Wednesday, May 25, 2011

சமச்சீர் கல்வித் திட்டம்: அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வலியுறுத்தல்

தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அதன் மாநிலச் செயலர் ம.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கல்வி என்பது வியாபார மற்றும் விற்பனை பொருளாக இருப்பதை எதிர்த்து கடந்த காலங்களில் பல்வேறு விதமான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக தமிழகத்தில் இந்தாண்டு முதல் சமச்சீர் கல்விமுறை அமுல்படுத்தப்படும் என தமிழக அரசு கடந்தாண்டு அறிவித்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு நிறைவடைந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க அரசு இத்திட்டத்தை நிறுத்திவைப்பதாக அறிவித்திருப்பது வேதனைக்குரியதாகும்.

சமச்சீர்கல்வி திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் அதனை அமுல்படுத்திக்கொண்டே அதனை சரிசெய்யும் நடவடிக்கையில் இறங்காமல் அதனை முழுமையாக நிறுத்திவைப்பது என்பது தனியார் கல்வி நிறுவனங்களின் வியாபாரத்திற்கு ஊக்கமளிக்கும் விதமாக அமையும்.

தேவையற்ற பாடங்களை சுற்றறிக்கைகள் மூலமாக நீக்கிவிட முடியும். மேலும் தரத்தை மேம்படுத்துவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. தரம் குறைந்துவிடுவதாக கூறி தனியார் பள்ளிகளின் வியாபார நலனை உள்நோக்கமாகக் கொண்டு செயல்படக்கூடாது.
எனவே, தமிழக அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்யவதுடன் உடனடி நடவடிக்கையாக நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை அமுல்படுத்த உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் ம.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி 26.05.2011

No comments: