Tuesday, May 24, 2011

சமச்சீர் கல்வி நிறுத்திவைப்பு: பா.ம.க. எதிர்ப்பு

சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது என்ற தமிழக அரசின் முடிவுக்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாமக நிர்வாகக் குழு கூட்டம் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், அடிதடி, சண்டை சச்சரவுகள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு குடிப்பழக்கம்தான் அடிப்படை காரணமாகும். மனித சமுதாயத்தை சீரழித்து வரும் குடிப்பழக்கத்திலிருந்து மக்களை விடுவிக்க பூரண மதுவிலக்கு கொள்கையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

தனி மனித வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் கல்விதான் அடிப்படையாகும். ஏழை, பணக்காரர், நடுத்தர வகுப்பினர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே தரமான, சீரான உயர் கல்வி கிடைக்க வேண்டும். இதற்காகவே சமச்சீர் கல்வி முறை வேண்டும் என பா.ம.க. முதன் முதலில் குரல் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இதனை வலியுறுத்தியதால் கடந்த ஆண்டில் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து வகுப்புகளுக்கும் இது விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்த்த நிலையில் சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பது என தமிழக அரசு எடுத்துள்ள முடிவு பெரும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை நீக்கி நடைமுறைப்படுத்துவதுதான் சரியானது. ரூ. 200 கோடி செலவில் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும். அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்படும் சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிர்வாகக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி 25.05.2011

No comments: