Monday, February 15, 2010

காவிரி போராளி கரூர் குப்புசாமி அவர்களுக்கு வீரவணக்கம்


காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைப் பெற தன் வாழ்நாள் முழுவதும் போராடிவந்த கரூர் வழக்கறிஞர் பூ.அர. குப்புசாமி காலமானார்.

காவிரி நதி நீர் சிக்கல் குறித்து மக்கள் மன்றத்திலிருந்து நீதிமன்றம் வரை பல்வேறு தளங்களில் போராடியவர் வழக்கறிஞர் குப்புசாமி. இவர் எழுதிய காவிரி நதி நீர்ச் சிக்கல் புத்தகம், அப்பிரச்சனையை மிக எளிதாக புரிய வைத்தது மட்டுமின்றி, தமிழகத்தின் உரிமையை பறிக்க கர்நாடக அரசும், அரசியல் கட்சிகளும் எப்படியெல்லாம் செயல்பட்டன என்பதையும், அதையெல்லாம் உரிய நேரத்தில் தடுத்து நிறுத்தத் தவறிய தமிழக அரசு, தலைவர்கள் குறித்தெல்லாம் அப்புத்தகத்தில் விரிவாக எழுதியிருந்தார்.

காவிரி சிக்கல் மட்டுமின்றி, விவசாயிகளின் நலன் காக்க பல போராட்டங்களை நடத்தியவர் குப்புசாமி. தமிழ்நாட்டின் விவசாயிகள் கந்து வட்டிக் கடன் சுமையில் தத்தளித்தபோது, கந்து வட்டிக் கடன்களுக்கு முற்றுப் புள்ளி வைக்குமாறு தமிழக முதலமைச்சருக்கு குப்புசாமி அவசர தந்தி அனுப்பினார்.

அதனைக் கண்ணுற்ற அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கந்து வட்டியில் பெற்ற கடன்கள் அனைத்தையும் இரத்து செய்தது மட்டுமின்றி, கந்து வட்டிக் கடன் அளிப்பதை அரசு உத்தரவு மூலம் நிறுத்தி, அதற்குத் தடையும் விதித்தார்.இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடன் தற்கொலைக்குச் செல்லாமல் காப்பாற்றப்பட்டனர்.

ஜீவாவுடன் துவங்கிய பொது வாழ்க்கை

வழக்கறிஞசர் குப்புசாமியின் பொது வாழ்க்கை பொதுவுடைமையாளரான ஜீவாவுடன் இணைந்து துவங்கியது. இந்திய பொதுவுடைமைக் கட்சியில் கலை இலக்கிய பெருமன்றத்தை இவரை வைத்து ஜீவா துவக்கினார்.

ஜீவாவின் காலத்திற்குப் பிறகு பொதுவுடைமைக் கட்சியில் இருந்து வெளியேறி, பெரியாரின் தலைமையை ஏற்றார். தமிழ்நாட்டின் உரிமைகளை பொதுவுடைமைக் கட்சி முன்னெடுக்காததால், திராவிடர் கழகத்தில் இணைந்ததாகக் கூறிய குப்புசாமி, ‘மண்ணிற்கேற்ற மார்க்சியம்’ என்ற கோட்பாட்டில் தீவிரம் காட்டினார்.

கரூர் மக்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்த நொய்யல் ஆறு, சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் மாசடைந்தபோது, அதனை எதிர்த்துப் பெரும் மக்கள் இயக்கம் கட்டியவர் குப்புசாமி.

காவிரி நதி நீர்ச் சிக்கலில் அரசியலிற்கு அப்பாற்பட்டு, தமிழின உரிமையை முன்வைத்து சென்னையில் இவர் நடத்திய கருத்தரங்கத்தில், அப்பிரச்சனையில் ஈடுபட்டிருந்த சட்ட வல்லுனர்களையும், நீராண்மை நிபுணர்களையும் அழைத்து பேசச் செய்தார். காவிரி நதி நீர்ப் பிரச்சனையை தமிழகத்தின் உரிமைப் போராகவே கருத வேண்டும் என்று கோரி, அதற்காக பல போராட்டங்களை நடத்தியவர் குப்புசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

80 வயதைக் கடந்த குப்புசாமி சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். நேற்று (15.02.2010) அதிகாலை 5 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. நேற்று மாலை அவரது சொந்த ஊரில் இறுதி நிகழ்ச்சி நடந்தது.

நன்றி: தமிழ்வெப்துனியா.காம்

3 comments:

ஜோதிஜி said...

இது போன்ற விசயங்களை இடுகை வாயிலாக படைக்க நிணைக்கும் உங்கள் உயர்ந்த உள்ளத்துக்கு வாழ்த்துகள்.

முத்துக்குமார் அழகப்பன் said...

அய்யாவின் மறைவு தமிழினத்துக்குப் பேரிழப்பு.தங்களின் தகவலுக்கு நன்றி.

seeprabagaran said...

ஜோதிஜி அவர்களுக்கும்,
அழகப்பன் அவர்களுக்கும் நன்றி!

தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்க ஓயாது உழைத்த போராளிகளின் நினைவை போற்றுவதும், அவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடருவதும் ஒவ்வொரு தமிழனின் கடமை.