Thursday, May 26, 2011

சமச்சீர் கல்விச் சட்ட அமலை நிறுத்த முடியுமா?

சமச்சீர் கல்விச் சட்டத்தை அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்பது பற்றி தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமச்சீர் கல்வி முறை நிறுத்தி வைக்கப்படும் என்றும், இந்தக் கல்வியாண்டில் பழைய பாடத்திட்ட முறையே தொடரும் என்றும் அண்மையில் தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்கறிஞர் கே. ஷியாம் சுந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். சமச்சீர் கல்வி முறையை தொடர்ந்து அமல்படுத்த தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ். ராஜேஸ்வரன், கே.பி.கே. வாசுகி ஆகியோரைக் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு வியாழக்கிழமை வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே. பாலு கூறியதாவது:

சமச்சீர் கல்வி முறை பற்றி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ். முத்துக்குமரன் தலைமையிலான குழு விரிவான ஆய்வு மேற்கொண்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்துவதற்கான சட்டம் இயற்றப்பட்டு, 2010 - 2011-ம் கல்வியாண்டில் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு இந்த புதிய பாடமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

2011-2012-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, ரூ.200 கோடி செலவில் 9 கோடி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இது மாணவர்களையும், பெற்றோர்களையும் பெரிதும் பாதிக்கச் செய்துள்ளது. ஏற்கெனவே ரூ. 200 கோடி செலவு செய்துள்ள அரசு, புதிதாக புத்தகங்கள் அச்சடிக்க மேலும் சுமார் ரூ. 200 கோடி செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, சமச்சீர் கல்வி முறையை தொடர்ந்து அமல்படுத்த அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று பாலு வலியுறுத்தினார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது:

பல்வேறு பாடத் திட்ட முறைகளிலிருந்து தங்களுக்கான சிறந்த பாடத் திட்டத்தை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில், ஒரு மாணவன் குறிப்பிட்ட ஒரு பாடத் திட்ட முறையில்தான் படிக்க வேண்டும் என்பதை அரசால் கட்டாயப்படுத்த முடியாது.

இப்போதைய சமச்சீர் கல்வி முறை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடியது. எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன்களுக்காகவே சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைப்பது என்ற கொள்கை முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றார் நவநீதகிருஷ்ணன்.

இதற்கிடையே, சமச்சீர் கல்வி முறையை இந்த கல்வியாண்டிலேயே தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக பண்ருட்டியைச் சேர்ந்த எம். சேஷாச்சலம், சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை எஸ்.டி. மனோன்மணி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

அவர்கள் இருவர் சார்பிலும் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் சமச்சீர் கல்விச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதன் அடிப்படையிலேயே சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, அமைச்சரவைக் கூட்டம் ஒன்றில் எடுக்கப்படும் ஒரு கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா?

தமிழக அரசின் சமச்சீர் கல்விச் சட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு, ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஒரு கொள்கை முடிவின் மூலம் செல்லாதது ஆக்க முடியுமா?

முந்தைய அரசு எடுக்கும் கொள்கை முடிவை, அடுத்து பொறுப்புக்கு வரும் அரசு மாற்றுவது நல்லதல்ல என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் முந்தைய அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வி முறையை, இப்போது புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசு கொள்கை முடிவு என்ற பெயரில் நிறுத்தி வைக்க முடியுமா என்பவை போன்ற கேள்விகளை நீதிமன்றத்தில் வில்சன் எழுப்பினார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது:

சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. சிறந்த வல்லுனர்களைக் கொண்ட ஆய்வுக் குழு விரிவாக ஆராய்ந்து சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. இது தவிர, ஏற்கெனவே, பெரும் தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் பெரும் தொகையை செலவிடுவது அவசியம்தானா?

இவை பற்றியெல்லாம் அட்வகேட் ஜெனரல் அரசுக்கு தக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

மேலும், ஏற்கெனவே அமலில் உள்ள ஒரு சட்டத்தை, இந்த நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சட்டத்தை அமைச்சரவைக் கூட்டத்தின் கொள்கை முடிவு மூலம் நிறுத்தி வைக்க முடியுமா என்பவை போன்ற கேள்விகள் மனுதாரர்கள் சார்பில் எழுப்பப்பட்டுள்ளன.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தமிழக அரசின் சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

நன்றி தினமணி 27.05.2011

No comments: