Wednesday, June 15, 2011

அரசு தொடக்கப் பள்ளியில் கல்வி கற்கும் ஆட்சியர் மகள்!

ஈரோடு மாவட்ட ஆட்சியராக அண்மையில் பொறுப்பேற்றார் ஆர்.ஆனந்தகுமார். இதற்கு முன் தருமபுரி மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்தார். இவர் மனைவி ஸ்ரீவித்யா. கோபிகா, தீபிகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ஸ்ரீவித்யா தருமபுரி அரசு மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றி வருகிறார். மூத்த மகள் கோபிகா தருமபுரியில் ஒரு மெட்ரிக் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்தார். தற்போது ஈரோடு குமலன்குட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது மகளை 2ம் வகுப்பில் ஆட்சியர் சேர்த்துள்ளார்.

குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மகளுடன் புதன்கிழமை காலை சென்ற ஆட்சியர், தனது மகளை 1ம் வகுப்பில் சேர்ப்பதாக தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார். எனினும் கோபிகாவை 2-ம் வகுப்பில் சேர்த்துக் கொண்டனர்.

கூலித் தொழிலாளி கூட தங்களது குழந்தைகளுக்கு ஆங்கில அறிவு கிடைக்க வேண்டும் என்ற ஆவலில் மெட்ரிக் பள்ளிகளிலும் பெரும் பணக்காரர்களின் குழந்தைகள் படிக்கும் பிரபலமான தனியார் பள்ளிகளிலும் சேர்க்கின்றனர்.

ஆனால் மாவட்ட ஆட்சியர் ஒருவர் தனது மகளை ஏழைக் குழந்தைகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்ததன் மூலம், தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசு பள்ளிகள் தரம் வாய்ந்தவை என்பதை உணர வைத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த எஸ்.ஜெ.சிரு தன் மனைவியை பிரசவத்துக்கு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இப்போது ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார் தன் மகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார் இத்தகைய செயல்கள் மூலம் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மற்ற அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் வழிகாட்டியாக உள்ளனர்.

நன்றி தினமணி 16.06.2011



இந்தக் கருத்து எப்படி இருக்கு?


“அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், கல்வித்துறையில் பணிபுரியும் அரசு ஊழியர்களும், கல்வித்துறை அமைச்சரும் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வைக்க வேண்டும்“ என்ற ஆணையை அரசு வெளியிட்டால் தனியார் பள்ளிகளின் பகல் கொள்ளையையும் கல்வி வியாபாரத்தையும் ஒழித்துவிடலாம்.

No comments: