Monday, May 23, 2011

சமச்சீர் கல்வியை தொடர வேண்டும்: பா.ம.க., மார்க்சிஸ்ட் கோரிக்கை

பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவே அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட்ட சமச்சீர்க் கல்வி பாடத்திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்படாது என்றும், அதற்கு மாறாக பழைய பாடத்திட்டத்தையே பின்பற்றலாம் என்றும் எடுக்கப்பட்டுள்ள முடிவு தேவையற்ற ஒன்றாகும்.

முந்தைய அரசு கொண்டுவந்த திட்டம் என்பதற்காக இந்தத் திட்டத்தை நிறுத்திவைப்பது ஏற்புடையதல்ல. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள குறைகளை படிப்படியாக சரிசெய்து கொள்வதுதான் முறையாக இருக்கும். அதைவிடுத்து, சமச்சீர் கல்வி முறையையே நிறுத்தி வைப்பது என்பது வளரும் கன்றை முளையிலேயே வெட்டி வீழ்த்துவதற்குச் சமம். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த புதிய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்பது காலம்தாழ்ந்த நடவடிக்கையே தவிர வேறல்ல.

இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் கல்வியை வணிகமயமாக்கி, கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வரும் தனியார் பள்ளி நிர்வாகிகளின் நிர்ப்பந்தத்திற்கு அரசு துணை போய்விடக் கூடாது.

தமிழக அரசின் முடிவால் ரூ.200 கோடி செலவால் அச்சிடப்பட்ட 6.5 கோடி புத்தகங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், பழைய பாடத்திட்டத்தின் படி, பாடப்புத்தகங்களை புதிதாக அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்க தேவையற்ற காலதாமதமும், பொருள்செலவும் ஏற்படும்.

1, 6 வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறை ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு 2, 7 வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

மாணவர்களின் கல்வி நலன் கருதியும், ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே தரமான, சீரான கல்வி கிடைப்பதை உறுதி செய்யவும் சமச்சீர் கல்வி முறையை அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பாண்டிலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ராமதாஸ்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை அமலாக்க வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஜனநாயக இயக்கங்கள் நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வந்துள்ளனர்.

இந்தப் பின்னணியில்தான் தமிழ்நாடு அரசு சமச்சீர் கல்வியை ஏற்றுக்கொண்டு முதல்கட்டமாக 1,6 வகுப்புகளில் அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு சமச்சீர் கல்வி அமலாக்கத்தை ஏற்றுக்கொள்வதாகவும், கூடவே கல்வித் தரத்தையும் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி அதற்காக வல்லுநர் குழு அமைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்தக் கல்வியாண்டுக்கு சமச்சீர் கல்வியை நிறுத்தி, பழைய பாடத்திட்டத்தையே பின்பற்ற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கல்வித் தரத்தை உயர்த்துவதும் பாடப்புத்தகத்தில் உள்ள குறைபாடுகளைக் களைவதும் வரவேற்கத்தக்கவையே.

ஆனால், இதற்காக சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டு நிறுத்தி வைத்திருப்பதும், ரூ.200 கோடிக்கும் மேல் செலவிட்டு அச்சிட்டுள்ள பாடப்புத்தகங்களை முழுமையாகக் கைவிடுவது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சமச்சீர் கல்வி முறையை இந்த ஆண்டும் அமலாக்கிக் கொண்டே கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான பணிகளை நிறைவேற்றுமாறும், பாடப்புத்தகங்களில் உள்ள குறைபாடுகளைக் களையும் வகையில் சில பாடங்களை நீக்கியோ அல்லது பிழைதிருத்தம் செய்தோ அரசு உத்தரவு மூலம் சரிசெய்யுமாறு வேண்டுகிறோம்.

இதன்மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் நம்பிக்கையை பலப்படுத்துமாறு தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு கேட்டுக்கொள்கிறது. தனியார் கல்விக் கட்டணக் கொள்ளையிலிருந்து மாணவர்களையும், பெற்றோர்களையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி 24.05.2011

No comments: