்திரிக்கையாளரை மானபங்கப்படுத்தி கொலை செய்த காட்சிகளை பிபிசி உள்ளிட்ட பன்னாட்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றனவே, அவைகள் கூட உணர்ச்சியைத் தூண்டக்கூடியதுதான், அதற்காக அரசு அந்த தொலைக்காட்சிகள் மீது நடவடிக்கை எடுத்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


ஆனால் இதற்கெல்லாம் தமிழக அரசின் வழக்கறிஞரிடம் எந்த பதிலும் இல்லை. அதனால்தான் நீதிபதிகள் கேட்டனர், இது என்ன அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா? என்று. அதுவே உண்மையாகும்.

தமிழக மீனவர்கள் கால் நூற்றாண்டிற்கும் மேலாக சிறிலங்க கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு, 500க்கும் அதிகமானோர் அவர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிறகும், அவர்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசு, இந்தியாவின் நாடாளுமன்றத்திலேயே சிறிலங்காவை தங்களது நட்பு நாடு என்று அறிவிக்கிறது. இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் தமிழின உணர்வு பொங்கும் தமிழக அரசும் துணைபோகின்றது.

தமிழக மீனவர்களை கண்டுகொள்ளாமல், சிறிலங்க அரசுடன் நட்பு பாராட்டும் மத்திய, மாநில அரசுகளின் முகத்திரையை கிழிப்பதாக சீமான் பேச்சு இருந்ததால் அவர் தேசப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் அடைத்தனர். எனவே ஐயத்திற்கிடமின்றி இது அரசியல் பழிவாங்கு நடவடிக்கையே.

இந்த தேசத்தின் சொத்தை, பெரு நிறுவனங்கள் கொள்ளையடிக்க ஏதுவாக ‘கொள்கை’ வகுத்து செயல்படும் மத்திய, மாநில அரசுகள்தான் இந்த தேசத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைக் காட்டிக்கொள்கின்றனர்.


தேசப் பாதுகாப்பு என்று கூறி, இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்காக உரிமைக் குரல் கொடுப்பவர்களை, குறைந்தது ஓராண்டிற்காவது உள்ளே வைப்பதற்குத்தானே தேச பாதுகாப்புச் சட்டமே நிறைவேற்றப்பட்டது? ஓராண்டுக் காலத்திற்கு உள்ளே வைத்தால் மீண்டும் மக்கள் நலன் பற்றியெல்லாம் பேச மாட்டார்கள் அல்லவா?

அதுவும் இந்த தமிழ் திருநாட்டை ஆளும் முதலமைச்சர், சட்டத்தையும் நீதிமன்றத்தையும் எப்போதும் மதிப்பவர். அதனால்தான் சீமானை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கோரி அவருடைய சகோதரர் தொடுத்த மனுவை விசாரணைக்கே அனுமதிக்காமல் ‘வாய்தா’ வாங்கியே பல மாதங்கள் இழுத்தடித்தனர். கடைசியாக அவர்கள் தங்கள் மனுவை வேறு ஒரு நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று மனுச் செய்து, அது இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட முதல் நாளிலேயே விடுதலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்க்கத்தானே, மனு விசாரணைக்கு வரும்போதெல்லாம் அரசு வழக்கறிஞர் வாய்தா கேட்டு இழுத்தடித்தார்.

இந்த ஆளும் கட்சிதான் எதிர்க்கட்சித் தலைவரை வாய்தா ராணி என்று வர்ணித்து, போக்குவரத்தை முழுமையாக பாதிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்தியது. எந்த அளவிற்கு இந்த அரசு வெட்கமற்றது என்பதை நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளிக்காட்டியுள்ளது.





இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பது அதன் அரசமைப்புச் சட்டதோடு நின்று விடுகிறது. அரசமைப்பில் மக்களுக்கு அளிக்கப்பட்ட சிந்தனைச் சுதந்திரத்தில் இருந்து கருத்துச் சுதந்திரம் வரை அனைத்துச் சுதந்திரங்களையும் பறிக்கவே தேச பாதுகாப்புச் சட்டம், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், குண்டர்கள் சட்டம் என்று மக்களை மிரட்டும் சட்டங்களை நிறைவேற்றி வைத்துள்ளார்கள். இந்தச் சட்டங்களையெல்லாம் சரியாக பயன்படுத்துவதாகயிருந்தால், போபர்ஸ், காமன்வெல்த் ஊழலில் இருந்து 2ஜி அலைக்கற்றை ஊழல் வரை கொள்ளையடித்த நமது தேசத்தின் தலைவர்கள் பலர் சிறையில் இருக்க வேண்டும். உள்ளபடியே தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவுள்ள இவர்களை எல்லாம் உள்ளே வைத்தால், இன்றைக்கு இந்த நாட்டை ஆண்டுக் கொண்டிருக்கிற பல தலைகளின் இடங்கள் காலியாகத்தான் இருக்கும்.

அதுவும் ஒரு நாள் நடந்தே தீரும்.

நன்றி: தமிழ்.வெப்துனியா.காம்

Thursday, December 2, 2010

புதுச்சேரி அரசை கண்டித்து அரியாங்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!



அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கத்தோடு பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு.அய்யப்பன், வீராம்பட்டினம் தி.மு.க. கவுன்சிலர் பா.சக்திவேல், பாட்டாளி மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் க.தேவமணி ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதுச்சேரி அரசு கைது செய்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் அரியாங்குப்பத்தில் நடைபெற்றது.






பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் இரா.வீராசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்பாளர் தந்தைப்பிரியன் துவக்கவுரை நிகழ்த்தினார். பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் இரா.அனந்தராமன் கண்டனவுரை ஆற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் பொறுப்பாளர்களும் தமிழின உணர்வாளர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

Tuesday, November 30, 2010

ஆட்சியாளர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் கூட்டணி ஆட்சி

சட்டீஸ்கர் மாநிலத்தில், தண்டகாரண்ய வனத்தின் ஒரு பகுதியாக இருக்கும், தாண்டிவாடா மாவட்டத்தில் உள்ள கனிம வளங்களை சுரங்கம் அமைத்து தோண்டி எடுப்பதற்காக அங்கு வாழ்ந்து வந்த ஆதிவாசிகள் 4 இலட்சம் பேர் துரத்தப்பட்டதையும், அவர்களின் துயரத்தையும் நமது நாட்டின் மற்ற பகுதி மக்களுக்கும் எடுத்த சொல்ல சென்னைக்கு வந்த காந்தியவாதி ஹிமான்சு குமார் ஒரு வரலாற்றைக் கூறினார்.

இந்தியா விடுதலை பெற்ற நாடான பிறகு, ஒரு நாள் மகாத்மா காந்தியைச் சந்திக்க வந்தாராம் பூதான இயக்கத்தை நடத்திய வினோபா பாவே. அவரிடம் பேசிய மகாத்மா காந்தி, “நமது நாடு விடுதலை பெற்றுவிட்டது. அரும்பாடுபட்டு நாம் பெற்ற இந்த விடுதலை நிலைக்க வேண்டுமானால் நமது மக்களை ஜனநாயகப்படுத்த வேண்டும். அவர்கள் தங்கள் உரிமைகளை உணர வேண்டும். அந்தப் பணியை நீங்களெல்லாம் மேற்கொள்ள வேண்டும். இதைச் செய்யத் தவறினால், எதிர்காலத்தில் இந்த நாட்டில் நாம் நினைக்கும் அந்த உண்மையான ஜனநாயகம் இருக்காது. ஒன்று, பெரு நிறுவனங்களின் ஜனநாயகம் (Corporate Democracy) உருவாகும் அல்லது குண்டர்களின் ஜனநாயகம் (Goondas Democracy) இருக்கும்” என்று கூறியதாக ஹிமான்சு குமார் கூறினார்.

“மகாத்மா காந்தி அவ்வாறு கூறியதற்கு இணங்கவே, வினோபா பாவே வழியில் நின்று, தண்டகாரண்ய காடுகளில் எனது ஆசிரமத்தை அமைத்து அந்த மக்களோடு வாழ்ந்து, அவர்களுக்கிடையே தொண்டு செய்து வருகின்றேன்” என்று கூறினார் (தமிழ்.வெப்துனியாவில் அந்த செய்தியைப் பார்க்க).

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டினால் பயன்பெற்றோர் விவரங்கள், நீரா ராடியா நடத்திய உரையாடல்களில் வெளியானதைப் பார்க்கும் போது, மகாத்மா காந்தியின் அந்த அச்சமே நினைவிற்கு வருகிறது.

தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.இராசாவிற்கு தொலைத் தொடர்பு அமைச்சர் பதவியைப் பெற்றுத் தருவதில் இருந்து, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வரை நடந்தேறிய பேரங்களை வெளிக்கொணர்ந்தது மட்டுமின்றி, இந்த நாட்டை ஆளும் அரசின் கொள்கை முடிவுகளை நிர்ணயிப்பதிலும், மாற்றுவதிலும் பெரு நிறுவனங்கள் எந்த அளவிற்கு செல்வாக்குச் செலுத்தின என்பதையும், அவைகளுக்கு வசதியாக பத்திரிக்கைகளில் செய்திகள் வராமல் இருட்டடிப்பை செய்யப்பட்டதும், அந்த பெரு நிறுவனங்கள் பெரும் பலம் அடைவதற்கென்ற அரசு அளிக்கம் சலுகைகளை நாடாளுமன்றத்தில் எந்த உறுப்பினரும் பேசாமல் தடுக்க கையாண்ட முறைகளும் ராடியா உரையாடல் பதிவுகளில் வெளிவந்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய வணிகக் குடும்பத்தில் நடந்த மோதல், அதில் ஒருவரின் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு உற்பத்திக்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக அவர்களில் ஒருவர் மற்றவருக்கு எதிராக பத்திரிக்கைகளை பயன்படுத்த முயன்றது. அதனை முன்னவர் ராடியா உள்ளிட்ட தனது லாபியிஸ்ட்டுகளை பயன்படுத்தி, ‘பேச்சுவார்த்தைகளை’ நடத்தி இருட்டிப்பு செய்த விவரங்கள். விலை நிர்ணயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போதே, திரைமறைவில் இத்தனை திரைமறைவு வேலைகள் நடந்துள்ளது.

இதைவிட, பெரும் அதிர்ச்சி தரும் மற்றொரு திரைமறைவு பேரம்தான் மிகக் கொடியது. மத்திய அரசு கடைபிடித்துவரும் புதிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்புகள் தொடர்பான உரிமம் (New Exploration and Licensing Policy) அளிக்கப்பட்டதில், இந்தியாவின் முதன்மையான அந்த பெரும் நிறுவனத்திற்கு வரிச் சலுகை - அதுவும் முன்தேதியிட்டு வழங்க - முன்வந்ததும், அதனை நாடாளுமன்ற விவாதத்தில் கொண்டு வந்து ‘கெடுத்து’விடாமல் இருக்க மேற்கொண்ண்ட திரைமறைவு நடவடிக்கைகளும்தான் அதிர்ச்சியளிக்கிறது. அந்த வரிச் சலுகை முன் தேதியிட்டு (Retrospective) அளிக்கப்பட்டால் அந்த முதன்மை நிறுவனத்திற்கு மட்டும் ரூ.81,000 கோடி வருமான வரிச் சலுகை கிடைக்குமாம். இந்த உண்மை பத்திரிக்கைகளில் வெளிவராமல் செய்துவிட்டதாக அந்த முதன்மை நிறுவனத்திற்கான தொடர்பாளராக செயல்பட்ட, இந்தியப் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது அவருக்கு செயலராக இருந்த என்.கே.சிங், ராடியாவிடம் கூறுகிறார்.

அந்த உரையாடலில் ராடியாவுடன் பேசியது என்.கே.சிங்தான் என்பதை, அவருடன் கல்லூரியில் பயின்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அருண் ஷோரி (ஒரு தொலைக்காட்சி பேட்டியில்) உறுதி செய்துள்ளார். பத்திரிக்கைளில் வெளிவராமல் (இந்தியாவின் ஒரு பெரும் ஆங்கில நாளிதழின் உரிமையாளரிடமே பேசிவிட்டதாக கூறுகின்றனர்) தடுத்துவிட்ட பிறகு, அதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிப்பதை எவ்வாறு தடுப்பது என்று என்.கே.சிங், ராடியாவுடன் விவாதிக்கிறார்.

இப்பிரச்சனையை அருண் ஷோரி கட்சிக் கூட்டத்தில் எழுப்பியதால், அவர் நாடாளுமன்றத்திலும் அது பற்றி பேசக் கூடும் என்பதால், நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக முதலில் பேசுபவராக இருந்த அருண் ஷோரியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அக்கட்சியின் முன்னாள் தலைவரான வெங்கையா நாயுடுவை (திரைமறைவு வேலை செய்து) முதன்மை பேச்சாளராக வாதத்தை வைப்பார் என்று மாற்றுகின்றனர்.

இதேபோல், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, முரளி மனோகர் ஜோஷியை மக்களவையில் முதன்மை பேச்சாளராக விவாதத்தை தொடங்க வைத்து அந்த முதன்மை நிறுவனத்திற்கு அரசு அளிக்க உத்தேசித்துள்ள சலுகையை கேள்விக்கு உட்படுத்தாமல் தடுத்து விடுகின்றனர்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக அரசு என்று பெருமைப்படுத்தப்படும் நமது நாட்டின் பாரம்பரியமிக்க நாடாளுமன்றம் திரைமறைவு வேலைகளால் இயக்கப்படுகிறது என்ற உண்மை இன்றுதான் முதல் முறையாக - மிக ஆதாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!

இந்தியாவின் முதன்மையான நாளேடுகளில் இன்று வெளியாகியுள்ள இந்த விவரங்கள் அனைத்தும் உண்மையென்பதும், அது இதுவரை மறுக்கப்படவில்லை என்பதும் ஒன்றை நிச்சயமாக்குகிறது. அது இந்த நாடு நாம் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் மக்கள் ஜனநாயக அரசல்ல என்பதையே.

இது ஆட்சியில் இருப்பவர்கள், அரசு நிர்வாகிகள் (Bureaucracy), பெரு நிறுவனங்கள் (Corporates) ஆகியோரின் கூட்டணி ஜனநாயமே இங்கு நிலவுகிறது. இங்கு பெரு நிறுவனங்களின் கைப்பாவையாகவே அரசியல் கட்சிகளும், ஆட்சியில் உள்ளவர்களும், அதிகாரிகளும் செயல்படுகின்றனர் என்பதற்கு இதற்கு மேல் எந்தச் சான்றும் தேவையில்லை.

இவையாவும் ஒரிரு கோடி ரூபாய்க்கு நடந்த திரைமறைவு வேலையில்லை, பல ஆயிரம் கோடி ரூபாய் வரிப்பணத்தை சலுகை என்ற பெயரால் அரசே கொள்ளை கொடுக்கும் கொடுமையாகும்.

ஒரு பக்கத்தில் நமது நாட்டின் விவசாயிகள் கடன் தொலை தாங்காமல், மரபணு மாற்ற விதைகளை பயிரிட்டு, அதனால் இழப்பு ஏற்பட்டு சாகிறார்கள். இருபது ஆண்டுக்காலத்தில் இப்படி 3 இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு செத்துள்ளார்கள். மறுபக்கம், தொன்றுதொட்டு தாங்கள் வாழ்ந்த வந்த பூமியில் உள்ள வளங்களுக்காக பழங்குடிகள் - இப்படிப்பட்ட பெரு நிறுவனங்களின் கொள்ளைக்காக - விரட்டப்படுகிறார்கள்.

கடலிற்குச் சென்று மீன் பிடித்து அன்றாட வாழ்க்கையை கரையேற்றிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் மீனவர்கள் சிறிலங்க கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். அன்றாடம் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியால் அடித்தட்டு மக்கள் அல்லுறுகிறார்கள். ஆனால், இந்த நாட்டின் வளத்தையும், வரிப்பணத்தையும் மிக எளிதாக பெற்று பெரு நிறுவனங்கள் செழித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் உலக பணக்காரர்கள் வரிசையில் அதிகம் இடம்பெறுகின்றனர் என்று இங்குள்ள பத்திரிக்கைகள் பல பெருமையாக செய்திகளை வெளியிடுகின்றன.

சந்தேகமில்லை, மகாத்மா காந்தி அஞ்சிய நிறுவன ஜனநாயகம் (Corporate Democracy) நமது நாட்டில் நிலைபெற்றுவிட்டது.
நன்றி: தமிழ்.வெப்துனியா.காம் (30.11.2010)

Wednesday, November 24, 2010

தமிழ் கலைஞர்களை பழித்தால் குரல்வளையை கடிப்பேன்: வி.சி.குகநாதன்

நான், எந்த நடிகருக்கும் விரோதி அல்ல. ஆனால் தமிழர்களையும், தமிழ் கலைஞர்களையும் பழித்தால், அவர்களின் குரல்வளையை கடித்து துப்பவும் தயங்க மாட்டேன் என்று வி.சி.குகநாதன் கூறினார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் வி.சி.குகநாதனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. தமிழ் நடிகர்களை ஆர்யா இழிவாக பேசியதாக வி.சி.குகநாதன் கயிறு திரித்து புது பிரச்சினையை கிளப்பி இருக்கிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.குகநாதன், “உங்கள் விருப்பம்” படவிழாவில், எந்த நடிகரின் பெயரையும் குறிப்பிட்டு நான் பேசவில்லை. “ஏசியாநெட்” நடத்திய நிகழ்ச்சியில் ஒரு நடிகர் கலந்துகொண்டு பேசும்போது, மலையாள படங்களில் நடிக்க வேண்டும் என்றால் நடிப்பு தெரிந்திருக்க வேண்டும். அது எனக்கு கொஞ்சம்தான் தெரியும். அதற்கு தகுந்த மாதிரி வேஷம் கொடுத்தால், அதை நான் கவுரவமாக நினைத்து மலையாள படங்களில் நடிப்பேன். ஏனென்றால் நான் ஒரு மலையாளி. எல்லோரும் பார்க்கிற மாதிரி மலையாள பட உலகில் இன்னும் தரமான படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் மலையாள படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அந்த நடிகரின் பேச்சு தமிழ் நடிகர்களை கேவலப்படுத்துவது மாதிரி இருக்கிறது. உலக புகழ்பெற்ற நடிகர்திலகம் சிவாஜிகணேசனில் இருந்து கமல்ஹாசன் வரை பல அபூர்வ நடிகர்களை கொண்டது, தமிழ் பட உலகம். அவர்களை எல்லாம் கேவலப்படுத்துகிற மாதிரி அந்த நடிகர் பேசியிருக்கிறார்.

இதை நான் பெப்சி' தலைவராக கூறவில்லை. தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒரு அங்கத்தினராக கூறுகிறேன். 10 வயதில் இருந்தே தமிழ் மொழிக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் நான் போராடியவன் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும்.

நான் யாருக்கும் கயிறு திரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அடிக்கடி கட்சி மாறுகிற ஆளும் இல்லை. தமிழர்களுக்காக போராடுகிற எல்லா தமிழர்களுடனும் இருப்பேன்.

நான், எந்த நடிகருக்கும் விரோதி அல்ல. ஆனால் தமிழர்களையும், தமிழ் கலைஞர்களையும் பழித்தால், அவர்களின் குரல்வளையை கடித்து துப்பவும் தயங்க மாட்டேன் என்றார்.

நன்றி: நக்கீரன்.காம் (25.11.2010)

Tuesday, November 23, 2010

பீகார் தேர்தல் - நிதிசுகுமார் வாழ்க!

பீகாரில் நிதிசுகுமார் தலைமையிலான கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்க பீகார் மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். மக்களுக்காக உண்மையாக உழைக்கும் ஒருதலைவரை பீகார் மக்கள் பெற்றுள்ளனர். பீகார் மக்கள் மேலும் வளச்சியடைய வாழ்த்துவோம்!

இந்தத்தேர்ததில் கங்கிரசின் வெற்றி ஒற்றை இலகத்திலேயே சுருக்கப்பட்டுள்ளது. மக்களுக்காக உண்மையாக உழைக்கும் தலைவரை அடையாளங்கண்டு காங்கிரசு-சோனியா-இராகுல் போன்ற வேடதாரிகளை பீகார் மக்கள் புறக்கணித்துள்ளனர்.

தமிழகத் தலைவர்களும் தமிழர்களுக்கு துரோகம் செய்யாமல் தமிழர்களின் நலனுக்காக உண்மையாக உழைத்தால் காங்கிரசை அண்டிப்பிழைக்கும் நிலைக்கு ஆளாகத்தேவையில்லை. தமிழர்களுக்காக உண்மையாக உழைக்கும் ஒருதலைவர் கிடைக்கமாட்டாரா?