Monday, May 23, 2011

சமச்சீர் கல்வியை நிறுத்தக் கூடாது: அரசுக்கு அமைப்புகள் கோரிக்கை

சமச்சீர் கல்வியை அமல்படுத்திக்கொண்டே, அதிலுள்ள குறைகளை நீக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்திய மாணவர் சங்கம்: பொதுப்பாடத்திட்டத்தை இந்த கல்வியாண்டில் நிறுத்திவைக்கும் புதிய அரசின் அமைச்சரவை முடிவு சரியானதல்ல. எனவே, அதை அமல்படுத்திக்கொண்டே அதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

பொதுப்பாடத்திட்டத்தில் சில குறைகள் உள்ளதையும், அதில் பல மாற்றங்கள் செய்து செழுமைப்படுத்த வேண்டும் என்பதையும் ஏற்கிறோம்.

ஆனால், அதை இந்தப் பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்திக் கொண்டேதான் குறைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும்.

கடந்த தி.மு.க. அரசு முழுமையான சமச்சீர் கல்வியைத் தராமல், பொதுப்பாடத்திட்டத்தை மட்டுமே ஏற்படுத்தியது. பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பான முழுமையான சமச்சீர் கல்வியை இந்த அரசு ஏற்படுத்த வேண்டும்.

தமிழ் உரிமைக் கூட்டமைப்பு:இப்போது அமலில் உள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தில் குறைகள் இருந்தால் நீக்க நவடிக்கை எடுக்கலாம். ஆனால், திட்டத்தையே நிறுத்துவது பொருத்தமானதாக இல்லை.

பழைய பாடத்திட்டத்தின் புதிதாக புத்தகங்களை அச்சிடுவதற்கு மூன்று மாதங்களாகும். அதுவரை பாடப்புத்தகங்கள் இல்லாமல் மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமப்படுவார்கள். தமிழக அமைச்சரவை எடுத்த முடிவை மாற்றி சமச்சீர் கல்விமுறையை இந்த ஆண்டு முதலே நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம்:சமச்சீர் கல்வித் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைந்து அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் பாடத்திட்டங்களை தயாரிக்க வேண்டும். தமிழ்நாட்டின் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களும் தரமான கல்வியை இலவசமாகப் பெறத்தக்க வகையில் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

நன்றி: தினமணி 24.05.2011

No comments: