ஒரு வழியாக தமிழகத்தின் “செட்டப் சட்டமன்றம்” 13-ஆம் தேதி திறக்கப்பட்டுவிட்டது.
கடந்த ஆறு மாதத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் அதிக நேரம் ஒதுக்கி ஆர்வத்தோடும் கவனத்தோடும் செயல்பட்ட பொது வேலை ஒன்று இருக்கும் என்றால் அது தமிழகத்திற்கு புதிய சட்டமன்றம் கட்டும் பணியாகத்தான் இருக்கும். காலத்திற்கு ஏற்ப தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றமும் தலைமைச் செயலகமும் கட்டப்பட வேண்டும் என்பது நியாயமான சிந்தனைதான்.
ஆனால், சட்டமன்றம் கட்டும் பணிகள் போர்கால அடிப்படையில் இரவு பகலாக செய்து வேலை முடிந்தும் முடியாமலும் அரைகுறையாக கட்டி திரைப்பட கலை இயக்குனர்களைக்கொண்டு போலி கட்டுமானங்கள் செய்து பிரதமரையும் பாரதமாதா சோனியாவையும் அழைத்துவந்து திறப்பு விழா நடத்த வேண்டிய அவசம் என்ன? என்பதுதான் நாட்டுமக்களின் கேள்வி.
பொதுவாக அரசு ஒரு கட்டுமானப்பணியை மேற்கொள்ள வேண்டுமென்றால் அதற்கான திட்டங்களை வகுத்து, நிதி ஒதுக்கி, சிறந்த கட்டுமான நிறுவனத்திடம் பணியை ஒப்படைத்து, அரசு அதிகாரிகளும் கண்காணித்து, விருப்பமிருந்தால் என்றாவது ஒரு நாள் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பார்வையிட்டு பணிகளை முழுமையாக செய்து முடித்துவிட்டு திறப்பு விழா நடத்துவதுதான் முறை.
அதை விடுத்து நாள்தோறும் புதிய சட்டமன்றப் பணியை பார்வையிடுவதும், ஆலோசனை வழங்குவதும், மறுநாள் அனைத்து ஊடகங்களிலும் ஒரேமாதரியான படம் வெளியிட்டு செய்தி வெளிவருவதும் என தமிழக முதல்வரின் அன்றாட அலுவலாக இது இருப்பது ஏன்? என்று தெரியவில்லை. ஒரு களஆய்வாளரோ அல்லது தலைமைப்பொறியாளரோ செய்யவேண்டிய அன்றாடப்பணியை ஒரு முதலமைச்சர் செய்ய வேண்டிய அவசியமென்ன?
அதுமட்டுமன்றி தமிழக அரசு அதிகார வரம்புக்குள் உட்படாத முதல்வரின் மகள் கனிமொழி, பேரப்பிள்ளைகள் போன்ற முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் கட்டுமானப்பணியை பார்வையிடவேண்டியதன் அவசியம் என்ன? ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றமுறையில் கனிமொழிக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் தமிழகத்தில் உள்ள மற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாதது ஏன்?
அதுமட்டுமன்றி கட்டப்படும் சட்டமன்றம் தமிழ்நாட்டு மக்களுக்காக கட்டப்படுவது. அது தமிழ்நாட்டின் குறியீடுமாகும். ஆனால் இந்த கட்டிட அமைப்புமுறையில் தமிழகத்தின் குறியீடு என்று எதுமில்லை. ஒரு பிரமாண்டமான தொழில்நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் போன்றே இது தோற்றமளிக்கிறது.
தற்போது ஜார்ஜ் கோட்டையில் இயங்கும் சட்டமன்ற கட்டிடமும், தலைமைச்செயலகமும் இடிந்துவிழும் நிலையில் இல்லாமல் உறுதியாகவே உள்ளது. மேலும் பல ஆண்டுகள் அரசின் இயக்கத்தை தாங்கக்கூடிய நிலையிலேயே ஜார்ஜ் கோட்டை உள்ளது. பிறகு ஏன் இவ்வளவு அவசரம்?
தமிழனால் கட்டப்பட்ட கர்நாடக சட்டமன்றம்
2 comments:
450 கோடி கொட்டபட்டுல்ளது...அப்புறம் இவர்களே கஜானா வில் பணம் இல்லை என்பார்கள்...ஓட்டு போட்டாச்சுங்கண்ணா
புதிய சட்டமன்ற கட்டப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சாதாரணமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்றால் கூட பார்த்துப்பார்த்து நிதானமாக கட்டப்படுகிறது.
ஆனால் நூற்றாண்டுகளை கடந்து நிற்கவேண்டிய ஒரு கட்டிடம், தமிழ்நாட்டின் குறியீடாக இருக்கவேண்டிய ஒரு கட்டிடம், தமிழக மக்களுக்கு சொந்தமான ஒரு கட்டிடம் இவ்வளவு அவசர கதியில் கட்டப்படவேண்டிய அவசியம் என்ன?
Post a Comment