Wednesday, June 8, 2011

இலங்கை பிரச்சனையில் டெல்லியில் முகாமிட்டு வலியுறுத்த வேண்டும்: ஜெயலலிதாவுக்கு தங்கர்பச்சான் கோரிக்கை

இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க டெல்லியில் முகாமிட்டு வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மூன்று லட்சம் தமிழர்களின் உயிரிழப்பும் நாற்பதாயிரம் போராளிகளின் முப்பது ஆண்டுகளுக்கு மேலான போராட்டமும் வீணாகிப் போனதே என தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தவித்திருந்த வேளையில், ஐ.நா.சபை விசாரணைக் குழுவின் போர்க்குற்ற அறிக்கை நம்பிக்கையை விதைத்தது.

இலங்கைத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்துக்கு தண்டனையாக கடந்த ஆட்சி தோல்வி கண்டு மக்களின் புதிய ஆட்சி மலர்ந்துள்ளது. தேர்தல் முடிவு வரும் முன்னரே புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்பவர்கள் முதல் சட்டப்பேரவைத் தொடரிலேயே இலங்கை அரசுக்கு பொருளாதாரத் தடையை விதித்து தீர்மானம் நிறைவேற்றி இலங்கை ஆட்சியாளர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என எனது கோரிக்கையை வெளிப்படுத்தியிருந்தேன்.

என்னைப் போன்றோரின் வேண்டுகோள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் உலகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் எப்போதும் இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். உலகின் ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பையும் தீர்த்து வைக்கும்படியான தீர்மானம் நிறைவேறக் காரணமாக இருந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் தமிழர்கள் சார்பில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்கு அடுத்த கட்டமாக முதல்வர், டெல்லியில் முகாமிட்டு அனைத்துக் கட்சியினரையும் கூட்டி இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் என அந்த அறிக்கையில் தங்கர்பச்சான் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி நக்கீரன்.காம்

No comments: